‘தமிழ்நாடு அரசு உங்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தரும்! ‘ - ரவிக்குமார்

Views : 276

பதிவு செய்த நாள் 03-Sep-2021

தமிழ்நாட்டில் 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களுக்காகப் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அகதிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும், உங்கள் பிரச்சனைகளைத் தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்ற எனக்கும் நன்றி பாராட்டும் விதமாக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தின் தலைவர் மறுவாழ்வு முகாமின் தலைவருமான ஆண்டன் அவர்களுக்கும், இங்கே வருகை தந்து சிறப்பித்துள்ள திமுக நிர்வாகிகளுக்கும், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதிலும், கொரோனா காலத்தில் உங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் முனைப்போடு செயலாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மலைச்சாமி அவர்களுக்கும், இங்கே எனக்கு சிறப்பான வரவேற்பளித்த உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்!



ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் மக்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டித் தருவதற்காக 108 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு இப்போது ஒதுக்கியிருக்கிறது. உங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி சாலை வசதி கழிப்பிட வசதி அனைத்தும் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுமார் 200 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. உங்களுக்கான பணக்கொடை உயர்த்தப்பட்டிருக்கிறது. பிள்ளைகளின் படிப்புக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. இது முகாம்களில் வாழும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தீர்க்கிற அறிவிப்பாகும்.

15 ஆண்டுகளுக்கு முன்னால் அகதிகளுக்கான பணக்கொடை பெரியவர்களுக்கு 144 ரூபாய் , சிறியவர்களுக்கு 45 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த பணக்கொடை இந்திய அரசால் வழங்கப்பட்டு வந்தது. அப்போது அதில் மாநில அரசுக்கு எந்த ஒரு பங்கும் இல்லை. 2006ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவையில் 2006 மே 27 ஆம் தேதி எனது முதல் உரையை ஆற்றினேன். அப்போது சுமார் ஒரு லட்சம் பேருக்குமேல் முகாம்களிலே இருந்தார்கள். எனது உரையில் ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்சனையை சுட்டிக்காட்டினேன். “இன்றைக்கு நமது மாநிலத்தை, நமது உதவியை, நம்முடைய ஆதரவைத் தேடி அகதிகளாக வருகின்ற ஈழத் தமிழ் மக்கள் சிறப்பு முகாம்கள் என்கின்ற பெயரிலே அமைந்திருக்கின்ற திறந்தவெளி சிறைச் சாலைகளிலே தங்கவைக்கப்படுகின்றார்கள். அந்த முகாம்களுடைய நடைமுறைகள் - நம் இந்திய அரசானது சர்வதேச அளவிலே இருக்கின்ற குறிப்பாக ஐ.நா. சபையினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற அகதிகளைப் பற்றிய ஒப்பந்தத்திலே கையெழுத்திடாத காரணத்தினாலே-பிற நாடுகளிலே அகதிகள் நடத்தப்படுகின்ற விதத்தைப் பின்பற்றாமல் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கின்றது. அதனால், இங்கே உள்ள சிறப்பு முகாம்களின் நடைமுறைகள் மிகமிக மனிதாபிமானமற்ற முறையிலே இருக்கின்றன. அதை சீர்திருத்த வேண்டும். அகதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித் தொகை மிகமிகக் குறைவாக இருக்கின்றது. ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட அந்தத் தொகையை நீங்கள் மறுபரிசீலனைசெய்து அதை உயர்த்தித் தர வேண்டும். நம்முடைய ஆதரவைத் தேடி வருகின்ற அந்த அகதிகளை நாம் மேலும் மனிதாபிமானத்தோடு அணுகி அவர்களை நல்லமுறையில் நடத்திட வேண்டும். அவர்களுடைய சுயமரியாதைக்குக் குந்தகம் வராமல் நாம் அவர்களை நடத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.” என அந்த உரையில் குறிப்பிட்டேன்.


இது இன்று நேற்று நான் அக்கறை செலுத்தும் பிரச்சனையல்ல. 1995 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தஞ்சை மாநகரில் உலகத் தமிழ் மாநாட்டைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். உலகமெங்கும் இருக்கும் தமிழர்களையெல்லாம் அழைத்து தமிழ்மொழியின், தமிழ் இனத்தின் பெருமைகளைப் பேசுவதற்காக அந்த மாநாட்டைக் கூட்டினார். அப்போது ஈழத்திலே யுத்தம் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. அதனால்

பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் இங்கே அகதிகளாக வந்து கொண்டிருந்தார்கள். அப்படி தஞ்சம் தேடி வந்த மக்கள் மிகமோசமான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ராஜீவ்காந்தி அவர்களுடைய படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு எவரும் இங்கே வாழ முடியாத ஒரு நிலை இருந்தது. அவர்களெல்லாம் குற்றவாளிகளாகப் பார்க்கப்பட்டார்கள். அவர்களுடைய குரல்களுக்குக் காது கொடுக்கும் நிலையில் மத்திய அரசோ மாநில அரசோ இல்லை. அங்கேயும் இந்தப் பிரச்சனையை எழுப்பினேன். குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதில் இலங்கை சேர்க்கப்படாததை சுட்டிக்காட்டிக் குரலெழுப்பினேன். இப்போது தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்காக குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளது. நிச்சயம் இதில் ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உக்களுக்காக யாருமில்லை என்று எண்ணவேண்டாம். உங்களுக்காகக் குரல் கொடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. திமுக இருக்கிறது.


உங்களையெல்லாம் அயல் நாட்டு மக்களாகக் கருதாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவுகளாகக் கருதி இந்த அறிவிப்புகளையெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கின்றார். அதே போல் நீங்களும் இதை உங்கள் தாய் நாடாகக் கருதி தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் உங்களது முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம் !

(02.09.2021 அன்று கீழ் புத்துப்பட்டு ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நடத்தப்பட்ட பாராட்டுவிழாவில் ரவிக்குமார் எம்.பி ஆற்றிய ஏற்புரை)