வலங்கை - இடங்கை பிரிவு எப்படி காணாமல் போனது ? - ரவிக்குமார்

Views : 11

பதிவு செய்த நாள் 18-Oct-2025

வில்லியனூர் ந.வெங்கடேசன் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வெட்டுகளைப் படி எடுத்து பதிப்பிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள் என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கல்வெட்டுக்கள் அனைத்தையும் தொகுத்தவர் அவர்தான். அவர் தனது 80வது பிறந்தநாள் அன்று வெளியிட்ட நூல் ‘வரலாற்றில் ஆனந்தரங்கர்’.


ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பில் பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்றிருக்கும் செய்திகளைத் தொகுத்து சிறுசிறு கட்டுரைகளாக அவர் எழுதியவற்றின் தொகுப்புதான் இந்த நூல். 7 கட்டுரைகளைக் கொண்ட அந்த நூலில் ஆனந்தரங்கப் பிள்ளை காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் பற்றியும்; அப்போது ஏற்றுமதி செய்யப்பட்ட துணிவகைகள் பற்றியுமான செய்திகளையெல்லாம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. 


வலங்கை - இடங்கை சாதியினர் இடையே இருந்த மோதல் குறித்து சில தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் வலங்கை சாதியினர் சமூகத்தில் உயர்வாகக் கருதப்பட்டதும், அவர்கள் தமக்கு உள்ள மரியாதைச் சின்னங்களை இடங்கை சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்று புகார் அளித்ததையும்; அப்போது இருந்த பிரெஞ்சு கம்பெனியார் எல்லோரையும் சமமாக நடத்துவதில் ஆர்வம் காட்டியதையும் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து திரு வெங்கடேசன் தொகுத்து அளித்திருக்கிறார். வலங்கை சாதியைச் சேர்ந்த ஆண்களைக் கண்டால் இடங்கை சாதியைச் சேர்ந்த தாசிகள் எழுந்திருக்க வில்லை என்பதைக்கூட ஒரு புகாராக அப்போது கூறியுள்ளனர். அதற்காக தாசிகளைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பின்னர் சமாதானம் ஏற்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் அதில் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. 


18 ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் சாதிகளைக் கிடைமட்டத்தில் வைத்து வகுத்திருந்த வலங்கை - இடங்கை சாதிகள் என்ற அமைப்பு எப்படி திடீரென 19 ஆம் நூற்றாண்டில் காணாமல் போனது, புற்றீசல் போல பல சாதிகள் எவ்வாறு முளைத்தன என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய கேள்விகளாக உள்ளன. இதைப்பற்றி விரிவான ஆய்வுகள் தமிழில் செய்யப்படவில்லை என்பது ஒரு பெரும் குறை. வில்லியனூர் வெங்கடேசன் அவர்களின் நூலைப் படித்த போது ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளில் வலங்கை - இடங்கை சாதிகள் பற்றிய பதிவுகளை மட்டும் தனியே தொகுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.