அம்பேத்கரும் பாராளுமன்ற ஜனநாயகமும் - ரவிக்குமார்

Views : 983

பதிவு செய்த நாள் 23-Mar-2020

அம்பேத்கரும் பாராளுமன்ற ஜனநாயகமும்

ரவிக்குமார்

பண்டிதர் நேரு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் 125 ஆவது ஆண்டு விழாவை ஒரே மேடையில் கொண்டாடிக்கொண்டிருக்கிற விடியல் அறக்கட்டளையின் பொறுப்பாளர்களுக்கு எனது வணக்கம்! இந்த அறக்கட்டளையின் தலைவர் நீதியரசர் திரு ஜெகதீசன் அவர்களுக்கும் இங்கே பங்கேற்று சிறப்பித்துக்கொண்டிருக்கிற கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும் என்னை இந்த கூட்டத்துக்கு அழைக்கும்படி பரிந்துரைத்த கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கும் எனது நன்றி.

தற்போது இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கிற பாஜக் அம்பேத்கரின் பிறந்தநாளை ஆண்டுமுழுவதும் கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் அதுபோலவே ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறது. இந்த நேரத்தில் அம்பேத்கரின் நூற்ராண்டு 1991 இல் எப்படி கொண்டாடப்பட்டது அதன் தாக்கம் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். அப்போதுதான் இந்தியா முழுவதும் தலித் மக்கள் ஒரு உந்துதலைப் பெற்று தம்மை அரசியல் இயக்கங்களாகத் திரட்டிக்கொண்டனர். ஒரு தலைவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு பல நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அம்பேத்கரின் பிறந்தநாள் வெறும் கொண்டாட்டமாக முடிந்துவிடக்கூடாது.அதிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் கடைபிடிக்கப்படும்போது அவை எப்படி சடங்குகளாக மாறுகின்றன அவை என்னவிதமான மனநிலையைக் கிளர்த்துகின்றன என்பதைப் பற்றி பல சமூக ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சபால்டர்ன் வரலாற்றறிஞர் ரணஜித் குஹாவின் ஆய்வு அதில் முக்கியமானது. நமது தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் அப்படி சடங்குகளாக மாறியிருக்கின்றன. நமது அரசாங்கத்தின் பிரதான பணியே பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது நினைவுநாளைக் கடைபிடிப்பது என்பதாகத்தான் இருக்கிறது.50க்கும் மேற்பட்ட அத்தகைய நிகழ்வுகளை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இதுவொரு அரசாங்கம் செய்யவேண்டிய வேலையா என்று நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன். ஒவ்வொரு சமூகப் பிரிவினரையும் திருப்திபடுத்துவதற்காக அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களைக் கண்டுபிடிக்கவேண்டும்,அங்கீகரிக்கவேண்டும் என்பது எல்லையில்லாமல் நீண்டுகொண்டே போகிறது. அமைச்சர்கள் அந்தந்த நாட்களிலே சிலைகளுக்கு மாலை அணிவிப்பது அல்லது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்வது இதையே தங்களுடைய பெரும் பணியாக செய்துகொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தமட்டில் இதுவொரு அரசாங்கம் செய்யவேண்டிய வேலை அல்ல. உங்களைப் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்கிர நிகழ்வுகள் சடங்காக மாறுவதில்லை. ஆனால் அரசாங்கம் ஏற்பாடு செய்வது சடங்காகத்தான் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்த 125 ஆவது பிறந்த நாளில் நாம் எதனை முதனமைப்படுத்தி சிந்திப்பது,விவாதிப்பது என்று எண்ணிப்பார்க்கிறபோது அவர் பங்களிப்புச் செய்த பல்வேறு துறைகளின் நினைவு எனக்கு வருகிறது.அவர் பொருளாதாரத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்திய ரூபாயின் மதிப்பை ஆராய்ந்து அதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.அவர் சட்டத் துறையில் செய்த பங்களிப்புக்கு நமது அரசியலமைப்புச் சட்டமே சான்றாக இருக்கிறது. அவர் ஆன்மீகத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். பௌத்தத்தை ஆராய்ந்து அவர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் என்ற நூல் அதற்கு சாட்சியமாக உள்ளது. மானிடவியல் துறையில் அவர் பதித்துள்ள முத்திரையை எவரும் புறக்கணிக்கமுடியாது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மானிடவியல் கருத்தரங்கில் அவர் வாசித்தளித்த ’இந்தியாவில் சாதிகள்’ என்ற ஆய்வுரையின் நூற்றாண்டு இது.இப்படி பல பரிமானங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால், நான் ஒரு அம்சத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பாராளுமன்ற ஜனநாயகம் இப்போது மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஜூன் மாதத்தில் நெருக்கடி நிலை காலத்தின் 40 ஆவது ஆண்டை கடைபிடிக்கிற நேரத்தில் மீண்டும் இங்கே ஒரு நெருக்கடி நிலை வருமா? என்ற வாதம் ஊடகங்களிலே எழுந்தது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற எல் கே அத்வானி ’அவசரநிலை காலம் மீண்டும் வராது என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்று சொன்னால் ஜனநாயகத்தை மறுக்கிற, ஜனநாயகத்தின் மீது மதிப்பில்லாத சக்திகள் இன்று வலுவடைந்து வருகின்றன” என்று சொன்னார். ஃபாலி எஸ் நாரிமன் என்ற சட்ட அறிஞரும் அதையே சொன்னார் ”மீண்டும் அவசர நிலை காலம் போன்ற ஒரு சூழல் ஏற்படலாம்” என்று அவரும் எச்சரித்தார். ஏன் இதைச் சொன்னார்கள் என்று ஆராய்ந்து பார்த்தோமேயானால் அவசர நிலைக் காலத்தில் என்ன மாதிரியான சூழல் இருந்ததோ,பாராளுமன்றம் என்கிற அமைப்பினுடைய மதிப்பு என்பது சீர்குலைக்கப்பட்டு, அமைச்சரவை அதிகாரங்களெல்லாம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு, பிரதமர் என்கிற ஒரு புள்ளியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டனவோ அப்படி ஒரு சூழல் இப்போது உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரவர்க்கம் எப்படி அன்று ஒரு கருத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டதோ அதே நிலை இன்றைக்கும் நிலவுவதை நாம் பார்க்கிறோம்.

