இந்தியாவில் சாதிகள் : ஒரு மீள்வாசிப்பு - ரவிக்குமார்

Views : 1283

பதிவு செய்த நாள் 21-Mar-2020

இந்தியாவில் சாதிகள் – ஒரு மீள் வாசிப்பு

ரவிக்குமார்

தோழர்களுக்கு வணக்கம்!

இன்றைய நாள் சாதி ஒழிப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.நூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1916 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி தான் ’இந்தியாவில் சாதிகள்’ என்ற ஆய்வுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மானிடவியல் கருத்தரங்கில் அம்பேத்கர் சமர்ப்பித்தார். அதன் நூற்றாண்டு இன்று ( 09.05.2015) துவங்குகிறது. அதை அடையாளப்படுத்தும் விதமாக இன்று ’இந்தியாவில் சாதிகள்’ என்ற அவரது ஆய்வுரையைப் பற்றிய ஒரு மீள் வாசிப்பிற்கான கூட்டமாக இதை மணற்கேணி ஆய்விதழின் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அம்பேத்கர் தனது இருபத்தைந்து வயதில் அந்த ஆய்வுரையை அளித்தார். அது ஒரு கட்டுரையாக மட்டுமில்லாமல் அவருடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளை ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு கருத்தாக்கமாக மாறியது. 1916 இல் இந்த ஆய்வுரையை நிகழ்த்துகிறார். அதிலிருந்து 16 ஆண்டுகளில் 1932 இல் இந்திய அரசியலில் மிக முக்கியமான நிகழ்வான பூனா ஒப்பந்தம் என்பது அவரால் போடப்படுகிறது. இடைப்பட்ட 16 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கியமான பிரச்சனையாக தலித் மக்களின் பிரச்சனையை மாற்றக்கூடிய ஆற்றல் அம்பேத்கருக்கு இருந்தது.அந்த காலத்தில் இந்திய அளவில் வலுவான அரசியல் சக்தியாக தலித் மக்கள் இருக்கவில்லை. ஒருசில மாநிலங்களில் தலித் மக்கள் அரசியல் கட்சிகளை நடத்திவந்த போதிலும் நாடு தழுவிய பெரிய இயக்கமாக அவர்கள் திரட்டப்படவில்லை. ஆனாலும் தனது அறிவாற்றல் மூலமாக தலித் மக்களின் பிரச்சனையை நாட்டின் முதன்மையான பிரச்சனையாக அவர் மாற்றிக் காட்டினார். அந்த 16 ஆண்டுகளில் அவர் தனது ஆய்வுகளை முடித்து டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.மஹத் சத்தியாகிரகத்தை நடத்தி தலித் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் என்பதை நிரூபித்தார். ’மூக் நாயக்’ ’பஹிஷ்க்ரித் பாரத்’ என்ற இரு பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்தினார். மூன்றாவதாக ஜனதா என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். கொஞ்சகாலம் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியாவில் சாதிகள் எழுதப்பட்ட 1916 க்கும் ’சாதி ஒழிப்பு’ எழுதப்பட்ட 1936 க்கும் இடையிலான 20 ஆண்டுகள் அம்பேத்கர் என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 

இந்தியாவில் சாதிகள் என்ற இந்த ஆய்வுரையை நிகழ்த்தியதற்குப் பிறகு அவரது கவனம் பொருளாதார ஆய்வுகளில் மூழ்கிக் கிடந்தது. அதன்பிறகு ’சாதி ஒழிப்பு’ என்கிற தலைப்பிலான அவரது நிகழ்த்தப்படாத உரை 1936 ஆம் ஆண்டில் நூலாக வெளியிடப்படுகிறது. அந்த உரையின் மூன்றாவது பதிப்பு 1944 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் பதிப்பில் ’இந்தியாவில் சாதிகள்’என்ற தனது ஆய்வுரையை இணைத்து விரிவுபடுத்திப் பதிப்பிக்கவேண்டும் என அம்பேத்கர் விரும்பினார்.ஆனால் அவரது அரசியல் பணிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே பழைய வடிவிலேயே அந்தப் பதிப்பு வெளியானது. அதை வருத்தத்தோடு அம்பேத்கர் அந்த மூன்றாவது பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அதிலிருந்து இந்தியாவில் சாதிகள் என்ற ஆய்வுரையும் சாதி ஒழிப்பு என்ற அவரது புகழ்பெற்ற உரையும் பொருள் அளவில் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.  

