“பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவுசெய்யவில்லை”

Views : 152

பதிவு செய்த நாள் 20-Jul-2021

“பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவுசெய்யவில்லை” நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் விளக்கம்

இன்று (20.07.2021) மாலை 3 மணிக்கு இந்திய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்களும், ரவிக்குமார் எம்.பி அவர்களும் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் பின்வருமாறு தெர்விக்கப்பட்டிருந்தது:

“ இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, பொதுத்துறை வங்கிகள் ஆணை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்திருப்பதாக தாங்கள் குறிப்பிட்டீர்கள். எந்த ஒரு வங்கியையும் தனியார் மயமாக்குவது நாட்டுக்கோ பொருளாதாரத்துக்கோ மக்களுடைய நலனுக்கோ உகந்ததல்ல என்பதால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எமது எதிர்ப்பை நாங்கள் தெரிவித்தோம். பொதுத்துறை வங்கிகளில்தான் பெரும்பாலான பொதுமக்களின் சேமிப்பு பணம் இருக்கிறது. இந்த வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதுதான் அந்த சேமிப்பும் பாதுகாப்பாக இருக்கும். தனியார் வங்கிகள் பெருமளவில் தோல்வியடைந்த காரணத்தினால்தான் அவற்றைத் தேசிய மயமாக்கும் முடிவை முன்பு இந்திய அரசு எடுத்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். தற்போது பொதுத்துறை வங்கிகள் நட்டம் அடைவதற்கு அவற்றில் கடன்வாங்கி உரிய முறையில் கட்டாமல் போன கார்ப்பரேட் நிறுவனங்களே பெரிதும் காரணம். அத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களின் கையிலேயே அந்த வங்கிகளை ஒப்படைப்பது எவ்விதத்திலும் முறையல்ல. அதுமட்டுமல்லாமல் தனியார் வங்கிகளின் செயல்பாடும்கூட அண்மைக்கால அனுபவங்களிலிருந்து பார்த்தால் சிறப்பாக இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுத்துறை வங்கிகளே உதவியாக இருக்கின்றன. அவற்றை மேலும் வலுப்படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இந்தப் பின்னணியில் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் நிதி ஆயோக் தெரிவித்ததாக சில செய்திகள் வெளியாகி வருவதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விழைகிறேன். சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகியவற்றை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்திருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அதிகாரபூர்வமான செய்தி எதுவும் அரசு தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்றாலும் இந்த செய்திகளால் மக்கள் மத்தியில் மிகப்பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இது குறித்து அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஒருவேளை அரசு இந்த வங்கிகளைத் தனியார் மயப்படுத்துவது என முடிவு செய்திருந்தால் அதற்கு எமது எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம். “ இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், “ பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவுசெய்யவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றாலும் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறோம்’ என விளக்கமளித்தார்.