பாராளுமன்ற நெறிமுறைகள் எல்லாம் மீறப்பட்டு அவசர சட்டங்கள் அதிக அளவில் பிறப்பிக்கப்படுகின்றன. இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு அவசரச் சட்டம் மீண்டும் மீண்டும் மூன்று முறை பிறப்பிக்கப்பட்ட ஒரு நிலையை இன்று நாம் பார்க்கிறோம். பாராளுமன்ற ஜனநாயகம் இப்போது மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. இந்தியாவினுடைய மிகப்பெரிய பெருமையாக சொல்லப்படுகின்ற பாராளுமன்ற ஜனநாயக முறை என்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற நிலையை நாம் பார்க்கிறோம். இந்த நேரத்தில் அம்பேத்கர் அவர்கள் பாராளுமன்ற ஜனநாயக முறையைப் பற்றி சொன்ன சில கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 இந்தியாவினுடைய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, அந்த அவைக்கு அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அரசியலமைப்புச்சட்ட வரைவுக்குழுவின் தலைவராக ஆவதற்கு முன்பு அவர் ஒரு கருத்தைச் சொன்னார்: ’பிவேர் ஆஃப் பார்லியமெண்டரி டெமாக்ரஸி’ என்று அவர் கூறினார். ’பாராளுமன்ற ஜனநாயகத்தின்மீது எச்சரிக்கையாக இருங்கள். பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே மக்களுடைய சமத்துவத்தை உறுதிப்படுத்திவிடாது. அதுவே ஜனநாயகத்தின் உச்சபட்சமான வடிவமல்ல. அதுவே ஜனநாயகத்தின் எல்லை அல்ல’ என்று அம்பேத்கர் எச்சரித்தார்.

