"சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் கமிட்டி அமைக்கும் திட்டம் இல்லை “

Views : 18

பதிவு செய்த நாள் 22-Jul-2021

நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு முக்தார் அப்பாஸ் நக்வி பதில்

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பின்வரும் கேள்விகளை இன்று மக்களவையில் எழுப்பியிருந்தார்:

* சிறுபான்மை மதத்தவரின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து மேற்பார்வை செய்வதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணையம், தேசிய எஸ்சி ஆணையம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், சென்ட்ரல் வகஃப் கவுன்ஸில், மௌலானா ஆசாத் ஃ /2பவுண்டேஷன் ஆகிவற்றின் தலைவர்களையும்; சில நியமன உறுப்பினர்களையும் கொண்ட தேசிய அளவிலான குழு ஒன்றை அமைப்பதற்கு அரசிடம் திட்டம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக; இல்லை என்றால் அதன் காரணங்களைத் தருக.

* ‘தேசிய சிறுபான்மையினர் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் சிறுபான்மையினருக்காக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மற்றும் மாநில அளவிலான அமைப்புகள் ஆகிவற்றின் நோடல் ஏஜென்சியாக மாவட்ட அளவில் செயல்படுவதற்கு அதிகாரிகள் மற்றும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்ட சிறுபான்மையினர் நல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த பரிந்துரையின் தற்போதைய நிலை என்ன?

* அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 30 இல் கூறப்பட்டுள்ளவற்றைச் செயல்படுத்துவதற்காக சட்டம் ஒன்றை இயற்றுவது குறித்து அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக; இல்லை என்றால் அதன் காரணங்களைக் கூறுக என்ற வினாக்களை ரவிக்குமார் எம்.பி முன்வைத்திருந்தார்.

அவற்றுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் பின்வருமாறு கூறியுள்ளார்:

“ சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தற்போது பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறுபான்மையினர் நலனுக்காக குழுவொன்றை அமைக்க வழிவகுத்துள்ளது. தலைமைச் செயலாளர் அதன் தலைவராக இருப்பார். ஒவ்வொரு துறைகளின் தலைவர்களும் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். தன்னார்வ அரசு சாரா அமைப்புகளிலிருந்து மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள், அரசு பொருத்தமானவர்களாகக் கருதும் மூன்று உறுப்பினர்களை அதில் நியமித்துக் கொள்ளலாம். அதுபோலவே மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதே போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினரின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை இந்தக் குழுக்கள் மேற்பார்வை செய்யும். இவைத் தவிர தேசிய அளவில் குழு எதையும் அமைக்க அரசிடம் திட்டமில்லை

2004 ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் ஒன்றை அமைப்பதற்காக சட்டம் ஒன்றை அரசு இயற்றியது. அதன்மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் குறித்த பிரச்சனைகள் கையாளப்படுகின்றன இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற சிறுபான்மையின மக்களின் நீண்டநாள் கோரிக்கையை அரசு ஏற்காதது குறிப்பிடத்தக்கது.