நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும் ஆ.இராசா அவர்களின் பாராட்டத்தக்க குறுக்கீடு - ரவிக்குமார்

Views : 935

பதிவு செய்த நாள் 20-Mar-2023

நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்

(ஆ.இராசா அவர்களின் பாராட்டத்தக்க குறுக்கீடு)

- ரவிக்குமார்

இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது இயலாமையை மறைப்பதற்கு எதற்கெடுத்தாலும் நேருவின் மீது பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்தியாவில் நிலவும் சீர்கேடுகள் அனைத்துக்கும் நேருவே பொறுப்பு. அப்படித்தான் 2019 இல் காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டம் இயற்றிய போது அவர்கள் நேருவை வசைபாடினார்கள்.

பொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே நம்பி ஆட்சி செய்யும் இவர்கள் நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் இடையில் மோதல் இருந்தது போல் காட்டுவது ; நேருவுக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் இடையில் பிளவு இருந்தது போல் காட்டுவது என்பதைத் திட்டமிட்டே செய்து வருகிறார்கள். ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் இவர்களுடைய திரிபு வேலைகளை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அத்தகைய திரிபு வாத சனாதன அரசியலுக்கு அறிவுபூர்வமான எதிர்வினைகளை ஆற்றும் தலைவர்களில் ஒருவரான மேனாள் அமைச்சர் ஆ.இராசா, பாஜகவினர் ஜவஹர்லால் நேருவை வசை பாடுவதைப் பற்றி கடந்த 27.05.2020 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் விரிவாக ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்த கட்டுரையின் முழு வடிவத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டு சிறு நூல்களாக இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

இந்தச் சிறு நூல் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுப்பதற்கான உறுப்பு 370 உருவாக்கப்பட்ட பின்னணியையும் ; அப்போது ஜவஹர்லால் நேரு மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வல்லபாய் படேல் இருந்தார் என்பதையும் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிறது. காங்கிரஸுக்குள் இருந்த புருஷோத்தம தாஸ் டான்டன் போன்ற சனாதனிகளை எதிர்த்து எப்படி நேரு போராடினார் என்பதையும் இதில் ஆ.இராசா பதிவு செய்திருக்கிறார். சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் கூறிய காரணங்களில் இந்து சட்ட மசோதா நிறைவேற்றப்படாததும் ஒன்று என்பதை எடுத்துக் காட்டியிருக்கும் ஆ.இராசா அவர்கள், அதே நேரத்தில் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு எப்படி அதே சட்ட மசோதாவைப் பகுதி பகுதியாகப் பிரித்து நிறைவேற்றினார் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சனாதனவாதிகள் நேருவை மட்டுமல்ல அம்பேத்கரையும் கூட இப்படித்தான் திரித்து மக்களிடம் சித்திரிக்கிறார்கள். காஷ்மீருக்கான தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நேரத்தில் மாநிலங்களவைத் தலைவராக இருந்த அன்றைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் அம்பேத்கர் கூறியதாக ஒரு கருத்தைத் தான் ஆங்கில நாளேடு ஒன்றில் எழுதிய கட்டுரையில் மேற்கோள் காட்டியிருந்தார். காஷ்மீரின் மகத்தான தலைவரான ஷேக் அப்துல்லாவைப் பார்த்து “ உங்கள் எல்லைகளை இந்தியா காப்பாற்ற வேண்டும், உங்களுக்கு சாலைகள் போட வேண்டும் , உணவு தானியங்களைக் கொடுக்க வேண்டும் , இந்தியாவைப் போல உங்களுக்கு சம உரிமைகள் வேண்டும். ஆனால் , இந்திய குடிமக்கள் காஷ்மீரில் எவ்வித உரிமையும் பெற்று விடக்கூடாது என்கிறீர்கள். இதற்கு நான் ஒப்புக்கொள்ள முடியாது. சட்ட அமைச்சராக ஒருபோதும் நான் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டேன். எனது நாட்டின் நலனுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் “ என்று அம்பேத்கர் பேசியதாக வெங்கையா நாயுடு அந்த கட்டுரையில் எழுதியிருந்தார். ஆனால் அம்பேத்கரின் எழுத்துக்களிலோ பேச்சுகளிலோ இந்த மேற்கோள் எங்குமே இல்லை. இந்த பொய்க் கருத்து பால்ராஜ் மாதோக் என்ற ஆர்எஸ்எஸ் காரரால் பதிவு செய்யப்பட்டதாகும். அதையே உண்மை எனக் கருதி வெங்கையா நாயுடு தனது கட்டுரையில் அதை மேற்கோளாகப் பயன்படுத்தி இருக்கிறார். வெங்கைய நாயுடு மேற்கோள் காட்டிய அதே பொய்க் கருத்தை ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் மெக்வாலும் மேற்கோள்காட்டி இன்னொரு ஆங்கில நாளேட்டில் கட்டுரையை எழுதினார். சனாதனவாதிகளிலேயே மிகவும் சாத்வீகமானவர் என்று கருதப்படும் வெங்கைய நாயுடுவே இப்படியான பொய் புரட்டுகளை பரப்புகிறார் என்றால் மற்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