 இன்றைக்கு உலகத்தில் பல்வேறு நாடுகளில் –இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்த பாராளுமன்ற ஜனநாயகமுறை எப்படி அகற்றப்பட்டு ஒரு சர்வாதிகார முறை கொண்டு வரப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி, பாராளுமன்ற ஜனநாயக முறையை ஏன் தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகாரத்தை அங்கே கொண்டு வந்தார்கள் என்பதை அம்பேத்கர் விளக்கினார். ’பாராளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அது அந்த முறையை அதி வேகமாக இயங்கச் செய்வதற்குத் தடையாக இருக்கிறது. சட்டத்தை இயற்றுகிற லெஜிஸ்லேச்சர் என்ற அமைப்பு; அதன் பிறகு அதை நிர்வாகம் செய்கிற எக்ஸிகியூட்டிவ் என்ற அமைப்பு; இவை இரண்டையும் மேற்பார்வை செய்ய நீதித்துறை என்ற அமைப்பு - இந்த மூன்று அமைப்புகளும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கும் நிலையில் எந்த ஒரு முடிவையும் எளிதில் எடுக்க முடியாது. நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு, ஆய்வுக்கு உட்படாத எதுவுமே இல்லை என்கிற ஒரு நிலை இன்று ஏற்பட்டு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணை என ஒன்று இருக்கிறது. அதில் சேர்க்கப்பட்ட சட்டங்களை நீதிமன்றம் சீராய்வு செய்யமுடியாது என்றதொரு நிலை முன்பு இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் உச்சநீதிமன்றம் அதையும் மாற்றிவிட்டது. அந்த அட்டவணைக்குள் சேர்க்கப்பட்ட சட்டங்களைக்கூட நீதிமன்றம் சீராய்வு செய்யலாம் எனத் தீர்ப்பளித்துவிட்டது. இப்படியானதொரு நிலையில் எந்தவொரு முடிவையும் எந்தவொரு நடவடிக்கையையும் அவசர கோலத்தில் ஆட்சியாளர்கள் செய்யமுடியாது.

சர்வாதிகாரிகள் இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தைச் சார்ந்திருக்க தேவையில்லை எனக் கருதலாம். நாம் இப்போது உத்தரவு போட்டால் அது உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும் என்று விரும்பலாம். அந்த காரணத்தினாலே பாராளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணித்து ஒரு சர்வாதிகாரஅமைப்பைக் கொண்டுவர ஆசைப்படலாம். அதனால் அவர்கள் அதை விமர்சிக்கலாம். ஆனால் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், அதை மதிப்பவர்கள் - அவர்களே பாராளுமன்ற ஜனநாயகத்தை விமர்சிப்பதைப் பல நாடுகளிலும் பார்க்கிறோம்.இந்தியாவிலும் பார்க்கிறோம். இந்த அமைப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பல பேர் இந்த அரசியலமைப்புச் சட்டம் பற்றி விமர்சித்திருக்கிறார்கள். தேசிய இனங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும், இந்தியாவை கூட்டாட்சியாக, உண்மையிலேயே மாநிலங்களின் ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அதற்கு இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்பதனால் அதை விமர்சிக்கிறார்கள். அதை திருத்தி எழுத வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி பல பேர் பல்வேறு நோக்கங்களுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை, நம்முடைய பாராளுமன்ற ஜனநாயகத்தை விமர்சிக்கிறார்கள்.

இதில் முக்கியமாக நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஜனநாயகத்தின் மீது மரியாதை கொண்டவர்கள் ஏன் அதை விமர்சிக்கிறார்கள் என்று பார்க்கும்போது - பாராளுமன்ற ஜனநாயக முறை சமத்துவத்தை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது, ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு, தன்னுடைய பொருளியல் நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உத்தரவாதம் அளிப்பதாக வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போகிற நேரத்தில், அதனால் பாதிக்கப் படுகிறவர்கள் இந்த பாராளுமன்ற ஜனநாயக அமைப்பை விமர்சிக்கிறார்கள்.இந்த பாராளுமன்ற ஜனநாயக முறை விடுதலை பற்றிய வேட்கையை உருவாக்கியது என்பதை யாரும் மறுக்க முடியாது. சுதந்திரம் பற்றிய விருப்பத்தை அது உருவாக்கியது. ஆனால் சமத்துவத்தை ஒரு தளத்தில் மட்டும்தான் உத்தரவாதப்படுத்தியது.

