தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள பெர்னார்டு சுவடிகளைத் தமிழ்நாடு அரசு பதிப்பிக்க வேண்டும் - ரவிக்குமார்

Views : 13

பதிவு செய்த நாள் 02-Jan-2026

தமிழ் மொழிக்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்று சீர்குலைந்து நிற்கிறது. துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அது இருக்கிறது. அத்துடன், தொலை நோக்கோடு அங்கு உருவாக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கும் போதுமான பேராசிரியர்கள் தற்போது இல்லை.  


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளிலேயே தனித்துவமானது ஓலைச்சுவடிகள் துறையாகும்.அங்கே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு , சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றில் வருவாய்த்துறை சார்ந்த சுமார் 1500 ஓலைச்சுவடி சுருணைகள் உள்ளன. அவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஓலைச்சுவடிகள் 180 கட்டுகள் இருக்கின்றன. அவை 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தாமஸ் பெர்னார்டு ( 1746-1830) என்பவர் 1767 ஆம் ஆண்டுக்கும் 1774 க்கும் இடையில் செங்கல்பட்டு பகுதியில் 15 சீமைகளைச் சேர்ந்த 2138 ஊர்களில் நிலம்,விவசாயம், மக்கள்தொகை உள்ளிட்ட விவரங்களைக் கணக்கெடுப்புச் செய்து அவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார். தற்போது தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பில் இருக்கும் அந்தச் சுவடிகள் தமிழ்நாட்டின் வரலாற்றை மட்டுமின்றி இந்திய வரலாற்றையும் அறிந்துகொள்ள உதவக்கூடியவை. செங்கல்பட்டு சுவடிக் கட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஆயிரம் ஏடுகளுக்கு மேல் உள்ளன. அவற்றை முழுவதுமாக பதிப்பிக்க வேண்டும். அதற்குமுன் அவற்றை டிஜிட்டல் முறையில் படியெடுக்க வேண்டும். செங்கல்பட்டு சுவடிகள் மட்டுமின்றி மருத்துவம் உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த சுவடிகள் சுமார் 8000 பண்டல்கள் அங்கு உள்ளன.


ஓலைச்சுவடிகள் துறையில் ’பிரிட்டிஷ் லைப்ரரியின்’நிதி நல்கையால் டிஜிட்டல் முறையில் சுவடிகளைப் படியெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. 2022 டிசம்பர் வரை நடைபெற்ற அந்தத் திட்டத்தின்கீழ் மருத்துவம் உள்ளிட்ட சுவடிகளில் சுமார் 1200 ’டைட்டில்கள்’ டிஜிட்டல் முறையில் படியெடுக்கப்பட்டுள்ளன. அந்தத் துறைக்கென காமிராக்கள் , ஆட்கள் இருந்தால் அங்குள்ள அனைத்து சுவடிகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றிப் பாதுகாக்கலாம். 


‘சுவடிகளைப் படியெடுப்பதற்கு முன்பு அவற்றைப் பாதுகாக்க வேண்டும். சுவடிகள் உடைந்து சிதையாமல் இருக்க லெமன் கிராஸ் எண்ணெய் தடவிப் பராமரிக்க வேண்டும். அதற்கு ஆண்டுக்கு 250 கிலோ எண்ணெய் தேவைப்படும் , சுவடிகளில் எண்ணெய் பூச தினக்கூலி அடிப்படையில் சில பணியாளர்களை அமர்த்தவேண்டும். இவற்றுக்கு எல்லாமாகச் சேர்த்து ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் தேவைப்படலாம்’ என அத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.


இந்த ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்கு ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட சுவடிகளை அடிப்படையாக வைத்து 5 பேர்கூட பிஎச்டி செய்யவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி பிற கல்லூரிகள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களும் இந்தச் சுவடிகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தால் அது தமிழ்நாட்டின் சமூக, வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். சுவடிகள் முழுவதையும் டிஜிட்டல் படியெடுத்து இணையத்தில் தரவேற்றம் செய்தால் உலக ஆளவில் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். தற்போது எம்.டி.ஶ்ரீநிவாஸ், புஷ்கலா, பரமசிவம் முதலானவர்கள் சில தனியார் நிறுவனங்களின் ஆதரவில் அந்தச் சுவடிகளில் சிலவற்றில் உள்ள தகவல்களைத் தொகுத்து திருப்போரூர், வடக்குப்பட்டு, உள்ளாவூர், குன்றத்தூர் ஆகிய நான்கு ஊர்களைப் பற்றி சிறு நூல்களை வெளியிட்டுள்ளனர். 


இந்தப் பணியை அரசாங்கம் செய்தால்தான் அது சமயச்சார்பற்ற முறையில் இருக்கும். வரலாறு என்பது மதவாத அரசியலால் திரிபுக்குள்ளாக்கப்படும் இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு இதில் அலட்சியம் காட்டக்கூடாது. 


தமிழின் தொன்மையை நிறுவப் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெர்னார்டு சுவடிகளைப் பதிப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 


- ரவிக்குமார் 

நாடாளுமன்ற உறுப்பினர்