ஆரோவில்லுக்கு விரைவில் தலைவர் நியமனம்

Views : 7

பதிவு செய்த நாள் 20-Jul-2021

நாடாளுமன்றத்தில் இன்று ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் பதில்

மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆரோவில் குறித்து எழுப்பிய வினாவும் அதற்கு அமைச்சர் அளித்த எழுத்துபூர்வ பதிலும் :

1. 2020-21, 2021-22 பட்ஜெட்டில் ஆரோவில் பவுண்டேஷனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

2. ஒதுக்கீடு குறைக்கப்பட்டதன் காரணம் என்ன?

3. ஆரோவில் பவுண்டேஷனை வலுப்படுத்துவதற்கு ந் அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா? அவ்வாறெனில் விவரங்களைத் தருக

4. ஆரோவில் பவுண்டேஷனுக்குத் தலைவரை நியமிப்பதில் தாமதம் ஏன்?

அதற்குக் கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள் எழுத்துபூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:

ஆரோவில் பவுண்டேஷனுக்கு 2020 -21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18.20 கோடி ஆகும். 2021- 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18.20 கோடி ஆகும். கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக பெரும்பாலான திட்டங்கள் அங்கே நடைமுறைப்படுத்தப்பட முடியாத நிலை உள்ளது என்றும், எனவே மூலதன செலவு என்னும் தலைப்பின் ( capital head) கீழ் செலவு இல்லை என்றும், பொது தலைப்பின் கீழ் ( general head) குறைவான செலவே ஆகுமென்றும் ஆரோவில் பவுண்டேஷன் தெரிவித்த காரணத்தால் 2020-21 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ( Revised Estimate ) ஆரோவில் பவுண்டேஷனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 4.58 கோடியாகக் குறைக்கப்பட்டது.

ஆரோவில் பவுண்டேஷனுடைய வளர்ச்சிக்காகக் கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும், நிதி உதவியையும், தொடரும் செலவினங்கள், தொடரா செலவினங்களுக்காக நிதி நல்கைகளையும் வழங்கிவருகிறது. ஆரோவில் பவுண்டேஷன் ஈட்டும் வருமானம் மற்றும் அமைச்சகம் அளிக்கும் நிதி ஆகியவற்றைக் கொண்டு ஆரோவில் பவுண்டேஷனுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான செலவுகள் செய்யப்படுகின்றன.

ஆரோவில் பவுண்டேஷனுக்கு முழுநேர செயலாளரை அண்மையில் கல்வி அமைச்சகம் நியமித்தது. நிர்வாகக் குழுவின் ( governing board) தலைவரை நியமனம் செய்வதற்குத் தகுதியானவரைத் தெரிவுசெய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. “

என அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.