பேராசிரியர் க.அன்பழகன் : காலம் எரிக்காத நினைவு

Views : 888

பதிவு செய்த நாள் 25-Mar-2020

 பேராசிரியர் க.அன்பழகன் : காலம் எரிக்காத நினைவு 

- ரவிக்குமார் 


2014 நாடாளுமன்றத் தேர்தலில் நான் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டபோது வாழ்த்து பெறுவதற்காக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் அவர்களை 24.03.2014 அன்று மாலை நானும், எங்கள் தலைவரும் சந்தித்தோம். என்னைப் பார்த்ததும் ‘ மணற்கேணி’ இதழில் உங்கள் கட்டுரையைப் பார்த்தேன்’ என்று எனது கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்டினார். 

‘ நீங்கள் எழுதும் கட்டுரைகள் தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் எழுதும் கட்டுரைகளைவிட உயர்ந்த தரத்தில் இருக்கின்றன’ என்று அவர் சொன்னபோது எனக்குக் கூச்சமாக இருந்தது.


 ‘ நான்காம் வகுப்புப் படித்தபோது எங்கள் ஊரான கொள்ளிடத்தில் பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசியதை முதன்முதலாகக் கேட்டேன்’ என்றேன். மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்தில் நான் இருந்ததை தலைவர் அவர்களும் அவரிடத்தில் நினைவுகூர்ந்தார். 


=================


“ உங்கள் ஆசிரியர் பூவராகம் பிள்ளையின் பேரன் எனது நண்பர். அவர் பெயர் மணிவண்ணன். இப்போது பிபிசி தமிழோசையின் ஆசிரியராக லண்டனில் இருக்கிறார்” என்றேன். “ ஆமாம்! அவர் அபூர்வமான மனிதர். ஒத்தை மாட்டு வண்டியில் பல்கலைக்கழகத்துக்கு வருவார். நெற்றியில் நாமம் இட்டிருப்பார். வைணவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஆனால் இலக்கியத்தில் மிகுந்த புலமை உள்ளவர். அவர் பாடம் நடத்தும்போது கையில் புத்தகம் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். எல்லாவற்றையும் மனப்பாடமாகவே சொல்லுவார். அவர் இலக்கணம் நடத்தும்விதம் அலாதியானது. இலக்கியங்களிலிருந்து பொருத்தமான உதாரணங்களைச் சொல்லி எளிதாகப் புரிய வைப்பார்.”


“ நான் வகுப்பில் அவ்வளவு கவனமாக இருக்கமாட்டேன். நாவலர்தான் படிப்பில் மிகவும் கவனமாக இருப்பார். தேர்வு நேரத்தில் படிப்பதோடு சரி. மற்ற நேரத்தில் அரசியல்தான் எனக்குப் பிடித்தமான துறை. அப்போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாலதண்டாயுதத்தின் செல்வாக்கு அதிகம். அடுத்து காங்கிரஸ்காரர்கள். 1942 ஆம் ஆண்டில் நான்தான் அங்கே முதன்முதலில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசியவன்”


“ நான் சுயமரியாதைக் கருத்துகளைப் பேசியதற்கு அங்கே பலத்த எதிர்ப்பு. ஆனால் நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை. அதற்கு என் தந்தையார்தான் காரணம். அவர் ஐந்து ஏக்கர் நிலத்தை விற்று கதர் கடை நடத்தினார். அதனால் ’கதர்’ கல்யாணசுந்தரம் என்றுதான் அவரை அழைப்பார்கள். பெரியாரோடு சேர்ந்து காங்கிரஸில் இருந்தவர்.”


“ தென்னிந்திய நல உரிமைச் சங்கத்துக்கு செயலாளராக இருந்தவர் என் தந்தை. அவர் கணக்குப் பிள்ளையாகவும் பணிபுரிந்தார். நக்கம்பாடி என்ற கிராமத்தில் இருக்கும்போது ஒருநாள் வரப்பில் அவர் போய்க்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்தவரப்பில் எதிர்ப்பக்கமாக வந்த 18 வயதான பிராமண இளைஞன் அந்தவரப்பில் நின்றுகொண்டு வேலை செய்துகொண்டிருந்த ஆதிதிராவிடப் பென்ணைக் கொச்சையான வார்த்தைகளைச் சொல்லி வரப்பைவிட்டுக் கீழே இறங்குமாறு சொல்லியிருக்கிறான். அதைக் கேட்ட என் தந்தை அந்த இளைஞனை ஓங்கி அறைந்துவிட்டார். அவனுக்கு அதனால் காய்ச்சல் வந்துவிட்டது. அந்த இளைஞனின் தந்தை என் அப்பாவிடம் வந்து தன் மகனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டதைச் சொன்னார். அதைக் கேட்ட என் அப்பா தனக்குத் தெரிந்த வைத்தியரை அனுப்பி அந்த இளைஞனுக்கு மருத்துவம் பார்க்க வைத்தார். அந்த அளவுக்கு சமூக சமத்துவம் குறித்த உறுதி கொண்டவர் என் அப்பா”


