“ மேகேதாத்து அணை பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

Views : 200

பதிவு செய்த நாள் 05-Aug-2021

“ மேகேதாத்து அணை பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

*மார்க்கண்டேயா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை தொடர்பாக கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு, கர்நாடக அரசுகளிடம் கேட்டிருக்கிறோம்”

மேகேதாத்து அணை குறித்து ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் பட்டேல் பதில்:

* கர்நாடக அரசு மேகேதாத்து அணை கட்டுவதைத் தடுப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

* தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை அகற்றும்படி கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடுமா?

அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக”

என இன்று நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்:

இதற்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

“ விரிவான திட்ட அறிக்கை ( DPR) தயாரிப்பதற்காகக் கொள்கை அளவிலான (in principle) அனுமதியைக் கோரி கர்நாடக மாநில அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் (CWC) சாத்தியக்கூறு அறிக்கை( feasibility report) ஒன்றை சமர்ப்பித்தது. மத்திய நீர்வள ஆணையத்தின் ஆய்வுக் குழு 24.10. 2018 ஆம் நாளில் நடந்த கூட்டத்தில் இதுபற்றி ஆராய்ந்து கொள்கை அளவிலான அனுமதியை அளித்தது. ஆனால், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் தனது இறுதித்தீர்ப்பில் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தீர்ப்பாயம் (CWDT) வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதே மேகேதாத்து அணைத் திட்டத்தின் நோக்கம் என சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் அந்தத் தீர்ப்பின் மூலம் அமைக்கப்பட்டிருக்கும் ‘காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்பை (CWMA ) ஏற்றுக்கொள்வது அதற்கு முன்நிபந்தனையாக இருக்கும் “ என்ற நிபந்தனையோடுதான் அந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அது காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்புக்கு அனுப்பப்பட்டது. காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்பின் கூட்டங்களில் விவாதிப்பதற்கான நிரலில் அது சேர்க்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் கூட்டங்களுடைய குறிப்புகளைப் பார்க்கும்போது இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் இந்தப் பிரச்சினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரியவருகிறது.

30 .11 .2019 அன்று தமிழ்நாடு அரசு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956 பிரிவு 3ன் கீழ் புகார் ஒன்றை அளித்தது. அந்த சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் பெண்ணையாறு என்று அழைக்கப்படும் தென்பெண்ணை நதி தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது. பெண்ணையாறின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்குத் தனது எதிர்ப்பையும் தமிழ்நாடு அரசு அதில் தெரிவித்திருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ், ‘மத்திய நீர்வள ஆணையத்’ தலைவரின் தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு ஒன்று 20.1.2020 அன்று அமைக்கப்பட்டது. இரண்டு கூட்டங்கள் அந்தக் குழுவால் நடத்தப்பட்டன. ‘இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று அந்தக் குழு தெரிவித்துவிட்டது. எனவே இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக கூடுதல் விவரங்கள் வேண்டும் என்று 16.3.2020 மற்றும் 8.7.2021 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை”

இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.