சட்டபேரவைத் தேர்தலில் முதன்மையான பிரச்சனையாக குடியுரிமைப் பிரச்சனையே இருக்கும் - ரவிக்குமார் எம்பி

Views : 896

பதிவு செய்த நாள் 20-Feb-2020


சகோதரர்களே வணக்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு இந்தியா முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இப்படியொரு தொடர் போராட்டத்தை இந்த நாடு வேறு எப்போதும் சந்தித்ததில்லை. லட்சோப லட்சம் இஸ்லாமிய பெண்கள் வீதிக்கு வந்துள்ளனர். இந்த போராட்டம் தான் அரசியல் கட்சிகளையும் இந்த களத்தில் இறக்கிவிட்டு உள்ளது. இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி போராடாமல் போயிருந்தால் இந்தப் பிரச்சினையை அரசியல்கட்சிகள் அலட்சியம் செய்திருப்பார்கள். ஏனென்றால் அயோத்தி வழக்குப் பிரச்சனையில்,காஷ்மீர் பிரச்சனையில் அதுதான் நடந்தது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் கூட இன்று தமது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சி ஏ ஏ க்கு எதிராக தற்போது ஆந்திர முதலமைச்சர் பேசுகிறார், மகராஷ்டிர முதலமைச்சர் பேசுகிறார். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது அதை ஆதரித்து வாக்களித்த கட்சி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், சிவசேனா. இப்போது தெலுங்கு தேசம் இதை எதிர்க்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் இதை அவர்கள் எதிர்க்கவில்லை. இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஏஜிபியும், ஐக்கிய ஜனதா தளமும், பிஜு ஜனதா தளமும் தமது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பீகாரிலும், ஒடிசாவிலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றால் பெற்றோர்களின் பிறந்த தேதி பிறந்த இடம் முதலானவிவரங்களைக் கேட்கும் வினாக்கள் அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் பாஜகவை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலைப்பாடு அவர்களாக மேற்கொண்ட ஒன்று அல்ல. ’இப்போதுதான் அவர்கள் இந்த சட்டத்தை பார்த்தார்கள், இப்போதுதான் அவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள், எனவே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று நாம் கருத முடியாது, அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு முதன்மையான காரணம் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தான். இன்று இந்தியாவிலேயே அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமாக இஸ்லாமிய சமூகம் தான் இருக்கிறது. அவர்களால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை அரசியல் கட்சிகளையும் இப்போது பற்றிக் கொண்டிருக்கிறது.

டெல்லி தேர்தல் தோல்வியையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜகவை விமர்சனம் செய்து கருத்துக்களை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினுடைய பத்திரிக்கையான ஆர்கனைசரில்பாஜகவை விமர்சித்து கட்டுரையும் தலையங்கமும் வெளியாகியிருக்கிறது. அதைப் பார்த்த சிலபேர் ஆர்எஸ்எஸ் ஏதோ நடுநிலையாகத் தனது கருத்தை தெரிவிப்பது போல, ஜனநாயக ரீதியாக செயல்படுவதைப் போல, பாஜகவே என்றாலும் விமர்சிக்கத் தயங்காத ஒரு இயக்கம் என்பதைப்போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ்சின் இந்த விமர்சனம் ஜனநாயகத்தின் மீதான அக்கறையில் இருந்து வருவதல்ல, நியாயத்தின் மீதான பற்றிலிருந்து வருவதல்ல. அவர்கள் பாஜகவை துரிதப் படுத்துவதற்காக இந்த விமர்சனங்களைச் செய்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் தனது செயல் திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். அதிலே பாஜக இவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வேகமாக இல்லை என்பதுதான் அவர்களது ஆதங்கம். அவர்களது செயல்திட்டம் வேறு எதுவுமில்லை, இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிப்பது தான்! அதற்கு உகந்த காலம் இதுதான் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் அவர்கள் இடம்பெற்றிருப்பதால் இப்படி கருதுவதாக நாம் நினைத்துவிடக்கூடாது. இதைவிடக் கூடுதலாகக்கூட அவர்கள் வெற்றி பெறலாம். உகந்த காலம் என்று ஏன் இதைச் சொல்கிறேனென்றால் இன்று அரசியலமைப்புச் சட்ட அமைப்புகள் என்று கூறப்படும் எல்லா அமைப்புகளுமே அவர்களது வயம் ஆகிவிட்டன. அவர்களுடைய சார்பாளர்கள் அங்கே ஆதிக்கம் செலுத்துகிற நிலை ஏற்பட்டுள்ளது. அது தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி, ரிசர்வ் வங்கியாக இருந்தாலும் சரி, நிதிஆயோக் ஆக இருந்தாலும் சரி, அல்லது நீதித்துறையே ஆனாலும் சரி இப்போது அவர்களது கருத்தியலின் ஆதிக்கம் எங்கும் பரவியிருக்கிறது. எல்லா இடங்களிலும் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இட ஒதிக்கீடு வழங்க வேண்டுமென்ற கட்டாயம் அரசுக்கு இல்லை என்கின்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்திலிருந்து நாம் கேட்கிறோம். எனவே இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த வாய்ப்பு எங்கே பறிபோய் விடுமோ என்ற அச்சம் அவர்களை அமைதியற்றவர்களாக்குகிறது. அந்த அமைதியின்மையிலிருந்துதான் இந்த விமர்சனம் வருகிறது.