அரசமைப்புச் சட்ட அவையில் அவர் பேசியதாக இருந்தாலும் சரி அவர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, சட்ட அமைச்சராக இருந்து அவர் எடுத்த நடவடிக்கைகளானாலும் சரி எல்லாவற்றிலும் அவரை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சனை சாதி பிரச்சனைதான்.அந்தப் பிரச்சனையின் தோற்றம் எதுவென்று பார்த்த ஆய்வுதான் ’இந்தியாவில் சாதிகள்’. இந்த ஆய்வை மானிடவியல் துறையில் அவர் முன்வைத்திருந்தாலும் கூட அந்தத் துறையையும் தாண்டி பல்வேறு தளங்களில் அது பொருத்திப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. தலித் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான அம்பேத்கரின் அரசியல் நடவடிக்கைகளுக்கான தெளிவை இந்த ஆய்வுதான் அவருக்கு வழங்கியது.  

’சாதி ஒழிப்பு’ என்ற அம்பேத்கரின் உரையைப் பற்றி ஏராளமான விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற இந்த ஆய்வுரையைப்பற்றி பெரிய அளவுக்கு விவாதம் எதுவும் நடந்ததில்லை. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்ற அவரது உரை அரசியல் சார்ந்ததாக தீவிரத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் இந்த உரையோ முழுக்க முழுக்க மானிடவியல் துறை சார்ந்த ஆய்வுரையாக இருக்கிறது. அதில் தனது ஆய்வு முடிவுகளாக பின்வரும் கருத்துகளை அம்பேத்கர் தெரிவித்தார்: “1) இந்துக்களுக்குள்ளே பல்வேறுவித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடையே ஆழ்ந்தபண்பாட்டு ஒருமை உள்ளது. 2) பெரியதாக உள்ள பண்பாட்டுப்பகுதிகளின் சிறுசிறு தொகுதிகளே சாதிகள். 3) தொடக்கத்தில் ஒரு சாதியே இருந்தது. 4) பிறரைப் பார்த்துப் "போலச்செய்தல்" மூலமும், ’சாதி விலக்கு’ செய்யப்பட்டதன் மூலமும் வர்க்கங்கள் அல்லது வகுப்புகள் சாதிகளாயின. இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி அடுத்த ஆண்டிலேயே அது மதிப்புவாய்ந்த ஆய்விதழான இண்டியன் ஆன்டிகுரி ( Indian Antiquary, May ,1917 ) என்ற இதழில் வெளியிடப்பட்டது.  

