பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதில்

Views : 73

பதிவு செய்த நாள் 10-Dec-2023

பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை

ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதில்

(அ) பாலஸ்தீனம் தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக;

(ஆ) தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த அரசாங்கத்தின் நிலைபாடு என்ன?

என்ற வினாக்களை இன்று நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பினார். அதற்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு முரளிதரன் பின்வரும் பதிலை அளித்துள்ளார்:

“ பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் கொள்கை நீண்டகாலமாக நிலையாகவே உள்ளது. இந்தியா எப்பொழுதும் பேச்சுவார்த்தை அடிப்படையில் இரு நாடுகள் உருவாக்கப்படவேண்டும் என்ற தீர்வையே ஆதரித்து வந்துள்ளது. இறையாண்மை கொண்ட, சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பாக, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் இணக்கமாக, அமைதியுடன் அருகருகே வாழவேண்டும்.

(ஆ) அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையும், தற்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் ஏற்பட்டுவரும் பொதுமக்களின் உயிரிழப்புகளையும் இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து நாங்கள் கவலையடைகிறோம், மேலும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளின் மூலம் மோதலை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கும், மோதலின் தீவிரத்தைக் குறைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தங்கள் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க இருதரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். பிரதமரும், வெளிவிவகாரத்துறை அமைச்சரும் இஸ்ரேலின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி உட்பட அந்தப் பிராந்தியத்திலும், உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடனும் பேசியுள்ளனர். G20, BRICS மற்றும் ‘குளோபல் சவுத்’ உச்சிமாநாடு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அரங்குகளிலும் பேசி மேற்கூறியவற்றை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.”

இவ்வாறு அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.