‘சமத்துவப் பெரியார்’ கலைஞர்!
ரவிக்குமார்
( முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளான இன்று அவரது சாதனைகளில் ஒன்றை நினைவுகூர்ந்து
15.11.2006 தேதியிட்ட ஜூனியர் விகடனில் எழுதிய இந்தக் கட்டுரையைப் பகிர்கிறேன் )
மழைக்கால மேகங்களையும் மீறி தமிழ்நாடு புதுவெளிச்சம் பெற்றிருக்கிறது. ஜனநாயகம் என்ற சூரியனால் ஏற்பட்ட வெளிச்சம் இது. கடந்த பத்து ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாமல் இருந்த கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாக்காச்சியேந்தல் ஆகிய நான்கு கிராம பஞ்சாயத்துகளிலும் முறையாகத் தேர்தல் நடந்து இப்போது தலைவர்களும் மற்றவர்களும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அவர்களைத் தமிழகத்தின் தலைநகருக்கு அழைத்து அரசு சார்பில் விழா எடுத்து கௌரவித்தது அரிதினும் அரிதானதொரு செயலாகும்.
தமிழக அரசு கொண்டாடிய 'சமத்துவப் பெருவிழாவில்' அந்த கிராம பஞ்சாயத்துத் தலைவர்களைத் தம்மோடு மேடையில் அமரவைத்து அழகு பார்த்தார் முதல்வர். தமிழக முதல்வருக்கு 'சமத்துவப் பெரியார்' என்ற பட்டத்தை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வழங்கியபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. முதல்வருக்கு நிலைத்துவிட்ட 'கலைஞர்' என்ற பட்டத்தைப்போல 'சமத்துவப் பெரியார்' என்ற பட்டமும் நின்று நிலைத்திருக்கும். தந்தை பெரியார் அவர்களுக்குப் 'பெரியார்' என்ற பட்டத்தை மீனாம்பாள் சிவராஜ் என்ற தலித் தலைவி தான் 13.11.1938ல் வழங்கினார். அந்தப்பட்டம் எப்படி நிலைத்திருக்கிறதோ அப்படியே அதே நாளில் இப்போது வழங்கப்பட்டுள்ள 'சமத்துவப் பெரியார்' என்கிற பட்டமும் நிலைத்து சிறக்கும்.
கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துக்களில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தேர்தலை முறையாக நடத்த முடியவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யவே எவரும் முன்வர முடியாத அளவுக்கு அச்சுறுத்தல், மீறி தாக்கல் செய்தால் போட்டிக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை உடனடியாக ராஜினாமா செய்ய வைத்த கொடுமை. இந்தியக் குடியரசுத் தலைவராகக் கூட ஒரு தலித் வந்து விடலாம். ஆனால் பஞ்சாயத்து தலைவராக வரமுடியாது என்ற அவலம். இந்திய ஜனநாயகத்தின் மீது கறையாகப் படிந்திருந்த இந்த அவமானம் உலக அரங்குகளில் இந்தியாவின் மதிப்பையே சீரழித்துக்கொண்டிருந்தது.
தேர்தல் கலவரங்களுக்கும், தலித்துக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் பேர்போன பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட இப்படியான கொடுமை நடந்ததில்லை. பத்து ஆண்டுகள் தமிழகம் இதை அனுமதித்துக்கொண்டிருந்தது. இப்போதுதான் இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு காணப்பட்டிருக்கிறது.
பன்னிரெண்டாயிரத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட ஒரு மாநிலத்தில் நான்கு கிராம பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்தியதைச் சாதனையாகக் கூறுவது மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் இந்தப் பஞ்சாயத்துக்களின் பின்னணி தெரிந்தவர்கள் இதைப்புரிந்துகொள்வார்கள்.
பஞ்சாயத்துக்களில் தலித்துக்களுக்கான தனித்தொகுதிகள் மக்கள் தொகை அடிப்படையில் தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. கிராம பஞ்சாயத்துக்களில் ரிசர்வ் தொகுதியைக் கண்டறிய வட்டம் (Block ) என்பதே அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. ஒரு வட்டத்துக்குள் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் தலித்துகளின் மக்கள் தொகை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அந்தத் தொகுதிகள் 'ரிசர்வ்' தொகுதியாக அறிவிக்கப்படும். இது இறங்குவரிசையில் சுழற்சி செய்யப்படும். அந்த விதத்தில் தான் இந்த நான்கு பஞ்சாயத்துக்களும் 'ரிசர்வ்' செய்யப்பட்டன. 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1589 பேர் வசித்த பாப்பாபட்டியில் தலித்துகள் 29.4% இருந்தனர். கீரிப்பட்டியின் மக்கள் தொகை 1336 அதில் தலித்துகள் 29.7% கொஞ்சம் பெரிய பஞ்சாயத்தான நாட்டார் மங்கலத்தின் மக்கள் தொகை 2374. அதில் தலித்துகள் 30.2% இந்த நான்கிலும் மிகவும் சிறிய பஞ்சாயத்தான கொட்டகாச்சியேந்தலின் மக்கள் தொகை 572 தான். அதில் 236 பேர் தலித்துகள். அதாவது 41.3%
இந்த பஞ்சாயத்துகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் தலித்துக்களைத் தான் ''சிறுபான்மையாக உள்ளனர். இவர்களை எப்படித் தலைவர்களாக ஏற்பது'' என்று கூறி சிலர் தேர்தலை நடைபெறாமல் தடுத்து வந்தனர்.
