அகல் விளக்கு ஏற்றுவோம்! மண்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்வோம்!

Views : 168

பதிவு செய்த நாள் 01-Nov-2021

விழுப்புரம் மாவட்டத்தில் சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் தீபாவளி நேரத்தில் அகல்விளக்குத் தயாரித்து விற்பனை செய்வதைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அவர்கள் தயாரித்து விற்பதற்காக வைத்திருக்கும் அகல் விளக்குகளை சந்தைப்படுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கின்றனர். அவர்களுடைய துயரத்தைப் போக்கும் விதமாக தீபாவளியின் போது அகல் விளக்குகளை வாங்கி ஊக்கப்படுத்துவோம் என்ற செய்தியை கல்லூரி மாணவர்கள் மூலமாக சமூகத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினேன்.

விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் அவர்களை அணுகி இது பற்றித் தெரிவித்தேன். கல்லூரி மாணவர்களிடையே அகல்விளக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்ற எனது கோரிக்கைக்கு அவர் அனுமதியளித்தார். அதுமட்டுமல்லாமல் கானா பாடல் பாடும் அபிமன்யு என்ற மாணவரை அழைத்து இந்தப் பொருளில் பாடல் ஒன்றை உருவாக்கச் சொன்னார். அந்த மாணவர் 10 நிமிடங்களில் ஒரு பாடலை எழுதிப் பாடினார். அதன்பின்னர் மாணவர்களிடம் இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கினேன். அகல் விளக்கு வாங்கி மண்பாண்டத் தொழிலாளர்களை ஆதரிக்கவேண்டும். இந்தச் செய்தியைப் பொதுமக்களிடம் மாணவர்கள் தங்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும், அந்தத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றேன்.

இந்தப் பிரச்சாரத்துக்கு முழக்கங்களை உருவாக்கச் சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று கல்லூரி முதல்வர் ஆலோசனை தந்தார். அதன் அடிப்படையில் உடனடியாக முழக்கங்களை எழுதுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டோம்.

தேர்ந்தெடுக்கப்படும் 3 மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

ஐந்து மாணவர்கள் ஐந்து மாணவிகள் முழக்கங்களை எழுதினார்கள். 3 பேரைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக பங்கேற்ற அனைவருக்கும் தலா 500 ரூபாய் பரிசாக வழங்கிப் பாராட்டினேன். கானா அபிமன்யுவுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் 1000 அகல் விளக்குகளை வழங்கினேன்.


மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய கல்லூரி முதல்வர் சிவக்குமார், பேராசிரியர்கள் சிவராமன், பிரகாஷ், மகாவிஷ்ணு, அன்பு ஆகியோருக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர்கள் நத்தர்ஷா, ரவிகார்த்திகேயன் ஆகியோருக்கும் நன்றி!

- ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்