இதைப்பற்றி அதிகம் பேசப்பட்ட ஒரு கருத்து என்னவென்றால் இந்த ஆய்வில் ஓரிடத்தில் “மனு இந்த சாதி அமைப்பை உருவாக்க வில்லை, அவர் அதை உருவாக்கியிருக்கவும் முடியாது.மனுவுக்கு முன்பே இந்தியாவில் சாதி இருந்தது.அவர் அதை உயர்த்திப் பிடித்தார்.அதற்கான தத்துவத்தை உருவாக்கினார்’ என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அதை மட்டும் எடுத்துக்கொண்டு ‘மனுவால் சாதி அமைப்பு உருவாகவில்லை’ என்று அம்பேத்கரே சொல்லியிருக்கிறார் என சில பிராமண படிப்பாளிகள் வாதிடுகிறார்கள். எந்த சாதி முதலில் தன்னைச் சுற்றி அகமணமுறை என்னும் சுவரை உருவாக்கிக்கொண்டது என்ற கேள்வியை எழுப்பி அப்படிச் செய்தது பிராமண சாதிதான், அதைப் பார்த்துதான் பிராமணரல்லாத சாதிகளும் அகமணமுறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தன என்று அம்பேத்கர் இந்த ஆய்வுரையில் கூறியுள்ளார். சாதி விலக்கம் என்பதும் அப்படித்தான் மற்றவர்களால் கடைபிடிக்கப்பட்டது என்பதை அம்பேத்கர் தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சாதி அமைப்பை நிலைநிறுத்தியதில் மனுவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்பதைத் தனது ஆய்வின் மூலமாக அவர் எடுத்துக்காட்டியிருக்கிறார். சாதி என்னும் கொடிய நோயை இந்த சமூகத்தில் புகுத்தியது பிராமணர்கள்தான் என்பதை எந்தவொரு சந்தேகத்துக்கும் இடமின்றி இந்த ஆய்வில் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அம்பேத்கர் இந்த ஆய்வுரையை சமர்ப்பித்தற்குப் பின்னால் அந்தத் துறையில் மிகப்பெரிய மானிடவியல் அறிஞர்கள் ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அயல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். இப்போது இந்தியாவில் சாதிப் பிரச்சனையைப் பற்றி எந்தவொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும், யார் ஆய்வுசெய்தாலும் அவரது பார்வையை வடிவமைக்கக்கூடியதாக இருப்பது மேலைநாட்டு ஆய்வாளர்களின் ஆய்வுகள்தான். ஆனால் அந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் எந்த அளவுக்கு சாதி குறித்த அம்பேத்கருடைய கருத்தாக்கத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள் என்பது முக்கியமான கேள்வி. சாதிப் பிரச்சனை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் பெரும்பாலும் அம்பேத்கருடைய எந்த ஒரு கருத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தது இல்லை. உதாரணமாகச் லூய் துமோனுடைய ‘ஹோமோ ஹயரார்கிகஸ்’ என்ற ஆய்வை சுட்டலாம். லூய் துமோன் அமைப்பியல் மானிடவியலாளராக இடதுசாரி சார்புகொண்டவராக அறியப்படுபவர். அவரது நூல் மானிடவியல் துறை ஆராய்ச்சி மாணவர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நூலாக விளங்குகிறது. அம்பேத்கருடைய மறைவுக்குப் பிறகுதான் துமோன் அதை பிரெஞ்சு மொழியில் எழுதுகிறார். அதற்குப் பிறகு ஆங்கிலத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டது. 1999 இல் மறுபதிப்பு கூட வந்திருக்கிறது. அந்த நூலில் போகிறபோக்கில் ஒரு இடத்தில் மட்டும்தான் அம்பேத்கரைப் பற்றி துமோன் குறிப்பிடுகிறார். ‘அம்பேத்கர் உள்ளிட்ட தீண்டாத மக்களின் தலைவர்கள் சாதிப் பிரச்சினையைக் கையாள்வதில் தோல்வி அடைந்தார்கள்’ என்று காந்தி பற்றிய ஒரு நூலில் இருக்கிற மேற்கோளை எடுத்து துமோன் பயன்படுத்தியிருக்கிறார்.  

லூய் துமோன் அகமண முறை பற்றி தனது நூலில் பேசி இருக்கிறார். ஆனால் அவர் அம்பேத்கர் கூறிய கருத்துகளைத் தனது நூலில் விவாதிக்கவில்லை. எந்தவொரு கருத்தாக்கத்தை அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்து தனது ஆய்வுரையை 1916 இல் முன்வைத்தாரோ அதே பொருளைப்பற்றி ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்கள் தொடர்ந்து அம்பேத்கரைப் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள். துமோன் மட்டுமல்ல சாதி பிரச்சனை குறித்து ஆய்வுகளைச் செய்த ஆந்த்ரே பெதேய் ,எம்.என்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல அறிஞர்களும் அம்பேத்கரின் எழுத்துகளைப் படித்ததற்கான தடயமே அவர்களது நூல்களில் இல்லை.  

