“ அரசு கொடுக்கும் வீட்டுமனைப் பட்டா விவரங்களை அரசாணையில் உள்ளவாறு வருவாய்த்துறை ஆவணங்களில் சரியாகப் பதிவு செய்ய வேண்டும் “ - ரவிக்குமார்

Views : 1685

பதிவு செய்த நாள் 06-Nov-2022


மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அமற்றுமுள்ள அனைவருக்கும் வணக்கம் !

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலில் இன்று மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 210 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இங்கே வழங்க இருக்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதேபோல பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதற்கும் இதற்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது விளம்பரத்துக்காக செய்யப்பட்ட நாடகமாக இருந்தது. ஏனென்றால் பல இடங்களில் ஏற்கனவே வழங்கிய பட்டாக்களை ரத்து செய்துவிட்டு அவற்றையே புதிதாக வழங்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் இத்தனை லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம் என்று கணக்கு காட்டினார்களே தவிர, அவற்றை உரிய விதத்தில் ஆவணங்களில் பதிவு செய்யவில்லை. அதனால் பட்டாக்களைப் பெற்றவர்கள் அதை அனுபவிக்க முடியாத நிலை இருந்தது. இப்போது அந்த நிலையை மாற்றி ஒரு முறை பட்டா வழங்கப்பட்டால் அது அவருக்கே உரிமை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வழங்கப்படும் பட்டாக்களுக்கு அவற்றை வேறு யாருக்கும் விற்கக் கூடாது என்கிற நிபந்தனை இருக்கிறது. அந்த நிபந்தனை ஒரே சீராக இல்லாமல் சில இடங்களில் 30 ஆண்டுகள் வரை விற்கக் கூடாது என்றும், சில இடங்களில் 20 ஆண்டுகள் வரை விற்கக் கூடாது என்றும், சில இடங்களில் 10 ஆண்டுகள் வரை விற்கக் கூடாது என்றும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்லாமல் பட்டா பெற்றவர்கள் உடனே வீடு கட்டவில்லையென்றால் அதை ரத்து செய்யலாம் என்ற நிலையும் இருந்தது. இதனால் ஏழை எளிய மக்கள் பண வசதி இல்லாததாலோ அல்லது வழங்கப்பட்ட மனை உடனே வீடு கட்ட உகந்ததாக இல்லாததாலோ ஒன்று இரண்டு ஆண்டுகள் காலியாகப் போட்டிருந்தால் அந்த பட்டாவை ரத்து செய்து வேறு நபர்களுக்கு பட்டா வழங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டப்பட்டு இருக்கிறது. பட்டாவை ரத்துசெய்ய முடியாத நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிபந்தனைகளும் ஒரே சீராக பத்து ஆண்டுகள் வரை அந்த மனைகளை வேறு நபர்களுக்கு விற்க முடியாது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த இடத்தை விற்கலாம் என்று நிபந்தனை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பட்டா கொடுத்ததும் அது தொடர்பான விவரங்களை வருவாய்த்துறை ஆவணங்களில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் தமிழ் நிலம் ஆவணத்திலும் கிராமக் கணக்குகளிலும் அதற்குரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மனைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறலாம் என்பதை அந்த ஆவணங்களிலேயே குறிப்பிட வேண்டும் எனவும் அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனை பட்டா குறித்து அரசாணையில் சொல்லப்பட்டிருக்கும் விபரங்கள் சரியானபடி ஆவணங்களில் பதிவு செய்து இருக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு ஆய்வு மேற்கொண்டு சோதிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே நமது மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த மாவட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்ற இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் குறித்த விவரங்கள் வருவாய்த் துறை ஆவணங்களில் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றனவா எஃப்எம்பி இல் உரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வீட்டு மனை பட்டாக்களை பெறுகிறவர்கள் இது நமக்கு சொந்தம் என்கின்ற உரிமை உணர்வைப் பெற வேண்டும். அரசு வழங்கும் வீடுகளை கூட நமக்குத் தான் சொந்தம் என்று அந்த வீடுகளைப் பெற்றவர்கள் கருதாத நிலை உள்ளது. அரசாங்கம் கொடுக்கிற வீடு அதை அரசாங்கம் தான் பராமரிக்க வேண்டும் என்று கருதுகிற மனநிலை உள்ளது. இதனால் அந்த வீடுகளை சாதாரண முறையில் கூட பராமரிக்காமல் அவை சிதிலம் அடைவதை பல ஊர்களிலும் பார்க்கிறோம். இந்த மனநிலை மாற வேண்டும். அரசாங்கம் வீட்டுமனை பட்டாவையோ அல்லது வீட்டையோ நமக்குக் கொடுத்தால் அது நமக்குத்தான் உரிமை என்கிற உணர்வை நாம் பெற வேண்டும். அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு நாம் முன்வர வேண்டும். இந்த வீட்டுமனை பட்டாக்களை மற்றவர்களுக்கு விற்கவோ அல்லது பயன்படுத்தாமல் போட்டு விடவோ கூடாது. நிலத்தின் மதிப்பு இப்போது எத்தனை லட்சம் என்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த நிலையில் நம்மால் ஒரு வீட்டு மனையைப் பணம் கொடுத்து வாங்குவது என்பது இயலாது. அரசாங்கம் அளிக்கிற இந்த வீட்டுமனைகளை உரிய முறையில் பயன்படுத்தி அதில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வீடுகளைக் கட்டுவதற்கு நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பயனாளிகளை கேட்டுக் கொள்கிறேன். இதுவொரு சிறப்பான நிகழ்ச்சி, தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வீட்டுமனைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்கு ஆணையிட்டிருக்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உங்கள் சார்பிலே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! வணக்கம்

( மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் 05.11.2022 அன்று நடைபெற்ற வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்வில் ஆற்றிய உரை )