 இன்றைக்கு இந்தியாவின் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழ்கின்ற மாநிலங்களெல்லாம் அவர்களுடைய ஆட்சி நடக்கிறது. உத்தர பிரதேசத்தை அவர்கள் தமது பரிசோதனைக் கூடமாக மாற்றி விட்டார்கள். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் கூட இன்று சட்டரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது, அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவற்றையெல்லாம் நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது. இந்தச் சூழல் தான் அவர்களை ஊக்கம் அடையச் செய்திருக்கிறது. எனவே இந்த நாட்டை எவ்வளவு சீக்கிரம் இந்து ராஷ்டிரமாக அறிவித்துவிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவித்து விட வேண்டும் என்று பதறுகிறார்கள். அதன் வெளிப்பாட்டை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சி ஏ ஏ நிறைவேற்றப்பட்ட போது அடுத்து என்பிஆர் வரும் அடுத்து என் ஆர் சி வரும் என்ற வரிசை நம்முடைய எண்ணத்தில் இருந்தது. அதற்கேற்ப நாம் போராட்ட வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் கட்சிகளும் கூட அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குறுக்கு வழிகளை இப்போது கடைபிடிக்கிறார்கள். ஆதார் அடையாள அட்டை வாங்கியவர்களில் வெளிநாட்டவர் ஊடுருவியுள்ளனர், அவர்களைக் கண்டறிந்து நீக்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி ஹைதராபாத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுக்கு இப்போது ஆதார் வழங்கிய அமைப்பான யுஐடிஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி நோட்டீஸ் அனுப்ப அந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது. இந்த ஆதார் என்ற திட்டமும் இதற்கான அமைப்பும் பாஜகவால் உருவாக்கப்படவில்லை காங்கிரஸ் ஆட்சியால் உருவாக்கப்பட்டவை. அந்த அமைப்பையும் இந்தத் திட்டத்தையும் இப்போது பாஜக தன்வயப்படுத்திக் கொண்டு விட்டது. அந்த சட்டத்தில் ஒரு பிரிவு உள்ளது, சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டை பெற முடியாது என்பதுதான் அந்தப் பிரிவு. சட்டவிரோத குடியேறிகள் இப்போது ஆதார் அட்டையைப் பெற்றிருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம் என்று காரணம் சொல்கிறார்கள்.