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கரைப் பற்றி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.’அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் சமூகத் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டார், இறந்த பிறகு அரசியல் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டார்’ என்றார்.காங்கிரஸ் கட்சியைக் குறை கூறுவதற்காக அவர் இதைத் தெரிவித்தார். அம்பேத்கருக்கு எதிராக அரசியல் தீண்டாமை, சமூகத் தீண்டாமை என்பதைத் தாண்டி அறிவுலகத் தீண்டாமையும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பற்றி ஆய்வு செய்த அத்தனை மேலைநாட்டு அறிஞர்களையும் பீடித்திருக்கிற ஒரு நோயாக ‘அறிவுலகத் தீண்டாமை’ என்பது மாறி இருக்கிறது.தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிற மேலைநாட்டு அறிஞர்களும் கூட இத்தகைய அறிவுலகத் தீண்டாமையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். புறநானூறு பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருபவரும், தமிழ்ச் செவ்வியல் ஆய்வுக்குப் பங்களிப்புச் செய்ததற்காகத் தமிழக அரசால் பாராட்டப்பட்டவருமான ஜார்ஜ் எல்.ஹார்ட் சங்க காலத்தில் சாதி, தீண்டாமை இருந்ததெனத் தொடர்ந்து எழுதிவருகிறார். ஆனால் அவர் அம்பேத்கரையோ தமிழ்ச் சமூகத்தில் சாதியின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்த அயோத்திதாசரின் நூல்களையோ வாசித்ததற்கான தடயமே அவரது எழுத்துகளில் இல்லை. அவர் முன்வைத்து வருகின்ற கருத்து அறிவுலகத் தீண்டாமைக்கு சான்றாக இருக்கிறது. இத்தகைய புறக்கணிப்பை மாற்றுவதற்காகவே இந்த கூட்டத்தை நடத்துகிறோம். 

அகமணமுறை என்பதற்கு இன்றைய சூழலில் என்ன பொருத்தப்பாடு இருக்கிறது? என்று கேட்கப்படலாம். அண்மையிலே ‘நேஷனல் சாம்பிள் சர்வே’ என்ற கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்கும்போது இன்றைக்கும் கலப்பு மணம் என்பது மிகக் குறைவாகவே நடக்கிறது என்று தெரிகிறது. சமூக நீதியைப் பற்றி அதிகம் பேசப்படுகிற தமிழ்நாட்டில் தான் கலப்புமணம் மிகக் குறைவாக நடந்துள்ளது. 2 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இங்கே கலப்பு மணங்கள் நடந்துள்ளன. ஆனால் அருகாமையில் இருக்கிற கேரளாவிலும் ஆந்திராவிலும் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் கலப்பு மணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.  

அகமணமுறைக்கான அழுத்தம் இப்போது வன்முறை வடிவம் எடுத்திருக்கிறது. ஆணவக்கொலையாக வெளிப்படுகிறது. சாதியைத் தாண்டி திருமணம் செய்து கொள்கிறவர்களைக் கொலை செய்வது என்கிற வழக்கம் ஹரியானாவில் ஆரம்பித்தது என்கிறார்கள். அது இப்போது தமிழ்நாட்டில் பரவியிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் 50 பேருக்குமேல் ஆணவக்கொலைக்குப் பலியாகியிருக்கிறார்கள். இந்த அகமண முறையைப் பாதுகாப்பதில் மதவாதிகளைவிட சாதியவாதிகளே இப்போது அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். சாதியை முன்வைத்து அரசியல் செய்கிறவர்கள் அதைத் தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள். ‘கலப்புமணம் செய்துகொண்டால் சாதியை ஒழித்துவிடலாம் என்று சொல்வது தவறு’ என்று அவர்கள் பேசுகிறார்கள். அகமணமுறை என்பதைத் தீவிரமாகக் காப்பாற்றுவதன் மூலம்தான் இந்த சாதி அமைப்பைக் காக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அம்பேத்கர் தனது ஆய்வில் நூறு ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட கருத்து இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. சாதி முறைக்கு அடிப்படை அகமணமுறைதான் என்று அவர் சொல்லியிருப்பது இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த கருத்தாக்கத்தை விவாதிப்பதென்பது அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமல்ல சிந்தனை தளத்திலே இருக்கிறவர்களுக்கும் மிக முக்கியமானதொரு பணியாக மாறியிருக்கிறது.   

