“ தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்

Views : 24

பதிவு செய்த நாள் 26-Jun-2025

“ தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்”


எல்.இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை நடைமுறப்படுத்த வேண்டும்


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பினேன் 


பெறல்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

தமிழ்நாடு அரசு

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னை - 600009


 


வணக்கம்


பொருள்: தீண்டாமை ஒழிப்பு - ஐயா எல்.இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக


இன்று (26.06.2025) திரு.எல். இளையபெருமாள் அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் ஆகும். இந்திய அளவில் எஸ்.சி.எஸ்.டி. மக்களுக்கான பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு அமைத்த முதல் ஆணையத்தின் தலைவர் அவர். 1969 ஆம் ஆண்டு அவர் அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். ‘அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும்’ என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்று. அதன் அடிப்படையில்தான் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தை இயற்றினார்.


பஞ்சாயத்து அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் அவருடைய பரிந்துரைதான். அதன் தொடர்ச்சியாகத்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டபோது அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.


1950இல் நடைமுறைக்கு வந்த அரசமைப்புச் சட்டம் ‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக’ அறிவித்தது. ஆனால் அவ்வாறு அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட இன்னும் தீண்டாமை என்பது கிராமப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் நிலவவே செய்கிறது.


திரு எல். இளையபெருமாள் குழு அறிக்கையில் “அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளும் பொதுக் கிணறுகளையும் தண்ணீர் தொட்டிகளையும் அனைத்துச் சமூக மக்களும் பயன்படுத்துவதற்குத் திறந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்தப் பஞ்சாயத்துகளுக்கான நிதியை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும் என குஜராத் மாநில அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த மாநில அரசும் இப்படியான சட்டத்தை இயற்ற முன்வரவில்லை என்று குழு வருத்தத்துடன் தெரிவிக்கிறது. எனவே, மற்ற அனைத்து மாநிலங்களும் இப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது (பக்கம் 41)


உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தைப் பரவலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை அதிகாரப்படுத்துவதற்குத் தாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள். திரு எல்.இளையபெருமாள் அவர்களுக்குச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தையும் உருவாக்கியிருக்கிறீர்கள். சாதிய பாகுபாடில்லாத ஊராட்சிகளுக்குச் சிறப்பு நிதி அளித்து ஊக்குவிக்கிறீர்கள்.


அவ்வாறிருந்தும், தமிழ்நாட்டின் ஊராட்சிகள் பலவற்றில் இரட்டைக் குவளை முறை, அறநிலையத்துறை கோயில்களிலும் ஆதிதிராவிடர்களை அனுமதிக்காத வழிபாட்டுத் தீண்டாமை, சிகை திருத்தும் கடைகளிலும் பாகுபாடு, தெருக்களில் செருப்பு போட்டு நடக்க முடியாத நிலை - இப்படிப் பல்வேறுவிதமான வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு தீண்டாமை நிலவும் ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற திரு எல். இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி தீண்டாமை ஒழிப்பு சமத்துவ நடவடிக்கைகளில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


இவண்

முனைவர் து.ரவிக்குமார்