சமூக மூலதனத்தை அழிக்கும் சாதி ஆணவக் குற்றங்கள்
===
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின் செல்வ கணேஷ் 2025 ஜூலை 27 ஆம் நாள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கவின் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். கவின் தனது பள்ளிப் பருவத்திலிருந்தே திருநெல்வேலி பாளையங்கோட்டை கே டி சி நகரைச் சேர்ந்த பெண் ஒருவரோடு நெருக்கமாக பழகி வந்ததாகவும் அதில் ஆத்திரம் அடைந்து அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கவினைப் படுகொலை செய்திருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. கொலையாளி சுர்ஜித் மறவர் சாதியைச் சேர்ந்தவர், இந்தக் கொலை ஆணவப் படுகொலை என செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
காவல்துறை சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் மீது கொலை வழக்கும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளது. சுர்ஜித் மட்டும் முதலில் கைது செய்யப்பட்டார். கவினின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியதன் பேரில் சுர்ஜித்தின் தந்தையும் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு இப்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சுர்ஜித்தைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் இது அதிக அளவில் நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டவாறு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் தமிழ்நாடு அரசு அத்தகைய சட்டம் தேவையில்லை, தற்போது உள்ள சட்டங்களே போதும் என்று கூறி வருகிறது.
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் கடந்த 27.03.2018 அன்று வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்த்ரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய 54 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பு ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதோடு அப்படி சட்டம் இயற்றும்வரை ஒன்றிய அரசும் மாநில அரசுகௌம் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியிருக்கிறது.
” சுதந்திரம் என்ற சொல்லின் உறுதியான பொருள் தேர்வுசெய்யும் ஆற்றல் என்பதில் அடங்கியுள்ளது” என ஃப்ரெஞ்ச் தத்துவ அறிஞர் சிமோன் வெய்ல் (Simon Weil ) கூறியுள்ளதை மேற்கோள் காட்டி தீர்ப்பைத் துவக்கியுள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா “ வர்க்க கௌரவத்தின் பெயரால், தேர்வு செய்யும் ஆற்றல் நசுக்கப்படும்போது சமூகத்தின் எலும்புகளிலும், மூளைகளிலும் அச்சம் மேலோங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சக்தி வாஹினி என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு ஹரியானாவிலும் மேற்கு உத்தரப்பிரதேசத்திலும் ஆணவக் கொலைகள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் 22.12.2009 இல் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. ஆணவக் கொலைகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி மணம் செய்யாமல் குழந்தை பெறுதல்; சமூகப் பதற்றம்; குடும்பத்தைத் துறத்தல் உள்ளிட்ட பல்வேறு துயரச் சம்பவங்களும் அத்துடன் இணைந்திருப்பது கண்டறியப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 71 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது. உத்தரப் பிரதேசத்தில் 16; மத்தியப் பிரதேசத்தில் 18; குஜராத்தில் 10; மகராஷ்டிராவில் 8; பஞ்சாப்பில் 8 தமிழ்நாட்டில் 1 என மாநிலவாரியாக நடந்த ஆணவக் கொலைகளின் பட்டியலையும் அது தந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 192 ஆணவக் கொலைகள் நடந்ததாகவும் அதில் 21 கொலைகள் குஜராத்திலும் 14 கொலைகள் மத்தியப் பிரதேசத்திலும் 131 கொலைகள் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருப்பதாகவும் என்சிஆர்பி யின் 2015 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்திருந்தது. இந்தப் புள்ளி விவரங்களில் சொல்லப்பட்டிருக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதை பத்திரிகைகளில் வெளியான ஆணவக் கொலைகள் தொடர்பான சம்பவங்கள் குறித்த செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தான் அதைத் தடுப்பதற்கு தனியே சட்டம் இயற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ அந்த கோரிக்கையைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் “ சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயம், ஆணவக் கொலையையும் கொலையாகவே எண்ணி ஐபிசி பிரிவுகள் 300, 302 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆணவக் கொலைக்கென தனி சட்டம் இயற்றுவது தொடர்பாக மாநில அரசுகளோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டிருந்தது. அதிலிருந்தே ஒன்றிய பாஜக அரசின் நிலைபாட்டைப் புரிந்துகொள்ளலாம்.
’காப் பஞ்சாயத்து’ என வட இந்தியாவிலும் ‘சாதி பஞ்சாயத்து ‘ என தமிழ்நாட்டிலும் அழைக்கப்படுகிற சட்டவிரோத கூட்டங்களைத் தடை செய்வதற்கும், ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் வகைசெய்யும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் சட்ட மசோதா ஒன்றையும் 2012 ஆம் ஆண்டே இந்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் வழங்கிவிட்டது.
