“ தைவான் விவகாரம்: சீனா - அமெரிக்கா மோதல் - நமது பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க வேண்டும்”

Views : 47

பதிவு செய்த நாள் 03-Aug-2022

“ தைவான் விவகாரம்: சீனா - அமெரிக்கா மோதல் - நமது பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க வேண்டும்”

ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்

ரவிக்குமார் அளித்துள்ள ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பதாவது :

“ அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் விஜயத்தின் காரணமாக, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. இதனால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுமோ என்ற பயம் உலகை அச்சுறுத்தி வருகிறது. நமது நாடு குறைக்கடத்திகளுக்கு ( semi conductor) முக்கியமாக தைவானைச் சார்ந்து இருப்பதால், இந்தப் பதற்றம் நமது நாட்டின் பொருளாதார நிலையையும் அச்சுறுத்துகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டும்” என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் மையம் ஒன்றை இந்தியாவில் அமைப்பதற்கு தைவான் நாட்டு நிறுவனங்களோடு இந்திய ஒன்றிய அரசு கடந்த 2022 ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடத்தியது. தைவானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ( Free Trade Agreement ) செய்துகொள்ளவும் முயற்சித்து வந்தது. தைவானைத் தனது அங்கமாகக் கூறிவரும் சீனா, அந்நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தைத் தனது உள் விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதுகிறது. சீன அரசின் பிரச்சார ஊடகமாக குளோபல் டைம்ஸ் “ இந்தியா பகிரங்கமாக ஒரு சீனா ( one China policy ) கொள்கைக்கு எதிராகச் சென்று, தைவான் தீவில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்தால், சீனாவின் பதில் நிச்சயமாக இந்தியாவின் நீண்டகால தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்” என வெளிப்படையாகக் கூறியிருந்தது ( 20.01.2022) கவனிக்கத்தக்கதாகும்.

ஏற்கனவே சீன ராணுவம் நமது நாட்டுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு வெளியேற மறுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் ( LAC ) மேலும் மேலும் படைகளைக் குவித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு தைவான் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்திய அரசின் பிரதிநிதிகளாக பாஜக எம்.பிக்கள் பங்கேற்றதன் பிறகு இந்திய - சீன உறவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சூழலில் தற்போது ஏற்பட்டிருக்கும் சீன - அமெரிக்க மோதல் இந்தியப் பொருளாதாரத்தின்மீதும், இந்திய பாதுகாப்பின்மீதும் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது அவசியமாகும் .