‘காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காத காரணத்தினால்தான் பாதுகாப்புக்கான செலவு அதிகரிக்கிறது எனவே அந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்வு காண வேண்டும் ‘ என்று கூறியவர் அம்பேத்கர். அது மட்டுமின்றி காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண்பதற்குஅங்குள்ள மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு ( plebiscite) நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை விட்டு விலகிய பிறகு 1952 ஆம் ஆண்டு நடைபெற இருந்த பொதுத் தேர்தலுக்குஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன் ( SCF) சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் காஷ்மீர் பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். ‘ காஷ்மீர் பிரச்சினையைக் குறித்து காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வரும் நிலைப்பாடு எங்களுக்கு உடன்பாடானது அல்ல. இந்த நிலைபாடு இரண்டு நாடுகளுக்கு இடையில் பகைமையை வளர்க்கக்கூடியதாக உள்ளது. இது தொடர்ந்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிச்சயம் ஒரு நாள் போர் மூளும்.இந்த இரண்டு நாடுகளும் நட்பு நாடுகளாக இருப்பது தான் மக்களுக்கு நல்லது. அந்த நிலை உருவாக வேண்டும் என்றால் பாகிஸ்தான் பிரிவினை குறித்தோ , அதை ரத்து செய்வோம் மீண்டும் பாகிஸ்தானை இந்தியாவோடு இணைப்போம் என்றோ இங்கு இருப்பவர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும். இரண்டு நாடுகளும் தனித்தனி நாடுகள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். காஷ்மீரில் இந்துக்களும் பௌத்தர்களும் பெரும்பான்மையினராக வாழும் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை இந்தியாவோடு இணைக்க வேண்டும். அதுபோல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விரும்பினால் அது பாகிஸ்தானோடு இணைவதற்கு விட்டுவிட வேண்டும் ‘ என அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

பாகிஸ்தான் பிரிவினை குறித்து மிக விரிவான நூல் ஒன்றை அம்பேத்கர் எழுதிய வெளியிட்டு இருக்கிறார்.அதையும்கூட இப்படித்தான் சனாதனவாதிகள் திரித்து ப் பிரச்சாரம் செய்கிறார்கள். அண்மையில் கூட தமிழ்நாடு ஆளுநர் ரவி, அம்பேத்கரின் அந்த நூலைக் குறித்துப் பேசியிருந்தார்.

பாகிஸ்தான் பற்றிய அம்பேத்கரின் புத்தகத்தைத் தாம் படித்திருப்பதாகக் கூறியிருந்தார். அவர் அந்த நூலைப் படித்தது உண்மையென்றால் அதன் 5ஆவது அத்தியாயத்தில், அம்பேத்கர் எழுதியிருக்கும் பின்வரும் வாக்கியங்கள் அவருக்கு நினைவிருக்கிறதா?

அம்பேத்கர் அதில் பின்வருமாறு கூறியிருக்கிறார்: “ இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையாகிவிடுமானால் அது இந்த நாட்டிற்குப் பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்துக்கள் என்ன விளக்கம் சொன்னாலும், இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல்தான். எனவே அது ஜனநாயகத்துடன் பொருந்திப்போகாது. இந்து ராஜ்யம் அமைவது எப்பாடு பட்டாவது தடுக்கப்பட வேண்டும்.”

இதை மேதகு தமிழ்நாடு ஆளுநர் ரவியும், அவரது சனாதனக் கூட்டாளிகளும் ஏற்றுக்கொள்வார்களா?

==

சனாதனிகளின் பொய்ப் பிரச்சாரத்தை அவ்வப்போது முறியடிக்க நாம் விழிப்போடு இருக்கவேண்டும். அத்தகைய விழிப்புணர்வின் வெளிப்பாடே இந்தச் சிறுநூல். சனாதனிகளின் சூழ்ச்சியால் மக்களின் மனதில் தைத்திருக்கும் ‘நேரு வெறுப்பு’ என்னும் முள்ளை எடுப்பதற்கான ‘ முள் வாங்கியாக’ இந்த நூல் திகழ்கிறது.

இதை சிறப்பாக எழுதி வெளியிட்டுள்ள திரு ஆ.இராசா அவர்களுக்கு என் பாராட்டுகள்.