சுவாமி சகஜானந்தா, ஐயா இளையபெருமாள் முன்னெடுத்த பண்பாட்டு மூலதன மீட்புப் போராட்டத்தைத் தொடருவோம்! - ரவிக்குமார்

Views : 373

பதிவு செய்த நாள் 28-Sep-2021

(19.09.2021 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற சகோதரர் நீதிவளவன் இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை)

மணவாழ்வில் நுழையும் மணமக்களே, மணமக்களின் பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே! வாழ்த்த வருகை தந்துள்ள தலைவர்களே , செல்லப்பன், தியாகு உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளே, தோழர்களே வணக்கம்!

இன்று மண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இந்த மணமக்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்கே பேசியவர்கள் பெருமையோடு குறிப்பிட்டார்கள். சாதிமறுப்புத் திருமணம்தான் உண்மையிலேயே சுயமரியாதைத் திருமணம். பிராமணர்களை வைத்து சடங்குகளைச் செய்யாமல், சாஸ்திரங்களைப் பின்பற்றாமல் நடத்தப்படுகிற திருமணம்தான் சுயமரியாதைத் திருமணம் என்று பொதுவாகப் பேசப்படுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது இந்த சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை அளித்தார். இந்து திருமண சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதைத் திருமணம் அல்லது சீர்திருத்தத் திருமணம் என்பவையும் சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்கள்தான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசுதான் அறிவித்தது. இந்து மதத்தைச் சேர்ந்த இருவர் தமது உறவினர்கள், நண்பர்கள் அல்லது ஏதோ சில நபர்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் கணவன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறோம் என்று உறுதிமொழி எடுத்தால், மாலை மாற்றிக்கொண்டு மோதிரம் அணிவித்தால் அல்லது தாலி கட்டினால் அது சட்டப்படி செல்லுபடியாகும் என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது. அது ஒரு பாராட்டத்தக்க சட்டத்திருத்தம்தான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால், இந்துமத சடங்கு சம்பிரதாயம் இல்லாமல், பிராமணர்கள் மந்திரம் ஓதாமல், திருமணம் செய்து கொண்டு விட்டால் மட்டுமே அது சுயமரியாதைத் திருமணம் ஆகி விடுமா என்ற கேள்வியை நாம் இப்பொழுது கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்துமதம் என்பது இப்படி சடங்கு சம்பிரதாயங்களில், பிராமணர்களை அங்கீகரிப்பதில் உயிர்த்துப் பரவுகிறது என்பது உண்மைதான். என்றாலும், சாதி என்பது தான் இந்து மதத்தின் ஆணி வேராக இருக்கிறது. அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சுட்டிக்காட்டினார். இந்து மதத்தின் சடங்குகள், சம்பிரதாயங்களை விமர்சித்தவர்கள், எதிர்த்தவர்கள் இந்து மதத்துக்கு உள்ளேயே ஏராளமான பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் சீர்திருத்தவாதிகள் என்று பாராட்டவும் பட்டிருக்கிறார்கள். கடவுளை வணங்குபவர்கள் மட்டுமல்ல கடவுளை மறுத்த நாத்திகர்களும் கூட இந்து மதத்தவர்களாக இருக்க முடியும். நரபலி கொடுக்கும் வழக்கம் உள்ள காபாலிகர் என்ற ஒரு பிரிவு கூட இந்து மதத்தில் இருந்திருக்கிறது. அதுதான் இந்து மதத்தினுடைய வினோதமான தன்மை. எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொண்டு ஒருவர் இந்துவாக நீடிக்க முடியும். ஆத்திகனும் இந்துவாக இருக்க முடியும் நாத்திகனும் இந்துவாக இருக்க முடியும். எனவே சடங்குகளை மறுப்பதால் சம்பிரதாயங்களைக் கைவிடுவதால் ஒருவர் இந்துவாக இல்லாமல் போய்விடுவதில்லை. பிராமணர்களை வைத்துத் திருமணம் செய்து கொள்ளாமல் போவதாலேயே அது இந்துத் திருமணம் இல்லை என்றும் ஆகிவிடாது.

நீங்கள் இந்து மதத்தை உண்மையிலேயே கேள்விக்கு உட்படுத்த வேண்டுமென்று சொன்னால் சாதியை விமர்சனத்திற்கு உட்படுத்தியாகவேண்டும். சடங்குகளை மறுப்பதோடு, சாதியையும் மறுக்க வேண்டும். சாதியைக் கையில் வைத்துக்கொண்டு சடங்குகளை மட்டும் மறுத்துவிட்டு நான் ஒரு சுயமரியாதைக்காரன் என்று சொன்னால் அதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.

