‘ சோஷியல் மீடியா’ தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிறதா? - ரவிக்குமார்

Views : 121

பதிவு செய்த நாள் 17-Nov-2022


“ சோஷியல் மீடியா கம்பெனிகள் நினைத்தால் எந்த ஒரு கட்சியையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்துவிட முடியும்” என்று திரு ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

அமெரிக்கத் தேர்தலில் ஃபேஸ்புக் தனது ‘அல்கரிதம்’ மூலம் ஒரு சார்பாகக் கருத்துருவாக்கம் செய்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் இது தொடர்பாக தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. 

இந்தியத் தேர்தல்களிலும்கூட அதேபோன்று ஃபேஸ்புக் தலையிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. 2019 தேர்தலுக்கு முன்பு பாஜக ஆதரவாளர்கள் வெறுப்புப் பிரச்சாரம் செய்ய தடையின்றி ஃபேஸ்புக் அனுமதித்தது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு ( JPC) விசாரணை வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.தற்போது வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கின் உடைமை ஆகிவிட்டது.சங்கிகளின் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு அவைதான் முதன்மையான கருவிகளாக உள்ளன. 

ட்விட்டரில் தன்னைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கைத் திடீரென்று நின்றுபோனது எப்படி ? என்ற நியாயமான கேள்வியை ராகுல் எழுப்பியிருக்கிறார். ஒரு புகைப்படத்தை அரசாங்க அமைப்புகள் பகிரும்போது அதை அனுமதிக்கும் ட்விட்டர் அதே படத்தைத் தான் பகிரும்போது தடை செய்தது ஏன்? என்றும் அவர் கேட்டிருக்கிறார். 

மைய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் சோஷியல் மீடியாவைத்தான் எதிர்க்கட்சிகள் நம்பியிருக்க வேண்டிய நிலை. அந்த சோஷியல் மீடியா கம்பெனிகளும் ஆளும் கட்சிக்கு சார்பாக நடந்துகொள்ளும்போது திரு ராகுல் காந்தியின் கணிப்பு சரியென்றே தோன்றுகிறது. 

ராகுல் காந்தியின் கவலை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றுதான். ஆனால், சோஷியல் மீடியா செல்வாக்கையும் தாண்டி மக்கள் ஆதரவைத் திரட்ட முடியும். அதற்கு வேர்க்கால் மட்டத்தில் பணியாற்றவேண்டும். 

‘சங்கிகளைத் தோற்கடிக்க முடியும்’ என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடம் ஏற்படுத்துவதுதான் இன்றைய தேவை. ராகுல் காந்தியின் நடைபயணமும் அதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அது நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மக்களிடம் மெது மெதுவாகக் கூடிவரும் நம்பிக்கையில் சிறு சேதத்தையும் நாம் ஏற்படுத்திவிடக்கூடாது. திரு ராகுல் காந்தி அவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.