விஷச் சாராய மரணங்கள் நிகழ்ந்த எக்கியர் குப்பத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள்
DISHA கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கை ஏற்பு
====
மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஊரக வாலர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று எனது தலைமையில் நடைபெற்றது. ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளை இந்த கூட்டத்துக்கு அழைத்திருந்தோம். கடலூர் மாவட்டத்தில் லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லெவல் கிராஸிங்குகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை வரச் சொல்லி இருந்தோம். விழுப்புரம் மாவட்டத்தில் 45 லெவல் கிராஸிங்குகள் உள்ளன என்றும் அவற்றில் 33 லெவல் கிராஸிங்குகளில் இன்டர் லாக்கிங் வசதி செய்யப்பட்டு இருக்கிறது என்றும் 12 லெவல் கிராசிங்குகளில் அந்த வசதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் புதிதாக ஆறு இடங்களில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். சுரங்கப்பாதைகள் அமைக்கும்போது விவசாயிகள் குறிப்பாக கரும்பு விவசாயிகள் விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமம் இல்லாமல் உயரமாக இடம்விட்டு அமைக்க வேண்டும், எளிதாக வாகனங்கள் செல்லும் விதமாக அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். இன்டர் லாக்கிங் வசதி செய்யப்படாத லெவல் கிராசிங்குகளில் உடனடியாக அவற்றைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்.
அடுத்து 100 நாள் வேலைத் திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் வேலை செய்தவர்களுக்கான கூலி நிலுவையில்லாமல் வழங்கப்பட்டுவிட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்குப் பொருட்கள் வாங்கியதற்காக வழங்கப்பட வேண்டிய சுமார் 48 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை என செயற்பொறியாளர் கூறினார்.
பழங்குடியின மக்களுக்காக பிஎம்- ஜன்மன் திட்டத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்குத்தான் அதிகபட்சமாக 2023-24, 2024-25 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 2238 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 113.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
“பிஎம்- ஜன்மன் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் சில இடங்களில் தரமற்றவையாக இருக்கின்றன; பயனாளிகள் மூலமாக கட்டாமல் சமத்துவபுரம் வீடுகள் கட்டப்படுவதுபோல அரசே கட்டித் தர வேண்டும், வீடுகளின் தரத்தை சோதிப்பதற்கு ஐஐடி பேராசிரியர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்” என்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோரி இருந்தனர். அதை இக்கூட்டத்தில் எடுத்துக் கூறினேன். ‘பிஎம்- ஜன்மன் திட்டத்திலான வீடுகள் எப்படி கட்டப்பட வேண்டும் என்ற விதிகள் ஒன்றிய அரசால் வகுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே சமத்துவபுரம் போல அரசே முழுமையாக வீட்டைக் கட்டித் தருவது இப்போது சாத்தியமில்லை. பயனாளிகள் கட்டாமல் கட்டுமான நிறுவனம் மூலம் கட்டினால் 18% ஜிஎஸ்டி பிடிப்பார்கள். அது வீட்டின் யூனிட் காஸ்ட்டை மேலும் குறைத்துவிடும்’ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு தற்போது வீடுகள் ஆய்வு செய்யப்படுவதாகவும், அவற்றின் தரம் சோதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பழங்குடியின மக்கள் பரவலாக வாழ்கின்ற காரணத்தினால் அரசு முழு வீட்டையும் பொறுப்பேற்று கட்டித் தருவதில் நடைமுறை சிக்கல் உள்ளது எனவும் தற்போது கட்டப்படும் வீடுகளுக்காக 430 புதிய பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூடுதல் ஆட்சியர் தெரிவித்தார்கள்.
அடுத்து PMAY - Urban திட்டத்தை ஆய்வு செய்தோம். இத்துட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் நகராட்சியில் 3 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை கட்டி முடிக்கப்படவில்லை. விரைந்து முடிக வேண்டுமென முனிசிபல் கமிஷனரிடம் அறிவுறுத்தினேன்.
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை ஆய்வு செய்தோம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 1565 ஊரகக் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கென 2383 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூடுதல் ஆட்சியர் தெரிவித்தார். ஒன்றிய அரசு நிதி இல்லை எனக் கூறிவிட்டதால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதம் நேர்வதாகவும் கூறினார். நான் ஒன்றிய நிதி அமைச்சரிடம் கேட்டுப் பெற்ற மரக்காணம் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பராமரிப்புச் செலவு கருதி ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்தக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனக் கூட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுக்கொரு ஊராட்சியைத் தத்தெடுக்கும் SAGY திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துவிட்டது. எனினும் ஆண்டுக்கொரு ஊராட்சியைத் தேர்வுசெய்து திட்டங்களை செயல்படுத்தலாம் எனக் கேட்டுக்கொண்டேன். விஷ சாராயம் அருந்தி அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட மரக்காணம் எக்கியர் குப்பத்தைத் தேர்வு செய்து அங்கு வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தலாம் என நான் முன்வைத்த ஆலோசனையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
100 நாள் வேலைத் திட்டம், பிரதமர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், சுகாதாரத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் என அனைத்துத் திட்டங்களின் செயல்பாடுகளும் நேற்றையக் கூட்டத்தில் சீராய்வு செய்யப்பட்டன. கடந்த கூட்டத்தில் நான் எழுப்பிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கும் விவரங்களைத் தெரிவிக்கும் அறிக்கையும் ( Action Taken Report) அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் திரு ஷேக் அப்துல் ரஹ்மான் IAS அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குப் பொறுப்பான கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா IAS, செயற்பொறியாளர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு மணிக்கண்ணன், திரு சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
- ரவிக்குமார் எம்.பி