அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின் தொகுப்பு நூல்

Views : 146

பதிவு செய்த நாள் 08-Feb-2020

அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின் தொகுப்பு நூல்களை வாங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.அது இன்று நிறை வேறியது.

2009ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வந்தபோதே அதை வாங்குவதற்கு முயற்சி செய்தேன். அப்போது அது அச்சில் இல்லை என்று கூறிவிட்டார்கள். 2019 இல் நான் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்ததும் மீண்டும் அந்த நூல்களை வாங்குவதற்காகச் சென்று விசாரித்தேன். கையிருப்பில் இல்லை இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என்று சொன்னார்கள். பல முறை விசாரித்து ஒருவழியாக இன்றுதான் இந்த நூல்களை வாங்க முடிந்தது.

இரண்டு செட் கேட்டேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒரு செட் மட்டுமே கொடுக்கமுடியும் என்றார்கள். நான்காயிரம் ரூபாய் விலை உள்ள தொகுப்பு 25 சதவீத கழிவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3000/- ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் அவசியம் வைத்திருக்க வேண்டிய தொகுப்பு இது.

இவ்வளவு காலமும் இந்தத் தொகுப்புகளின் டிஜிட்டல் பதிப்பைத்தான் பயன்படுத்தி வந்தேன். டிஜிட்டல் பதிப்பில் தேடுவது எளிது எனினும் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் படிக்கும் அனுபவமே தனிதான். 

1950 இல் முதன் முதலாகப் பதிப்பிக்கப்பட்ட இந்தத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு 7 ஆவது முறையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட அவையில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் ‘குரூப் போட்டோவும்’ அவர்களது கையொப்பங்களும் 

இந்தப் பதிப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு உறுப்பும் எந்த தேதியில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்ற அட்டவணையும் உள்ளது. 

அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு ஆழமான விவாதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதை மட்டுமின்றி அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையின் மேதமையைப் புரிந்துகொள்ளவும் இந்த தொகுப்புகளை அவசியம் படிக்க வேண்டும். 

அரசியலமைப்புச் சட்ட அவையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட அவையின் மூத்த உறுப்பினர் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா 09.12.1946 அன்று கூடிய முதல் கூட்டத்தில் ஆற்றிய தலைமையுரையின் இறுதியில் கவிஞர் இக்பாலின் வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு பைபிளில் உள்ள பின்வரும் வாசகத்தோடு உரையை நிறைவுசெய்திருக்கிறார்: “Where there is no vision the people perish”. இந்த வாசகம் நம் சமகாலத்துக்குத்தான் மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.