நம்முடைய பாராளுமன்ற ஜனநாயக முறை வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தளத்தில் மட்டும் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தும் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்பதை அறிமுகப்படுத்தியது.அது அரசியல் தளத்திலே சமத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பொருளாதார தளத்தில் வசதி உள்ளவர்கள் வறுமையில் உழல்பவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு தொடர்கிறது. அங்கெல்லாம் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு நம்முடைய பாராளுமன்ற ஜனநாயகத்தில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. எனவே இது குறைபாடு உடையதாக இருக்கிறது, ஒரு தளத்தில் மட்டும் சமத்துவம் , மற்ற தளங்களில் ஏற்றத்தாழ்வு. இந்த ஏற்றத்தாழ்வுகளால், சமத்துவம் இல்லாத தன்மையினால் பாதிக்கப்படுகின்றவர்கள் இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தை விமர்சிக்கிற நிலையை நாம் பார்க்கிறோம். அப்படியானால் இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தை எப்படி செயல்படுத்துவது? எப்படி சரிப்படுத்துவது என்று கேட்டால் மீதமிருக்கிற தளங்களில் சமத்துவத்தை உறுதிப்படுத்தவேண்டும். எப்படி அரசியல் தளத்தில் ஒரு சமத்துவம் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதேபோல மற்ற தளங்களில் சமத்துவத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தளத்தில்,பொருளாதாரத் தளத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். இல்லையென்றால் அதை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பை நோக்கி மக்கள் மாறிச் செல்வார்கள் என்று அம்பேத்கர் எச்சரித்தார்.

 சுதந்திர இந்தியாவின் வரலாறு என்ன சொல்கிறதென்று பார்த்தால் இந்த அரசியல் தளத்தில் உருவாக்கப்பட்ட சமத்துவத்தை கூட கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்கிற அல்லது ஒழித்துக்கட்டுகிற ஒரு போக்கை தொடர்ந்து ஆட்சியாளர்கள் கடைபிடித்து வருவதை நாம் பார்க்கிறோம். சமூகத் தளத்தில், பொருளாதார தளத்தில் ஏற்றத்தாழ்வை நீக்குவதற்குப் பதிலாக அரசியல் தளத்தில் வழங்கப்பட்ட சமத்துவத்தை அழித்து விடுவது என்கிற ஒரு நிலையை நோக்கி ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்குக் காரணம் என்னவென்பதை அன்றைக்கே அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.’ இங்கே நான் அறிமுகப்படுத்திய ஜனநாயக முறை மேற்கத்திய நாடுகளைப் பார்த்து நகல் செய்யப்பட்டது என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது அப்படி அல்ல. ஏற்கனவே இந்த நாட்டிலே அந்த ஜனநாயக முறை இருந்தது, பாராளுமன்ற ஜனநாயக முறையும் ஏற்கனவே இங்கு இருந்தது’ என்று கூறிய அம்பேத்கர் ’பௌத்த சங்கங்களை அதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டார். புத்தர் மரணமடைந்த செய்தி வருகிறது.அப்போது பௌத்த சங்கம் - பாராளுமன்றம் கூடியிருக்கிறது. புத்தர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வருகிற நேரத்தில் கூட அந்த கூட்டத்தை ஒத்திவைக்கவில்லை. ’கூட்டம் முடிந்து அதற்குப் பிறகு போகலாம்’ என்று அந்த விவாதத்தைத் தொடர்ந்து நடத்தி முடித்து விட்டுத்தான் அங்கு போனதாக வரலாறு கூறுகிறது. இதை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். அதுபோல ’ரகசிய வாக்கெடுப்பு என்கிற முறையையும்கூட இந்திய மரபில் இருந்து தான் நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம்’ என அவர் கூறுகிறார்.

