வக்ஃபு திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்! - ரவிக்குமார் எம்.பி

Views : 9

பதிவு செய்த நாள் 15-Sep-2025

வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு பாலைவனத்தில் கண்ட பசுஞ்சுனை போல் உள்ளது. 


வக்ஃபு திருத்தச் சட்டத்தில் பின்வரும் பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது


1. பிரிவு 3 (r) : வக்ஃபு அளிப்பதற்கு ஒருவர் 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும் என்ற பிரிவுக்குத் தடை :


இஸ்லாமிய நடைமுறைகளை ஐந்து ஆண்டுகளாகப் பின்பற்றுகிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு இப்போது எந்த விதியும் இல்லாத நிலையில் , மாநில அரசுகளால் உருவாக்கப்படும் விதிகள் மூலம் அது தீர்மானிக்கப்படுவதற்கான பொறிமுறை வகுக்கப்படும் வரை அந்தப் பிரிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்தகைய பொறிமுறை இல்லாத பட்சத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படலாம்.


2. பிரிவு 3 C (2)-இல் உள்ள நிபந்தனைக்குத் தடை :  


நியமிக்கப்பட்ட அலுவலர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஒரு சொத்து சொத்து வக்ஃப் சொத்தாகக் கருதப்படாது என இந்தப் பிரிவு சொல்கிறது. (3) நியமிக்கப்பட்ட அலுவலர் அந்த சொத்து அரசு சொத்து எனத் தீர்மானித்தால், அவர் வருவாய்ப் பதிவுகளில் தேவையான திருத்தங்களைச் செய்து, இது தொடர்பாக மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும் அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது. (4) நியமிக்கப்பட்ட அலுவலரின் அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, வருவாய் ஆவணங்களில் தகுந்த திருத்தங்களைச் செய்யுமாறு வாரியத்திற்கு உத்தரவிடும்" என இந்தப் பிரிவு கூறுகிறது- இந்த சட்டப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


வக்ஃபு சொத்தின் உரிமைகளைத் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் தருவது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள, அதிகாரப் பிரிவினைக்கு எதிரானது; நிர்வாகத் துறை சார்ந்த ( executive ) அதிகாரி குடிமக்களின் உரிமைகளைத் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


நியமிக்கப்பட்ட அலுவலரின் முடிவுகள் இறுதியாகும் வரை, சொத்தின் உரிமைகள் பாதிக்கப்படாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


3. பிரிவு 3 C -இன் கீழ் வக்ஃபு சொத்தின் உரிமை தொடர்பான விவகாரம் :


பிரிவு 83-ன் கீழ் தீர்ப்பாயத்தால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மேலதிக உத்தரவுகளுக்கு உட்பட்டு, வக்ஃப் சொத்து பறிக்கப்படாது, வருவாய் பதிவுகள் மற்றும் வாரியத்தின் பதிவுகள் பாதிக்கப்படாது. இருப்பினும், பிரிவு 3 C -யின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டு, பிரிவு 83-ன் கீழ் இறுதி தீர்மானம் வரும் வரை, மற்றும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின் உத்தரவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய சொத்துகளில் மூன்றாம் தரப்பு உரிமைகள் உருவாக்கப்படக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. 


4. பிரிவு 9-ன் கீழ் மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு :  


20 உறுப்பினர்களில் நான்கு பேர்களுக்கு மேல் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கக் கூடாது என உத்தரவிடப்படுகிறது. அதேபோல், பிரிவு 14-ன் கீழ் மாநில வாரியங்களுக்கு, 11 உறுப்பினர்களில் மூன்று பேருக்கு மேல் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கக் கூடாது என உத்தரவிடப்படுகிறது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


5. பிரிவு 23-ஐ நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்றாலும், வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக , முடிந்தவரை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படவில்லையென்றாலும் அதன் ஆபத்தான பிரிவுகளுக்குத் தடை விதித்ததன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் வக்ஃபு சொத்துகளை அபகரிப்பதற்கு பாஜக அரசு செய்த முயற்சி தற்காலிகமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.  


இந்தத் தீர்ப்பு முழுமையான தீர்வு அல்ல எனினும் இந்த அளவிலாவது உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்கியதே என ஆறுதல் கொள்வோம்.