இந்தியாவின் சாதி அமைப்பில் தலித்துகள் ஒருபோதும் பெரும்பான்மையாக இருக்க முடியாது. அதனால் தான் அவர்களுக்கு தனித்தொகுதி முறைமூலம் பிரதிநித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி சட்டப்பாதுகாப்பு இல்லாவிடடால் தலித்துகளை எந்த கட்சியும் இந்த அளவுக்கு தேர்ந்தெடுக்காது என்பதே உண்மை. இப்போது ராஜ்யசபாவில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை. 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி ராஜ்யசபாவில் உள்ள 250 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் 21 பேர் தான் இருந்தனர். இடஒதுக்கீடு இருந்திருந்தால் 38 பேர் இருந்திருப்பார்கள்.
இந்தியாவின் ஆன்மாவாக காந்தியடிகள் கிராமங்களைக் கண்டார். இந்தியாவுக்கு அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுவதற்கான தயாரிப்பின் போது காந்தியடிகள் இரண்டு திட்டங்களை சமர்ப்பித்தார். 1946 ஜனவரியில் முதல் திட்டத்தையும், 1948 ஜனவரியில் இரண்டாவது திட்டத்தையும் அவர் முன்வைத்தார். இரண்டாவது திட்டத்தை வெளியிட்ட அன்றுதான் அவர் கொல்லப்பட்டார். காந்தியடிகளின் இறுதி சாசனமாகக் கருதப்படும் அந்தத் திட்டத்தில் தான் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட வேண்டுமென்ற கருத்தை அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர், இரண்டு பஞ்சாயத்துகள் சேர்ந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் ஐம்பது தலைவர்கள் கூடி ஒரு இரண்டாம் நிலைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாம் நிலைத் தலைவர்கள் கூடி ஒரு தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதில் வழிகாட்டியிருந்தார். ஆனால் காந்தியடிகளின் திட்டத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. 1948 ஏப்ரலில் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் அதற்கு மாறாக புதியதொரு திட்டம் ஏற்கப்பட்டது.
காந்தியின் சீடரான நாராயண் அகர்வால் என்பவர் தயாரித்தளித்த 'சுதந்திரம் இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு' என்ற திட்டத்தில் கிராம பஞ்சாயத்துக்களே வரி வசூல், கல்வி, போலீஸ் முதலியவற்றை நிர்வகிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் காங்கிரசால் நிராகரிக்கப்பட்டது. காந்தியடிகள் முன்வைத்த 'கிராம பஞ்சாயத்தை' காங்கிரஸ் ஏற்கவில்லை. அதை காந்தியடிகளும் வற்புறுத்தவில்லை.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அலகாக கிராமம் இருக்க வேண்டுமா அல்லது தனிநபர் இருக்க வேண்டுமா என்ற விவாதம் எழுந்த போது தனிநபரே இருக்க வேண்டுமென ஆதாரங்களை அடுக்கி வாதாடிய அம்பத்கேர் இந்திய கிராமங்கள், 'கீழ்த்திசை நாடுகளின் கொடுங்கோலாட்சிக்கு மாதிரி வடிவங்களாக விளங்குகின்றன' என்று குறிப்பிட்ட கார்ல் மார்க்ஸின் கருத்துகளை எடுத்துக்காட்டி இந்திய கிராமங்களை ஜனநாயகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் பஞ்சாயத்துராஜ் சட்டத்தைக் கொண்டு வந்தது கிராமங்களை வலுப்படுத்துவதற்காக மட்டுமல்ல, அவற்றை ஜனநாயகப் படுத்துவதற்காகவும் தான். அதனால் தான் தாழ்த்தப்பட்டோருக்கும், பெண்களுக்கும் அதில் இடஒதுக்கீட்டை அவர் ஏற்படுத்தினார். கிராமங்களை ஜனநாயகப்படுத்தாமல் அவற்றை பலப்படுத்துவது அங்கே இருக்கும் வெளிப்படையான சாதி பாகுபாட்டை வலுப்படுத்துவதாக அமைந்து விடும். இப்போது இந்த நான்கு ஊராட்சிகளிலும் தேர்தல் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த கிராமங்களின் வளர்ச்சிக்கு சிறப்பு நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நான்கு பஞ்சாயத்துக்களிலும் ஜனநாயகத்தை மீட்ட பெருமை நமது முதல்வருக்கு உரியது. அவரது நோக்கத்தை நிறைவேற்றியது உள்ளாட்சி அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனையாகும். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அசோக்வரதன் ஷெட்டி அவர்களும் மதுரை மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் அவர்களும் முதல்வருக்கு உறுதுணையாக இருந்து இதை சாதித்துக் காட்டியுள்ளனர்.
''அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்'' என ஒரு பழமொழி உண்டு. சாதிவெறியைக் கொல்லும் விஷயத்தில் தமிழக அரசு நின்று நிதானித்து ’தெய்வத்தை’ப் போல செயல்பட்டிருக்கிறது. 'சமத்துவப் பெரியாராய்' உயர்ந்திருக்கும் முதல்வர் கலைஞரின் சாதனை, அவர் குமரிக்கடலில் நிறுவியுள்ள வள்ளுவர் சிலையைவிட உயர்ந்து நிற்கிறது. வாழ்க 'சமத்துவப்பெரியார் கலைஞர்'!