டெல்லி நாட்குறிப்பு - 2

Views : 196

பதிவு செய்த நாள் 20-Jul-2022

இலங்கை சிக்கலில் இந்தியா செய்யவேண்டியவை

புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் காந்தி சிலையின் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தை நடத்தின. திரு ராகுல் காந்தி தலைமையில் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிறு அளவில் விலை உயர்ந்த பட்டாலும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும். இப்போது மக்கள் இதற்கெல்லாம் பழகி விட்டார்களா அல்லது தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத் தகுந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா என்பது புரியவில்லை.

அவை கூடிய பிறகும்கூட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சபாநாயகர் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தொடர்ந்து அலுவல்களை நடத்திக் கொண்டிருந்தார். கேள்வி நேரம் முழுமையாக இன்று நடைபெற்றது.

எஃகுத்துறை அமைச்சர் சிந்தியா அவர்களைப் பார்ப்பதற்கு 11 மணிக்கு நேரம் பெற்றிருந்தோம். சேலம் உருக்காலையில் இருந்து தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளர் ரவிச்சந்திரனும் ஐஎன்யுசியின் செயலாளர் ராமலிங்கமும் வந்திருந்தனர். சேலம் உருக்காலை தொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவோடு தலைவரும் நானும் அமைச்சரை சந்திக்கச் சென்றோம். மனுவை வரிவரியாக வாசித்த சிந்தியா அவர்கள் எந்தெந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உடனடியாகவே எங்களுக்குத் தெரிவித்தார். சேலத்துக்கு வருகை தந்து உருக்காலையைப் பார்வையிட வேண்டும் என்று தலைவர் திருமாவளவன் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டார். ‘நிச்சயம் வருகிறேன் நீங்களும் வாருங்கள். தமிழ்நாட்டில் கடல் உணவு எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று உற்சாகத்தோடு சொன்னார்.

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்கரேட் ஆல்வா அவர்கள் இன்று 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். தலைவரும் நானும் சற்று முன்னதாகவே சென்று செக்ரெட்டரி ஜெனரல் அலுவலகத்தில் காத்திருந்தோம். சற்று நேரத்தில் வேட்பாளரும் அவரோடு எதிர் கட்சி தலைவர்களும் அங்கு வந்தனர். 80 வயதில் கொஞ்சம் கூட அயர்ச்சி இன்றி உற்சாகத்தோடு நடந்து வந்த மார்கெட் ஆல்வா அவர்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

பிரதமர் வீடுகட்டும் திட்டம் குறித்து நான் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் எழுத்துபூர்வமாக விடை அளித்திருந்தார். கட்டுமானத் தொகை உயர்த்தப்படாது என அவர் தெரிவித்திருந்தார்.

பிற்பகலில் மக்களவை மறுநாள் காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. எனக்கு பிற்பகல் 3 மணிக்கு லேபர் கமிட்டி கூட்டம் இருந்தது. இன்று டெக்ஸ்டைல் துறை தொடர்பான ஆய்வு மேற்கொண்டோம். செயற்கை இழை உற்பத்தி தொடர்பாக விரிவான விவாதம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் இலங்கை சிக்கல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 2 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடந்தது. விசிக சார்பில் தலைவரும் நானும் கூட்டத்தில் பங்கேற்றோம். அதில் பின்வரும் கருத்துகளை தலைவர் முன்வைத்தார். அது கடிதமாகவும் அளிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் அளிக்கப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம்:

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு பாத்காப்பு நலன்களையும் பொருளாதார நலன்களையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அந்த நாட்டின் மக்களுடைய நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். விசிக சார்பில் இந்திய அரசின் கவனத்துக்கு பின்வரும் விஷயங்களை முன்வைக்கிறோம்:

1. இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக ஒரு இடைக்கால அரசு அமைப்பதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

2. இடைக்கால அரசில் சிங்களவர்களின் பிரதிநிதிகள், தமிழர் பிரதிநிதிகள், மலையகத்தில் உள்ளவர்களின் பிரதிநிதிகள், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் பங்குபெறுவதை உறுதி செய்யவேண்டும்.

3. ராணுவத்தையும், அடக்குமுறை சட்டங்களையும் பயன்படுத்துவதை இலங்கையின் தற்காலிக அதிபர் கைவிட வலியுறுத்தவேண்டும்.

4. இலங்கை மக்களின் விருப்பம்போல வல்லுநர்கள், அறிவுஜீவிகளைக்கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டுதலில் இடைக்கால அரசு செயல்பட வேண்டும்.

5. அயல்நாடுகளிலிருந்து ராணுவ உதவி பெறுவதை தவிர்க்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

6. இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கு இடைக்கால திட்டம் ஒன்றை தயாரிக்க இந்திய அரசு உதவ வேண்டும்.

6. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்

7. தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கும் போக்கை நிறுத்தவேண்டுமென இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

8. 2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள UNHRC கூட்டத்தில் 2009 இல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்

9. இந்திய அரசு 2009 இல் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உடன்படுமாறு புதிதாக அமையும் அரசை வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்த வேண்டும்

( 19.07.2022 )