“ அப்போதெல்லாம் பிராமணர்கள் முதலியார், பிள்ளைமார்களைக்கூட வாங்க போங்க என்று பேசமாட்டார்கள். ’என்ன ஓய்” ’ எப்படி ஓய் இருக்குறீர்?”என்றுதான் பேசுவார்கள்.அப்படிக் கேட்ட ஒருவரை என் அப்பா அடித்துவிட்டார். அவர் முரட்டு சுபாவம் கொண்டவர்” 


“ அந்த காலத்தில் கொள்கையை முன்வைத்துதான் பேசுவார்கள். எதிர் கருத்து உடையவர்களையும் மதிக்கிற வழக்கம் அன்றைக்கு இருந்தது. மணல்மேட்டில் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் . கார்காத்தப் பிள்ளைமார், வைதீகத்தில் பிடிப்பு கொண்டவர். சுயமரியாதை கருத்துகள் பற்றி என்னிடம் உரையாடுவார். வெறுப்பாகப் பார்க்க மாட்டார். அவருடைய மகன் பேரன் என எல்லோரும் இப்போதும் என்னிடம் அன்பாக இருக்கிறார்கள்” என்று சற்றுநேரம் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார் பேராசிரியர்.


============ 


“ நீங்களென்ன புதுமைப்பித்தன் மரபைச்சேர்ந்த எழுத்தாளரா?” என்று என்னிடம் கேட்டவர், ” நவீன எழுத்து என்று சொல்லி நேரடியாகப் புரிந்துவிடாதபடி சிலர் எழுதுகிறார்கள்” என்றார்.

“ தமிழ் உரைநடையை எளிதாகவும் புதுமையானதாகவும் மாற்றியதில் திராவிட இயக்கத்துக்குப் பெரும்பங்கிருக்கிறது” என்றேன் நான்.


“ அண்ணா, கலைஞர் ரெண்டுபேருக்குத்தான் அதில் பெரும் பங்கு” என்றார். “ அவர்கள் இல்லாவிட்டால் இந்த அளவுக்குத் தமிழ் உரைநடை வளர்ந்திருக்காது” என்று அவர் சொன்னபோது அவர் முகத்தில் பெருமிதம் தெரிந்தது. 


=============== 


எங்கள் பேச்சு வள்ளலாரை நோக்கித் திரும்பியது. “ வடலூர் வள்ளலார் காலத்தில் அவர் சொல்வதைக் கேட்க பெரும் கூட்டம் இருந்தது. ஆன்மிகத்தை மனித நேயத்தோடு கலந்தவர் அவர். ஏழை எளிய மக்களைப் பற்றிக் கவலைப்பட்டவர்” என்று பேராசிரியர் சொன்னபோது அவர் குரலில் மரியாதை இழையோடியது. சுயமரியாதை இயக்கத்தவர் என்றாலும் வள்ளலாரைப் பற்றிய அவரது மதிப்பீடு அவருடைய பரந்த உள்ளத்தை எடுத்துக் காட்டியது.


===============


’உங்களுடைய சொந்த ஊர் எது?’ என்று தலைவர் அவரிடத்தில் கேட்டபோது “ நான் பிறந்தது திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூர். வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை என்று பள்ளிப் படிப்பு. அப்புறம் திருவாரூர். அங்குதான் அதிக காலம் இருந்தோம்.கல்லூரிப் படிப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்.” என்று பேராசிரியர் கூறினார்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஐந்தரை மணிக்கு ஐயா கி.வீரமணி அவர்களை சந்திக்க நேரம் வாங்கியிருந்தோம். அங்கிருந்து அழைப்பு வந்ததால் பேராசிரியரிடம் விடைபெற்றோம்.


=============


92 வயதில் ஒரு வார்த்தைகூடத் தடுமாறாமல் தெளிவான சிந்தனையோடு பேசிய பேராசிரியர் அவர்களைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. திட்டமிட்ட கட்டுப்பாடான வாழ்க்கை, நிறைவான மனம், வெறுப்பு இல்லாத பண்பு, எளிமை – பேராசிரியரின் ஆரோக்கியத்துக்கு இவையெல்லாம் காரணங்கள் என்றபோதிலும் தலைவர் கலைஞரின் நட்புதான் அதன் ஊற்றுக்கண். 


பேராசிரியரின் 90 ஆவது பிறந்த நாளுக்கு திமுக சார்பில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசு வீட்டின் கூடத்தில் இருந்தது. 100 ஆண்டுகள் வாழவேண்டும் என அதில் எழுதியிருந்தது. பேராசிரியர் நிச்சயம் 100 ஆண்டுகள் வாழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் அவர் மீண்டும் பட்ஜெட் உரையை வாசிப்பார் என நம்பினேன்.