இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

Views : 39

பதிவு செய்த நாள் 19-Jul-2025

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி


=====


வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விழிப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு அரசு வேலைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியரும் நானும் வழங்கினோம். “ விழுப்புரத்தைப் பொருத்தமட்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டத் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு வேலை வாய்ப்பைப் பெறுவதற்குத் தகுதியான 28 பேரில் 17 பேருக்கு ஏற்கனவே வேலை வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 11 பேருக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான பணிகளும் கண்டறியப்பட்டு அதற்கான துறை சார்ந்த ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது” என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள். 


சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அளித்த ஒரு தீர்ப்பில் கோயில் நுழைவுச் சட்டம் 1947 இன் படி கோவிலில் சென்று வழிபட எல்லோருக்கும் உரிமையுள்ளது. அதை எவரேனும் தடுத்தால் அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதை கூட்டத்தில் எடுத்துரைத்த நான், “ விழுப்புரம் மாவட்டத்திலும் இப்படி வழிபட முடியாத பல கோயில்கள் உள்ளன. அதற்குக் காரணம் கோவில் நுழைவு சட்டம் குறித்தோ. வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்தோ அரசமைப்புச் சட்டம் குறித்தோ மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு இல்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்றை சட்டக் கல்லூரியில் நடத்தலாம் “ என்ற ஆலோசனையை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தேன். விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். 


கூடுதல் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 


- ரவிக்குமார் எம்.பி