நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களோடு சந்திப்பு

Views : 918

பதிவு செய்த நாள் 02-Jul-2022

நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் அவர்களிடம் 02.07.2019 அன்று அளித்த மனுவில் விழுப்புரம் எம்.பி திரு ரவிக்குமார் முன்வைத்துள்ள கோரிக்கைகள்:

1.கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற் சாலைகளுக்கு உதவித்தொகை வழங்குதல் உட்பட சிறப்புத் திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்குமாறு வேண்டுகிறேன்.

2.விவசாயிகள் துயரத்தில் தவிக்கின்றனர்.பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

3.வருமான வரி விலக்குக்கான வரம்பை ரூபாய் பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

4.குறிப்பிட்ட காலத்திற்குள் குடிசை வீடுகளை நிரந்த வீடுகளாக மாற்றும் மாபெரும் திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

5.தலித் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான சிறப்புப் பள்ளிகளை நாடு முழுவதும் தொடங்குவதற்கு 2008 ஆம் ஆண்டு திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையிலான அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது. ஆனால் முந்தைய அரசுகள் அதை செயல்படுத்தவில்லை. அந்தத் திட்டத்துக்கான அறிவிப்பை தங்களது முதல் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.

6. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின்வேண்டுகோளுக்கிணங்க ‘Post Matric Scholarship’ திட்டம் தொடங்கப்பட்டது.எவ்வளவு எண்ணிக்கையில் தலித் மாணவ மாணவியர் பயின்றாலும் அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை வழங்கும் திறந்த நிலைத்திட்டம் அது. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் 11000 கோடி ரூபாய் அளவிற்கு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை உள்ளது. இது தலித் மாணவர்களுக்கு சாதகமற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உதவித்தொகை மறுக்கப்பட்ட பல தலித் மாணவர்கள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தியுள்ளனர். ‘Post Matric Scholarship’ திட்டத்துக்குப் போதிய நிதியை ஒதுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

7. 2018-19 மத்திய பட்ஜெட்டில் பட்டியலினத்தவர் துணைத்திட்டத்துக்கு ( Scheduled Caste Sub Plan - SCSP ) 1,11,780.33 கோடி குறைவாகவும் பழங்குடியினத்தவர் துணைத்திட்டத்துக்கு ( Tribal Sub Plan - TSP) 48108.04 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கப்பட்டது. பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

8.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோருகிறேன்.

9. 'Smart City' திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

 10.தமிழ்நாடு ஒரு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். ஆற்று நீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம். அதை சமாளிக்க கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் தான் உடனடித் தீர்வாகும்.விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளைத் தொடங்கத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

11.வறட்சி, வெள்ளம், புயல் முதலான பேரிடர்களை சந்திப்பதற்கு போதிய நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

12.நம் நாட்டில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவ ‘அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டம்’ போன்றதொரு திட்டத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

13. விழுப்புரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக நகைத் தொழிலாளர்கள் பூங்கா ஒன்றை விழுப்புரத்தில் அமைத்திட வேண்டுகிறேன்

14. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கும், வேலையில்லாத இளைஞர்களுக்கும் பயனளிக்கும் விதமாக வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

15. தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் தேவையான தடுப்பணைகளைக் கட்டிடவும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் இருக்கும் நந்தன் கால்வாய் திட்டத்தை உயிர்ப்பித்து நிறைவேற்றிடவும் நிதி ஒதுக்குமாறு வேண்டுகிறேன்.

16. முதலாம் உலகப் போர் நேரத்தில் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடு பாதையை சீரமைத்து உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் ஒன்றை உருவாக்கிட வேண்டுகிறேன்.

17. தேசிய நெடுஞ்சாலை 45 இல் விழுப்புரத்துக்கு உட்பட்ட எலிசத்திரம், அரசூர், ஜானகி புரம், முண்டியம்பாக்கம், அய்யம்பாளையம், முத்தம் பாளையம் ஆகிய இடங்களில் மேம்பாலமோ சுரங்கப்பாதையோ அமைத்திட நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

18. விழுப்புரத்தில் மாநிலப் பல்கலைக்கழகம் ஏதுமில்லை. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வேளாண்மையை நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக விழுப்புரத்தில் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவிடுமாறு வேண்டுகிறேன்.

19. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போல - பத்து ஆண்டுகளுக்கு 100 சதவீத எக்ஸைஸ் வரி விலக்கு; தளவாட சாதனங்களுக்கு 15 சதவீத மானியம்; 5 ஆண்டுகள் வரை நூறு சதவீத வருமான வரி விலக்கு - ஆகியவை கொண்ட சிறப்புத் திட்டம் ஒன்றை விழுப்புரம் மாவட்டத்திற்கு அறிவித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.