சாதியற்ற திராவிடர்களுக்கு இழிவைச் சுட்டும் அடையாளம் நீடிக்கலாமா? - ரவிக்குமார்

Views : 244

பதிவு செய்த நாள் 05-May-2022

அயோத்திதாசப் பண்டிதரை ( 1845-1914) நினைவுகூரும்போது அவர் திராவிடர் என்ற அடையாளத்துக்குக் கொடுத்த கருத்தியல் உள்ளீட்டை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்காக அவர் பல்வேறு தளங்களில் போராடியிருக்கிறார். அரசாங்க ஆவணங்களில் தாம் எப்படி அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது அவர் முன்னெடுத்த போராட்ட நடவடிக்கைகளில் ஒன்று.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது அயோத்திதாசரைப் போல அதனை ஓர் அரசியல் பிரச்சினையாக மாற்றியவர்கள் இந்திய அளவில் வேறு யாரும் கிடையாது.

1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து 1911இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட காலம் வரை சாதியற்ற தொல்குடி மக்களின் தனித்துவமான அடையாளத்தைப் பேண அவர் கடுமையாகப் போராடியிருப்பது கவனத்துக்குரியது.

இந்தியாவில் மக்கள்தொகையைக் கணக்கெடுப்பு செய்யும் நடவடிக்கை தொடங்கியபோது அதனை ஒரு அரசியல் போராட்டத்துக்கான வாய்ப்பாக அயோத்திதாசர் அடையாளம் கண்டார். தொல்குடி மக்களிடம் அரசியல்ரீதியான விழிப்புணர்வை உண்டாக்க, அவர்கள் தம்மை ‘சாதியற்ற திராவிடர்கள்’ என மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிந்துகொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். திராவிடர் என்ற அடையாளத்தைச் சாதியற்ற ஒன்றாகவே அவர் கருதினார்.

1881ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் மக்கள்தொகையைக் கண்டறிந்து இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை அளவிடுவது என்ற அந்தக் கணக்கெடுப்பின்போது சாதிவாரியாகக் கணக்கெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1901இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது ‘உள்ளூர் மக்களின் கருத்துகிணங்க சமூக ரீதியில் வகைப்படுத்துதல்’ என்ற புதியமுறையை ஆங்கில அரசு அறிமுகப்படுத்தியது.

1911ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதுதான் தீண்டாத மக்கள் எவ்வளவு பேர் இந்த நாட்டில் உள்ளனர் என்று தனியே கண்டறிவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்தான் இந்திய அரசியலில் முஸ்லிம்களின் போராட்டம் எழுச்சி பெற்றது. சட்டமன்றங்களில் தங்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் போராடி வந்தனர்(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுதி 5, பக்கம் 229_246) 1909ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசுலாமியர்களின் குழு ஒன்று மார்லி பிரபுவைச் சந்தித்து மனு ஒன்றைத் தந்தது. அதுவரை தீண்டாத மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத சாதி இந்துக்கள் அப்போதுதான் தீண்டாதாரின் மக்கள்தொகையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். தீண்டாத மக்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்வது ஆங்கில ஆட்சியாளர்களும் இசுலாமியர்களும் செய்யும் கூட்டுச்சதி என அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், அந்த எதிர்ப்புகளைத் தாண்டி மக்கள்தொகை கணக்கெடுப்பு முற்றுப் பெற்றது.

1911ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இந்துக்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் பிரித்தறிவதற்குச் சில வினாக்கள் கேட்கப்பட்டன. அதைச் சாதி இந்துக்கள் எதிர்த்தனர். ஆனால் அப்படிக் கேட்கப்பட்டது சரிதான் என அயோத்திதாசர் எழுதினார் (31.11.1910), "பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேற தெய்வமென்று பாடித் திரிகின்றவர்களும்; பறையனைப் பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்வது போல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்ய வேண்டுமென்ற மனுசாஸ்திரம் எழுதி வைத்துக் கொண்டிருப்பவர்களும்" சென்சஸ் கமிஷனர்தான் பிளவுபடுத்தப் பார்க்கிறார் என வீண் கூச்சல் போடுவது ஏனென்று கேட்டார். "இக்குடிமதிப்புக் காலத்தையே குலச் சிறப்பின் காலமெனக் கருதி சீலம் பெற்று இராஜாங்கத்ததார் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும் நற்சீரும் அடைய வேண்டும்" என்று அவர் கூறினார்.

"இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது 'சாதிப்பேதமற்ற திராவிடர்களென' ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்," என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)

சனாதனவாதிகளின் சூழ்ச்சிக்குப் பலியான சிலர் திராவிடர் என்ற அடையாளத்தைத் தமிழர் என்பதற்கு எதிர் நிலையில் நிறுத்த முற்படும் இன்றையச் சூழலில் சாதி பேதமற்ற திராவிடர் என்ற அடையாளம் 1910 ஆம் ஆண்டிலேயே அயோத்திதாசப் பண்டிதரால் முன்வைக்கப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது தலைமையிலான ஆட்சியைத் ‘திராவிட மாடல்’ ஆட்சி எனப் பெருமையோடு குறிப்பிடுவது அயோத்தியாசப் பண்டிதர் சொன்ன சாதியற்ற திராவிடர் என்ற பொருளில்தான் என நம்புகிறேன்.

112 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடக் கருத்தியலுக்கு வலுசேர்த்த அயோத்திதாசப் பண்டிதரின் வழிவந்தோருக்கு இன்னும் பறையன் என இழிவைச் சுட்டும் ‘ன்’விகுதியோடு சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவது சமூகநீதிக்கு உகந்துதானா? என்பதை எண்ணிப்பார்த்து அந்த இழிவு நீக்கத்துக்கு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

( மே 5: அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள்)