சட்ட ஆணையத்தால் உருவாக்கப்பட்ட’ சட்டவிரோதக் கூட்டம் ( திருமண சுதந்திரத்தில் தலையிடுதல் ) தடுப்புச் சட்டம் ‘( Prohibition of Unlawful Assembly (Interference with the Freedom of Matrimonial Alliances) Act ) என்ற சட்ட மசோதா ’சட்டபூர்வ வயதை எட்டிய, மனம் ஒத்த இருவர் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதற்காகக் கூட்டப்படும் ‘காப் பஞ்சாயத்து’ உள்ளிட்ட அனைத்துவிதமான கூட்டங்களையும் சட்டவிரோதக் கூட்டங்கள் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்காமல் கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.
‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், கௌரவம் என்ற பெயரால் கூட்டப்படும் ஒரு கூட்டத்தை ‘காப் பஞ்சாயத்து’ என அழைப்பதா ’சாதிப் பஞ்சாயத்து’ என அழைப்பதா என்பது பிரச்சனை அல்ல அந்தக் கூட்டம் திருமணம் செய்து கொள்ளும் தமபதியினரையோ அவர்களது பெற்றோரையோ அழைத்து விசாரிக்கிறதா என்பதே கவனிக்கப்படவேண்டியது எனக் கூறியுள்ளது.
‘சதி’ ‘வரதட்சணை’ ஆகியவற்றை ஒழித்து இயற்றப்பட்ட சட்டங்கள் சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கு பயன்பட்டன. அதுபோலவே ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றைப் பாராளுமன்றம் இயற்றவேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள் :
ஆணவக் குற்றங்கள் அதிகமக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறியவேண்டும்: அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்தவேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத்தால் அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்;செய்தி கிடைத்தது டிஎஸ்பி மட்டத்தில் உள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்;அதையும் மீறி சாதி பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருக்கவேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவேண்டும்; அந்த கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்க்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிவாரண நடவடிக்கைகள் :
தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதி பஞ்சாயத்து / கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141,143,503 மற்ரும் 506ன் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தம்பதியினரை பதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லவேண்டும்; ஓவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய தமபதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லங்களைத் துவக்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்கவேண்டும்; கலப்பு மணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்த திருமனம் நடைபெறுவதற்கான பாதுகாப்பை காவல்துறை தரவேண்டும்; தங்களது திருமணத்தை கௌரவத்தின் பெயரால் சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்பிக்கு அறிக்கை அளிக்கவேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆணையிடவேண்டும்.
தண்டனை நடவடிக்கைகள்:
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது உரிய துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிபடையில் ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்;கலப்புமணத் தமபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட அதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ( special cell) ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. மாநில அரசுகளின் காவல்துறை இந்த குற்றத்தை வலுவாகத் தடுப்பதற்கு ஏதுவாக இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளோடு கூடுதலாகத் தாம் விரும்புகிற அம்சங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தடுப்பு, நிவாரணம், தண்டனை நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த 31.05.2018 அன்று மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது ( F. No. 24013/78/2010-SC/ST-W Dt 3205.2018). அவ்வாறு செய்தும்கூட தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலத்திலும் அது செயல்படுத்தப்படவில்லை. அதற்குக் காரணம் அரசாங்கத்தின் அலட்சியம் மட்டுமல்ல, அதைப் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தாமல் இருப்பதும்தான்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கவின் படுகொலை செய்யப்பட்டதை திமுக, அதிமுக, தவெக, பாஜக, பாமக முதலான கட்சிகள் கண்டித்து அறிக்கைகூட வெளியிடவில்லை. இத்தகைய சம்பவங்களில் கொலை செய்தவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளைக் குறி வைத்து மௌனம் காக்கும் இந்தக் கட்சிகள், பட்டியல் சமூக மக்களை ஒரு வாக்கு வங்கியாகக்கூடப் பார்க்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்றாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அலட்சியம் செய்தால் இந்த மாநிலமும் ராஜஸ்தானைப் போல அரியானாவைப் போல ஆகிவிடும். நலத் திட்டங்களை அறிமுகம் செய்வது, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது மட்டுமே ஒரு ஆட்சியை நல்லாட்சி ஆக்கிவிடாது. அந்த மாநிலத்தில் நலிவடைந்த பிரிவினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்தே அதைக் கூற முடியும். தமிழ்நாட்டின் தனித்துவம் என்பது பொருளாதார மூலதன வளர்ச்சியை சாதித்தது மட்டுமல்ல, சமூக மூலதன ( social capital) முன்னேற்றத்தை சாதித்ததும்தான். அந்த சமூக மூலதன முன்னேற்றத்தை பட்டியல் சமூகம் அடைந்துவிடாமல் தடுப்பதே சாதி அமைப்பின் மிகப்பெரிய வன்முறை ஆகும். இதை தமிழ்நாடு அரசு இன்னும்கூட உணராதிருப்பது வியப்பும் வேதனையும் அளிக்கிறது.
- ரவிக்குமார்