“ முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

Views : 305

பதிவு செய்த நாள் 19-Mar-2020

“ முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கே உள்ளது “ 


ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் பதில்


நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்கள் தருக.


ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக” என்று ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார்.  


அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி பின்வருமாறு கூறியுள்ளார்: 


“ பொது ஒழுங்கு மற்றும் போலீஸ் ஆகியவை மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருப்பவையாகும். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது ஆகியவை அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் இருக்கின்றன. மத்திய அரசு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கையும் கண்காணித்து வருகிறது. பொது அமைதி மற்றும் சமய நல்லிணக்கம் ஆகியவை குறித்து மாநில அரசுகளுக்கு அவ்வப்போது

உரிய தாக்கீதுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இது தொடர்பாக தேவைப்பட்டால் மாநில அரசுகளுக்கு உதவுவதற்கு மத்திய ஆயுத போலீஸ் படை பிரிவினரை அனுப்பி வருகிறது. 


ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை என்பது இந்திய அரசும் சவுதி அரேபிய அரசும் பேசி முடிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எவ்வளவு ஹஜ் பயணிகளை அனுமதிப்பது என்பதை சவுதி அரேபிய அரசுதான் முடிவு செய்கிறது” என அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார். 


வடகிழக்கு டெல்லி பகுதியில் அண்மையில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதலின்போது அவர்களது வழிபாட்டுத் தலங்களும் சேதப்படுத்தப்பட்டன. அதையொட்டியே இந்த கேள்வி ரவிக்குமார் எம்.பியால் எழுப்பப்பட்டது. வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றால் டெல்லியில் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கத் தவறியது ஏன்? நான்கு நாட்கள் வன்முறை நீடித்தபோதும் ஆயுதப்படை போலிஸை அனுப்பாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. 


அமைச்சர் அளித்துள்ள நழுவலான பதில் சிறுபான்மையினர் மீது இந்த அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே புலப்படுத்துகிறது.