மானிடவியல் ஆய்வுகளில் ஈடுபடுகிற ஆராய்ச்சியாளர்களில் எமில் தர்கைமின் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள், லூய் துமோனின் ஆய்வுமுறையைப் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள், க்ளோத் லெவிஸ்த்ராஸின் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத தீவிரத்தோடு நூறு ஆண்டுகளுக்கு முன்பே முன்வைக்கப்பட்ட அம்பேத்கருடைய இந்த ஆய்வு இன்னும்  அவர்களிடையே கவனம் பெறாமலே இருக்கிறது.  

1991 ஆம் ஆண்டு அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் சொற்பொழிவாற்றிய டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் உபேந்திர பக்ஷி ‘இன்னும்கூட அம்பேத்கர் அவர்களை இந்திய அறிவுலகம் கண்டுகொள்ளாமலிருப்பது வெட்கக்கேடானது’ என்று விமர்சித்தார். அப்படி அவர் பேசி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் அந்த நிலை மாறிவிடவில்லை. பொருளாதார அறிஞர் அமர்த்யா சென் ஒரு இடத்தில் பேசும்போது ‘அம்பேத்கர் இந்திய பொருளாதாரத்தின் தந்தை’ எனக் குறிப்பிட்டார். ஆனால் அவரது நூலில் அம்பேத்கரைப் பற்றி விவாதிக்கவில்லை. Annihilation of caste நூலின் புதிய பதிப்பு ஒன்றுக்கு முன்னுரை எழுதியிருக்கும் எழுத்தாளர் அருந்ததி ராய், காந்தி - அம்பேத்கர் விவாதத்தை அதில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இப்படி ஓரிரு விதிவிலக்குகள் தவிர அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய விரிவான ஆய்வு எதுவும் இந்திய அறிவுலகில் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கும் உண்மை. இந்த மௌனத்தை உடைக்க, புறக்கணிப்பை முறியடிக்க மேற்கொள்ளப்படும் ஒரு சிறு முயற்சியே இந்த மீள்வாசிப்புக் கூட்டம்.  தீண்டாமைக் கொடுமைகளை, வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது இத்தகைய அறிவுலகத் தீண்டாமையையும் நாம் எதிர்த்தாகவேண்டும் இல்லாவிட்டால் தலித் மக்களின் பிரச்சனை என்பது வெறுமனே வன்கொடுமைகள் தொடர்பான பிரச்சனைதான், இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைதான் என மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.  

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடத்தில் அம்பேத்கர் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகளின் உள்ளீடாக சமத்துவம் என்பதே இருந்தது. தீண்டாத மக்கள் சமத்துவத்தோடு நடத்தப்படவேண்டும் என்ற அவரது போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் 1932 ஆம் ஆண்டில் பூனா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தீண்டாத மக்கள் ஒரு தரப்பாகவும் மற்றவர்கள் இன்னொரு தரப்பாகவும் இருந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்றால் இந்திய வரலாற்றில் அது பூனா ஒப்பந்தம் தான். அந்த ஒப்பந்தத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட , அந்த நிகழ்வு என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அந்த ஒப்பந்தம் என்பது இந்த நாட்டில் இரண்டு தரப்புகள் இருக்கின்றன என்பதை உலகுக்கு உணர்த்தியது.  

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுகிற நேரத்தில் கூட அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். என்ன மாதிரியான தேர்தல் முறை இந்தியாவுக்குத் தேவை என்பது பற்றிய விவாதம் அரசியலமைப்புச் சட்ட அவையில் வந்தபோது விகிதாச்சார பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சிலர் வாதிட்டனர்.அப்போது அம்பேத்கர் அதை மறுத்தார். ஏனென்றால் சிறுபான்மை என்பதை அது நிரந்தரமாக்குவதோடு மக்களை மேலும் அது துண்டு துண்டாக சிதறடித்து விடும் என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் இன்னொன்றையும் சொன்னார், “1932 இல் பூனா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நேரத்தில் இரண்டு தரப்பினர் அதில் கையொப்பமிட்டுள்ளனர். அதை மாற்ற வேண்டுமென்று சொன்னால் இன்னொரு தரப்பை அழைத்து அவர்களது கருத்தை நீங்கள் கேட்கவேண்டும்” என்று சொன்னார். அதாவது தலித் மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் தேர்தல் முறையில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். 

