டெல்லி நாட்குறிப்பு - 1

Views : 257

பதிவு செய்த நாள் 19-Jul-2022

டெல்லி டிராபிக்கில் தேங்காய் பத்தை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் 11 மணிக்கு சற்று முன்பாகவே தலைவரும் நானும் நாடாளுமன்றத்திற்குச் சென்று விட்டோம். முதலில் வாக்களித்து விட்டு அதன் பிறகு அவைக்குள் செல்லலாம் என்று நினைத்து வாக்களிப்பதற்காகப் போனோம். ஆனால் அங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னதால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்டுப் பிற்பகலில் சென்று வாக்களிக்கலாம் எனத் திரும்பினோம்.

இன்று உடுக்குறியிட்ட வினா ஒன்று தலைவருக்கு வந்திருந்தது. கிரிப்டோகரன்சி பற்றிய அந்த வினாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பதில் அளிப்பதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இன்று ஸீரோ அவரில் பேசுவதற்கும் தலைவருக்கு அனுமதி கிடைத்திருந்தது. கிரிப்டோ கரன்சி தொடர்பாக அவர் எழுப்பியிருந்த வினாவுக்கு நிதி அமைச்சர் அளித்திருந்த பதிலை வாங்கி அதைப்படித்து இருவரும் விவாதித்துக்கொண்டோம். அந்த வினா தொடர்பாக துணைக் கேள்வி ஒன்றுக்கு அனுமதி கோரி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை எழுதித் தயாராக வைத்துக் கொண்டேன். அந்த நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி அவைக்குள் வந்தார். அவரது கட்சிக்காரர்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றார்கள், ஆனால் எதிர்க்கட்சித் தரப்பிலோ எவரும் அவரது வருகையைப் பொருட்படுத்தவில்லை. அவை துவங்கியதும் சத்ருக்கன் சின்கா, சிம்ரஞ்சித் சிங் மன் உள்ளிட்ட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் மரணம் அடைந்த பிற நாடுகளின் தலைவர்கள் 3 பேர், உறுப்பினர்கள் 3 பேர் என 6 பேருக்கான இரங்கல் செய்திகளை சபாநாயகர் வாசித்தார். அது முடிந்ததும் கேள்வி நேரம் ஆரம்பிக்க இருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ‘ சில பிரச்சனைகளை எழுப்புவதற்கு நோட்டீஸ் அளித்திருக்கிறோம். அதற்கு அனுமதி வேண்டும்’ என்று எழுந்து சபாநாயகரை நோக்கிக் கேட்டார்கள். ஆனால் அவர் ‘அதற்கெல்லாம் அனுமதி இல்லை’ என்று மறுத்ததோடு, அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இன்று கேள்வி நேரமும் இல்லை, ஸீரோ அவரும் இல்லை என்ற நிலையில் மிகுந்த ஏமாற்றத்தோடு அவையில் இருந்து தலைவரும் நானும் வெளியேறினோம். சென்ட்ரல் ஹாலுக்குச் சென்ற போது அங்கே மக்களவை உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெறுகிற பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. விடைபெற்றுச் செல்லும் குடியரசுத் தலைவருக்கு அந்த கையொப்பங்கள் அடங்கிய புத்தகத்தின் நகல் ஒன்று அளிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். அதில் தலைவரும் நானும் கையொப்பமிட்டு விட்டுக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக மீண்டும் சென்றோம். அந்த நேரத்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. வாக்களித்து விட்டு நாங்கள் வெளியே வந்தபோது மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் வாக்களிப்பதற்காக உள்ளே வந்து கொண்டிருந்தார்.