குடவோலை என்ற ஜனநாயக முறை தமிழ்நாட்டில்தான் இருந்தது எனக் கூறி உத்திரமேரூர் கல்வெட்டில் இருக்கிற செய்தியை நாமெல்லாம் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். பத்தாம் நூற்றாண்டில் தான் அது இங்கே இருந்திருக்கிறது .ஆனால் அந்த கல்வெட்டில் குறிப்பிடப்படுகிற முறைகூட ஜனநாயகம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போது வாக்கெடுப்பில் யாரெல்லாம் கலந்து கொள்ள முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சொந்தமாக கால் வேலி நிலமாவது வைத்திருக்கவேண்டும், சொந்த இடத்தில் வீடு கட்டி இருக்க வேண்டும், வேதக் கல்வியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் -அப்படியானவர்கள் மட்டும்தான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியும் என்று அந்த கல்வெட்டில் உத்தரவிட ப்பட்டிருக்கிறது. எனவே ஜனநாயகத்துக்கு அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. ஆனால் அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் சென்று எப்படி பௌத்த சங்கத்தில் வாக்கெடுப்பு முறை இருந்தது என்பதை அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். ’அவர்கள் மரத்தின் கிளையை வாக்கெடுப்புக்குப் பயன்படுத்தினார்கள். புத்த பிக்குகள் அதை ஒரு பெட்டியில் போட்டு அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு இருக்கிற பாராளுமன்ற ஜனநாயக முறையைப் பற்றி என்ன சொல்கிறார்களென்றால் மக்களால், மக்களுக்காக, மக்களே ஆளுகிற முறை இது என்று சொல்வார்கள். மக்கள் இதில் பங்கேற்கிறார்கள் என்று சொன்னாலும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று அவர்கள் கருதுகிறார்கள். அதன் பிறகு நடத்தப்படுகிற ஆட்சி மக்களுடைய ஆட்சியாக இருக்கிறதா? மக்களுக்கான ஆட்சியாக இருக்கிறதா? என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. எனவே அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று பார்த்தால் எந்த மக்கள் வாக்களித்தார்களோ அவர்களுக்காக செயல்படுவதை விட பொருளாதாரத்தில் ஆதிக்கம் உள்ளவர்களுடைய, சமூகத்தில் ஆதிக்கம் உள்ளவர்களுடைய பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள் இந்த நிலை மாற்றப்படாமல் பாராளுமன்ற ஜனநாயக முறையை நாம் வலுப்படுத்த முடியாது என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதற்கு அடிப்படையாக சட்டத்தின் ஆட்சி இங்கே உருவாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

எல்லா நாடுகளிலும் சட்டங்களை இரண்டாகச் சொல்வார்கள்: ஒன்று- தெய்வத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் - அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.அவற்றை தெய்வங்கள்தான் உருவாக்கினவா என்பது வேறு ; இன்னொன்று மதத்தில் இருந்து விலக்கப்பட்ட செக்யூலர் என்று சொல்லப்படுகிற மதச்சார்பற்ற சட்டங்கள். யாக்ஞவல்கியராக இருந்தாலும் மனுவாக இருந்தாலும் அவர்கள் உருவாக்கியதாக சொல்லப்படுகின்ற சட்டங்கள்தான் பல காலமாக பல நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்டன. அந்த காலத்திலும்கூட மதச்சார்பற்ற சட்டத்தை உருவாக்குகிற ஒரு முயற்சி நடந்தது, அர்த்தசாஸ்திரம் அதற்கான உதாரணம் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ’ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது, தொடர்ந்து கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட சட்டங்களே ஆட்சி நடத்தின. இந்தியாவினுடைய பின்னடைவான நிலைக்கு இந்த சட்டங்களை மாற்ற முடியாத சட்டங்களென்று சொல்லப்பட்டதுதான் காரணம். எங்கேயெல்லாம் சட்டங்கள் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் சந்திக்கின்றனவோ அங்கேதான் சட்டத்தின் ஆட்சி இருக்கும். அப்படி மாற்றப்படுகிற சட்டமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அது மதத்தில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். பல மேற்கத்திய நாடுகளில் சட்டம் என்பது மதத்திலிருந்து பிரித்துத் தனியாக உருவாக்கப்பட்டது. மதச்சார்பற்ற சட்டமென்றால் மதத்துக்கு எதிரான சட்டம் என்று பொருளல்ல.மதத்திலிருந்து விடுபட்ட சுதந்திரமான சட்டமும் நீதி பரிபாலனமும் இருந்ததால்தான் அந்த சமூகங்கள் முன்னே முன்னே செல்ல முடிந்தது. இந்தியாவில் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் சட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டன. அதுதான் இந்தியாவினுடைய பின்னடைந்த நிலைக்குக் காரணம்.

இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் அதற்கு அடிப்படையாக இங்கே முழுமையாக எல்லா தளங்களிலும் சட்டத்தின் ஆட்சியை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே சட்டத்தின் ஆட்சி எப்படி இருக்கிறது? பொதுவாக நாம் சட்டம் ஒழுங்கு என்று சொல்லுவோம் , ஆனால் இந்தியாவில் எல்லா சட்டங்களும் சமூகத்திற்கு இயைபாக இல்லை. இங்கே இருக்கிற சட்டங்களை வகைப்படுத்திப் பார்த்தால் பல சட்டங்கள் சமூக ஒழுங்கிற்கு எதிரானவையாகத் தான் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப் படுகிற எல்லாமே சமூகத்துக்கு எதிராக உருவாக்கப்பட்டவைதான். பெண்ணுரிமைக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இங்கே இருக்கிற சமூக ஒழுங்குக்கு எதிரான சட்டங்கள்தான். அதுபோல ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்டங்கள். இங்கே இருக்கிற சமூக ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை மாற்றமுடியாது என்று சமூக ஒழுங்கு கூறுகிறது. ஆனால் அனைவரும் சமமாகப் பார்க்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள், அவர்களுக்கு சுதந்திரம் என்பதோ ஆணுக்கு இணையான மதிப்பு என்பதோ கிடையாது என்று சமூக வெளியில் செல்கிறார்கள். ஆனால் சட்டத்திலோ பாலின வேற்றுமை கூடாது என்னும் சமத்துவமான உரிமை இருக்கிறது. இப்படி சட்டமும் ஒழுங்கும் எதிர் எதிரானவையாக இந்தியாவில் இருக்கின்ற நிலையை நாம் பார்க்கிறோம். சட்டமும் ஒழுங்கும் இயைந்து போகிற நேரத்தில்தான் சட்டத்தின் ஆட்சியை, நீதியின் ஆட்சியை நிலைநாட்ட முடியும். அப்போதுதான் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது வலுப்பட முடியும் அப்போதுதான் அது முழுமையானதாக, அர்த்தம் பொதிந்ததாக மாறும். எனவே பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்யவேண்டுமென்றால் இங்கே சட்டத்தின் ஆட்சி, நீதியின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு சட்டமும் சமூகமும் இயைந்ததாக மாற்றப்பட வேண்டும். இதை எப்படி சாதிப்பது ? சமூக ஒழுங்கிற்கு ஏற்ப சட்டத்தை வளைப்பதல்ல, சட்டத்த்துக்கு ஏற்ப சமூகத்தில் மாற்றம் காண்பது. அதுவே தீர்வு. ஏற்றத்தழ்வற்ற முறையில் சமூக நிலைகளை மாற்றி அமைப்பது, அப்போதுதான் நீதியின் ஆட்சி இங்கே நிலைநாட்டப்படும் . அப்போதுதான் பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும். அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்ற இந்த நேரத்திலே இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை, நீதியின் ஆட்சியை நிலைநாட்டி பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

( 11.07.2015 அன்று சென்னையில் விடியல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய உரை)