அம்பேத்கர் உயிரோடு இருந்தவரைக்கும் தொடர்ந்து அவர் சமத்துவம் என்பதைப் பற்றி வலியுறுத்திக்கொண்டிருந்தார். இந்தியாவின் அரசியல் தளங்களில் செயல்பட்டவர்கள் எல்லோரும் அவரது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும்படி ஒரு நிர்ப்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார். அவரது சமகால ஆளுமைகளாக இருந்த அத்தனை பேரும் அவர் கூறியதை ஆதரித்தோ மறுத்தோதான் பேசிக் கொண்டிருந்தனர். காந்தியடிகள் கூட அம்பேத்கரின் பெயரைச் சொல்லாமல் அவர் கூறிய கருத்துகளுக்குப் பதில் அளித்துக் கொண்டுதான் இருந்தார்.  

அரசியல் தளத்தில் அவரது மேதமை எப்படி மதிக்கப்பட்டது அங்கீகரிக்கப்பட்டது என்பதை அரசியல் நிர்ணயசபை விவாதங்களைப் படித்தால் புரிந்துகொள்ளலாம். அவர் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல ஆங்காங்கே உருவான தலித் இயக்கங்கள், தொடர்ந்தும் அவரது அரசியல் முக்கியத்துவத்தைப் பாதுகாத்து வருகின்றன. அதனால்தான் காங்கிரசும் பாஜகவும் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் அம்பேத்கரைப் பற்றிப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நிர்ப்பந்தத்தை தலித் அறிவு ஜீவிகள் அறிவுத் தளத்தில் ஏற்படுத்தத் தவறிவிட்டனர். பெரும்பாலும் படைப்பிலக்கியத் தளத்திலேயே அவர்கள் சுருங்கிப் போயினர். கருத்தியல் ரீதியான விவாதங்களை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள் மார்க்ஸியர்களாகவும் வேறு பல கருத்தியல் சார்பு கொண்டவர்களாகவும் இருந்ததால் அவர்களும் அம்பேத்கரைப் படிக்கவோ அவரது அறிவுக் கொடையைப் புரிந்துகொள்ளவோ முயற்சிக்கவில்லை. இந்த நிலையில் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிறகு சற்றே ஒரு அசைவு ஏற்பட்டது என்றாலும் அது நீடிக்கவில்லை. இனியாவது அது மாறவேண்டும் என்பது என் பேராசை.  

1915 ஆம் ஆண்டு அம்பேத்கர் தனது எம்.ஏ பட்டத்துக்காக பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும் சமூகவியல், தத்துவம், வரலாறு, மானிடவியல் ஆகியவற்றைத் துணைப் பாடங்களாகவும் படித்தார். முதன்மைப் பாடமான பொருளாதாரத்தில் மட்டுமல்ல துணைப் பாடங்களான வரலாறு,தத்துவம்,மானிடவியல்,சமூகவியல் ஆகியவற்றிலும் புறக்கணிக்க முடியாத ஆய்வுகளை அவர் செய்திருக்கிறார். அவை ஒவ்வொன்றையும் எடுத்து விவாதிப்பது இந்திய சமூகம் குறித்த நமது புரிதலை உயர்த்திக்கொள்ள உதவும். அதற்காகவாவது அம்பேத்கரைப் படிக்க முன்வாருங்கள். இந்த ஆய்வுக் கட்டுரையைப் படிப்பதிலிருந்து, விவாதிப்பதிலிருந்து அதைத் தொடங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன், நன்றி வணக்கம்.  

(09.05.2015 அன்று சென்னை திருவான்மியூரில் இருக்கும் பனுவல் அரங்கில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இந்தியாவில் சாதிகள் – ஒரு மீள் வாசிப்பு’ என்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கம். இந்த ஆய்வரங்கில் பேராசிரியர் அ.ராமசாமி, முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்)