பிற்பகலில் திரு சரத் பவார் அவர்களது இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் திருமதி மார்கரெட் ஆல்வா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கும் நிகழ்வு மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திரு சரத் பவார் அவர்களது இல்லத்தில் 17ஆம் தேதி கூட்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருமதி மார்கரெட் ஆல்வா (1942) அவர்களது பெயரை திரு சீதாராம் யெச்சூரி அவர்கள் தான் முன்மொழிந்தார். ஒரு பெண், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர், அமைச்சர்- ஆளுநர் என்ற பல பொறுப்புகளை வசித்தவர், தென் மாநிலங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் - என்று அவருக்கு இருந்த சிறப்புகளை வரிசையாக எடுத்துச் சொல்லி மற்ற தலைவர்களின் கருத்தை திரு யெச்சூரி கேட்டார். எல்லோருமே அதற்கு ஒப்புதல் அளித்தனர். இந்த முடிவில் உடன்பாடு இருக்கிறதா என்று தொலைபேசி செய்து திருமதி ஆல்வாவிடம் கேட்கப்பட்டது. அவர் தனக்கு உடன்பாடு தான் என்றும் தன்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்றும் தெரிவித்தார். முக்கியமான தலைவர்கள் அதற்கு முன்பே பேசி இதை முடிவு செய்து இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக கிறித்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் அத்தகைய வேட்பாளர் அமையவில்லை. ஆனால் விசிக வைத்த வேண்டுகோள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் ஏற்கப்பட்டது எங்களுக்கு மன நிறைவு அளித்தது.

80 வயதான மார்க்கெட் ஆல்வா அவர்கள் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்குத் தகுதியானவர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும். குடியரசுத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குகிற மரபு நீண்ட காலமாக இருந்தது. ஆனால் நல்ல மரபுகளை எல்லாம் அழித்து ஒழிப்பதையே தனது அரசியல் நோக்கமாகக் கொண்டிருக்கிற பாஜக அந்த மரபையும் ஒழித்துக் கட்டிவிட்டது. பாஜகவால் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் மேற்கு வங்காளத்தில் ஆளுநராக இருந்து அவப்பெயருக்கு ஆளானவர். அவர் எப்படி மாநிலங்களவையை நடத்தப் போகிறார் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம். அவரை வேட்பாளராக்கியதற்குப் பதிலாக திரு வெங்கையா நாயுடு அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.

இன்று நான் எழுப்பிய வினா ஒன்றுக்கு எழுத்துபூர்வ பதில் அளிக்கப்பட்டு இருந்தது. ஜிஎஸ்டி தொடர்பான அந்த வினாவுக்கு அளிக்கப்பட்டிருந்த பதில் ஒன்றிய அரசு எந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. மாணவர்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றுக்குக் கூட ஜிஎஸ்டி வரி விதிக்கிற அரசாக இந்த அரசு இருக்கிறது. அதைக் குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் எனக்கு பதில் அளித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல் உள்ளிட்ட சாதனங்களுக்குக் கூட ஏராளமாக வரி விதிக்கப்படுகிறது. அதையும் குறைக்க மாட்டோம் என்று அவர் பதில் அளித்து இருந்தார்.

பல்வேறு பொருட்களுக்கு ஒன்றிய அரசு விதித்திருக்கும் ஜிஎஸ்டி வரி இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்தது. அரிசி உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் மீது புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும். ஏற்கனவே பண வீக்கத்தின் காரணமாக விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது விதிக்கப்படும் அநியாயமான வரி இந்த அரசு ஈவிரக்கமற்ற அரசு என்பதற்கு சான்றாக இருக்கிறது.

இந்த கூட்டத்தொடருக்கு மழைக்கால கூட்டத்தொடர் என்று பெயரிடப்பட்டிருந்தாலும் டெல்லியில் வெயில் வறுத்து எடுத்தது. வெளியில் தலை காட்ட முடியவில்லை, ஒரு மணி நேரம் வெளியில் போய் வந்தாலே அவ்வளவு அயர்ச்சி. சனிக்கிழமை இரவு கடுமையான மழை பெய்தது. ஆனால் அதன் சுவடே இன்று தெரியவில்லை.

டெல்லி வருகிறவர்கள் சாலைகளில் டிராபிக் நிறுத்தங்களில் விற்கும் தேங்காய் பத்தையை கட்டாயம் வாங்கி சுவைத்துப் பார்க்க வேண்டும். நல்ல முற்றிய தேங்காயைப் பத்தைகளாக நறுக்கி, அழகாக ஒரு தட்டில் அடுக்கி வைத்து விற்பார்கள். ஒரு துண்டு 10 ரூபாய் தான். அபாரமான ருசி. தமிழ்நாட்டில் ஏன் இப்படி தேங்காய் பத்தையை விற்பதில்லை ? சென்னை டிராபிக்கில் இதை யாராவது முயற்சி செய்து பார்க்கலாம். டெல்லி தேங்காயையைவிட நம்ம ஊர் தேங்காய் இன்னும் ருசியாக இருக்கும்.

(18.07.2022 திங்கள் கிழமை)