சட்டவிரோத குடியேறிகள் என்றால் யார் ? இதை எளிமையாகப் புரிந்து கொள்ள இங்குள்ள உதாரணத்தை உங்களுக்குக் கூறுகிறேன். தமிழ்நாட்டில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்ற ஈழத் தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றுதான் இல்லீகல் மைக்ரண்ட்ஸ் என்றுதான் இந்திய அரசால் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அகதி என்ற பெயர் கூட கிடையாது. ஏனென்றால் அப்படி பெயர் சொல்லி அழைப்பதற்கு அகதிகளுக்கான சட்டமே இந்தியாவில் கிடையாது. அதுமட்டுமல்ல அகதிகளுக்கான ஐநாவின் ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது இல்லை. அகதிகளுக்கான உரிமைகளை மதிக்காத நாடு இந்தியா. எனவே இப்படிப் பிற நாடுகளிலிருந்து வந்திருக்கிறவர்களையெல்லாம் சட்டவிரோதக் குடியேறிகள் என்று தான் இந்திய அரசு அழைக்கிறது. ஈழ அகதி முகாம்களில் இருக்கிற தமிழர்கள் இங்கே எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் கிடையாது. அவர்களால் ஆதார் அட்டை பெற முடியாது, அவர்களால் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாது, அவர்களால் இங்கே ஒரு சொத்தை வாங்க முடியாது, அவர்களால் இங்கே அரசு வேலைக்கு போக முடியாது, அவர்களால் இங்கே வாக்களிக்க முடியாது. அவர்கள் அரசாங்கம் கொடுக்கும் இலவசத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு மனிதர்கள் வாழத் தகுதியற்ற அந்த முகாம்களில் நடைப்பிணங்களாக கிடக்க வேண்டியதுதான். அவர்கள் மட்டுமல்ல அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அப்படியே கிடக்க வேண்டியது தான். இப்போது சுமார் மூன்று தலைமுறைகளாக எந்த ஒரு உரிமையையும் அற்றவர்களாக ஈழத்தமிழ் அகதிகள் இதே தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிடக்கிறார்கள். அந்த மாதிரியான சட்டவிரோதக் குடியேறிகள் என்றுதான் இஸ்லாமியர்களை இப்போது பாஜக அரசு அடையாளப்படுத்தப் பார்க்கிறது. அப்படியான சட்டவிரோதக் குடியேறிகள் ஹைதராபாத்தில் இருக்கிறார்கள் அவர்கள் ஆதார் அட்டையைப் பெற்றுவிட்டார்கள், அதை சோதிக்கப் போகிறோம் என்று தான் இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. என் ஆர் சியில் எதைச் செய்வார்கள் என நினைத்தோமோ அதை இப்போது ஆதார் அடையாள அட்டையைப் பயன்படுத்தி செய்ய முற்படுகிறார்கள். இதைத்தான் ஆர்எஸ்எஸ் எதிர்பார்க்கிறது. இப்படி செய்து இந்தியாவில் இருக்கிற இஸ்லாமியர்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்று ஆக்கிவிட வேண்டும் என்று கருதுகிறது. அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் இல்லாமல் அகதிகளை விடக் கேவலமான நிலைக்கு ஆளாக்கி விட வேண்டும் என்று கருதுகிறது. அவர்களை மட்டுமல்ல கிராமப்புறங்களில் வாழ்கிற கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் இதைப்போலவே குடியுரிமை அற்றவர்களாக, சட்டவிரோதக் குடியேறிகளாக உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஒரு மாபெரும் திட்டம் தான் இப்போது சனாதனிகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உங்களுடைய போராட்டம் நிச்சயமாக இப்போது நமக்கு எதிரிகளாக இருக்கிறவர்களைக் கூட மறுபரிசீலனை செய்ய வைக்கும். நேற்றைய தினம் சென்னையில் சட்டப்பேரவை முற்றுகைக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்த பிறகு நிச்சயம் தமிழக முதல்வர் திரு எடப்பாடி அவர்களுடைய மனதில் ஒரு சலனம் ஏற்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் பல இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் பல்லாயிரக்கணக்கில் தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கி இருப்பதைப் பார்த்த பிறகு நிச்சயமாக ஒரு சலனம் அவர் மனதில் ஏற்பட்டிருக்கும். நியாய உணர்வு அவருடைய மனதில் முகிழ்ப்பதால் ஏற்பட்ட சலனம் அல்ல அது. மாறாக, தேர்தல் கணக்கு உருவாக்கும் சலனம். இன்னும் ஓராண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது இவர்களெல்லாம் வாக்கு கேட்டு வந்தாக வேண்டும். எனவே நிச்சயம் அவர்கள் தமது நிலையை மாற்றிக் கொள்வார்கள். எப்படி இஸ்லாமியர்களுடைய போராட்டம் பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரை மனமாற்றம் கொள்ள வைத்திருக்கிறதோ, ஒடிசாவை ஆளும் நவீன் பட்நாயக்கை மனமாற்றம் கொள்ள வைத்திருக்கிறதோ தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் சந்திரசேகரராவை மனமாற்றம் கொள்ள வைத்திருக்கிறதோ, ஆந்திராவில் ஆட்சி செய்யும் ஜெகன்மோகன் ரெட்டியை மனமாற்றம் கொள்ள வைத்திருக்கிறதோ அப்படி நிச்சயமாக தமிழ்நாட்டு முதலமைச்சரையும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வைக்கும். அந்த வல்லமை இஸ்லாமிய மக்களுக்கு இருக்கிறது. உங்களுடைய தீரமிக்க இந்தப் போராட்டங்களுக்கு இருக்கிறது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் இந்தப் பிரச்சனையின் அடிப்படையில் தான் நடைபெறப் போகிறது. குடியுரிமை பறிப்புக்கு துணை போகிறவர்கள் யார்? இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கிறவர்கள் யார் என்ற கேள்வி தான் அப்பொழுது முதன்மையான கேள்வியாக இருக்கப்போகிறது. அந்த நிலை ஆட்சியாளர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

 நம்முடைய உடனடிப் போராட்டம் வியூகம் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தமிழக அரசு கைவிடச் செய்வதாகத்தான் இருக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில் என்பிஆரை பிரதமர் துவக்கி வைக்க இருக்கிறார். ஏப்ரலுக்கும் செப்டம்பருக்கும் இடையே ஏதேனும் 45 நாட்களில் அந்த திட்டத்தை ஒரு மாநிலத்தில் செயல்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அதற்கான தேதியைக் குறித்திருப்பார்கள். அறிவிக்கவில்லை என்றாலும் ஏற்கனவே திட்டமிட்டிருப்பார்கள். மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம் அதைத் துவக்குவார்கள். அதற்கான தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள். உத்தேசமாக ஜூலை மாதத்தில் ஆகஸ்ட் மாதத்தில் அந்தப் பணிகள் துவக்கப்படலாம். நம்முடைய ஒருங்கிணைந்த போராட்டம் தமிழக அரசு அந்த திட்டத்தை கைவிடச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ’இந்த திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் அதுவரை இதை செயல்படுத்த மாட்டோம்’ என்று தமிழக முதல்வர் அறிவிக்கும் நாள் தொலைவில் இல்லை. அத்தகைய நிலைபட்டை தமிழக அரசு எடுக்கும் வரை போராடுவோம்,வெற்றிபெறுவோம். நன்றி வணக்கம்

( 20.02.2020 அன்று விழுப்புரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆற்றிய உரை )