பார்ப்பனர்களைத் தவிர்த்து, அவர்கள் சொல்லும் மந்திரங்களைத் தவிர்த்து, ஏன் தாலியைத் தவிர்த்த ஒரு திருமணம் சொந்த சாதியினருக்குள் நடக்கும் திருமணமாக இருந்தால் அது முழுமையான சுயமரியாதைத் திருமணம் அல்ல. சுயமரியாதை - தன்மதிப்பு கொண்ட எவனும் சாதியை உயர்த்திப் பிடிக்க முடியாது. சாதியைப் பரப்புகிறவன், சாதியை நம்புகிறவன் தன்மதிப்போடு வாழ முடியாது. சாதியை ஒருபக்கம் உயர்த்திப் பிடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் நான் பார்ப்பனரை விமர்சிக்கிறேன், சடங்குகளைக் கைவிடுகிறேன் எனவே நான் சுயமரியாதைக்காரன் என்று சொன்னால் அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டில் நாம் பார்த்திருக்கிறோம், பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் செய்து கொள்ளாதவர்கள், சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், சொந்த சாதி பற்றாளர்களாக, ஏன் அதற்கும்மேல் சாதி வெறியர்களாகவே உருமாறி இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்களை சுயமரியாதைக்காரர்கள் என்று நாம் பாராட்ட முடியுமா ? எனவே சாதி மறுப்பில் தான் சுயமரியாதை என்பது அடங்கியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்த மணமக்கள் உண்மையான சுயமரியாதைக்காரர்கள். இவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்தப் பகுதி சுவாமி சகஜானந்தா அவர்கள் பணியாற்றிய பகுதி, அதற்குப் பின்னாலே ஐயா இளையபெருமாள் அவர்களால் பண்படுத்தப்பட்ட பகுதி. சிதம்பரத்தைச் சுற்றியுள்ள இந்தப் பகுதிகளில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே வழிகாட்டியாக, முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கின்றன. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வகுத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாக ஆதிதிராவிட சமூகத்திலிருந்து அண்ணன் நீல கங்காதரனைப்போல பல சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கிறார்கள். என்னைப்போல பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். ஏன் தலைமைச் செயலாளராக, செயலாளர்களாக நீதிபதிகளாகப் பலர் ஆகியிருக்கிறார்கள். இன்றைக்கு இந்த சமூகத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு அதிகாரப் பதவிகளில் பலபேர் அமர்ந்திருக்கிறார்கள். இப்படி அதிகாரத்துக்கு வந்திருக்கிற காரணத்தினால், இந்த மக்களுடைய துன்பங்கள் துயரங்கள் குறைந்து இருக்கின்றனவா? என்று நாம் பார்க்க வேண்டும். சுதந்திர இந்தியாவில், கடந்த 75 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் மீதான வன்கொடுமைகளும் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதைத் தான் புள்ளிவிவரம் காட்டுகின்றது. அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட இந்த மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதைத்தான் அறிய முடிகிறது.

இவர்களுடைய மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 1911 ஆம் ஆண்டில் 24 லட்சம் பேர் பறையர் சமூக மக்கள் இருந்தார்கள் என்று கணக்கெடுப்புக் கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பறையர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 1 கோடி பேர் இருக்கிறார்கள் எனத் தெரியவந்திருக்கிறது. எவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் இவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் இன்னமும் கூட எங்களைப் பொதுப்பாதையில் பிணம் சுமந்து செல்ல அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்; எங்களுக்கு தனிக் குவளையில் தேனீர் கொடுக்கிறார்கள்; எங்களை சாதியின் பெயரால் இழிவு படுத்துகிறார்கள்; எங்கள் பெண்களை சாதியின் பெயரால் அவமானப்படுத்துகிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் ஓலக் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? இந்த மக்கள் தங்கள் வலிமை என்ன என்பதை உணராமல் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

பாராளுமன்ற ஜனநாயக முறையில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கித் தந்த இந்தத் தேர்தல் ஜனநாயக முறையில் மிகப்பெரிய பலம் எதுவென்று கேட்டால் எண்ணிக்கை பலம் தான். பொருளாதார பலத்தை விட அரசியல் பலத்தை விட இந்த எண்ணிக்கை பலம் முதன்மையானது. இந்த பலத்தை வைத்து நாம் அரசியல் பலத்தையும் அடையலாம், பொருளாதார வளத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். அப்படியான எண்ணிக்கை பலம் இருந்தும் அந்த பலத்தை உணராமல் இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த மக்கள் மீது வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அரசியலிலே பதவிகளைப் பிடித்து விடுவதால் மட்டும் நாம் முன்னேறி விட்டோம் என்று அர்த்தம் இல்லை. படித்து பல பதவிகளுக்கு வந்துவிட்டோம் என்பதனால் நாம் அதிகாரத்தை அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல. நாம் நமக்கான பண்பாட்டு மூலதனத்தை மீட்டெடுக்க வேண்டும். அதென்ன பண்பாட்டு மூலதனம்? என்று நீங்களெல்லாம் வியப்போடு கேட்கலாம். நமது பழக்க வழக்கங்களால், நமது உணவு முறையால், உடை உடுத்தும் முறையால், நம்முடைய பேச்சு முறையால், நாம் பின்பற்றுகிற பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவாக்கப்படுவது தான் பண்பாட்டு மூலதனம். இதற்கு முன் நமக்கு பண்பாட்டு மூலதனமே இல்லையா என்று கேட்டால் இந்த நாட்டில் பண்பாட்டில் மிகப் பெரிய செல்வந்தர்களாக இருந்தவர்கள் இந்த மக்கள். வரலாறு அப்படித்தான் சொல்கிறது. வரலாறு என்று சொன்னால் நாமே நம்மை போற்றிப் பாராட்டி எழுதிக்கொண்ட வரலாறு அல்ல. சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட புராண வரலாறு போன்றதல்ல இது. இந்த நாட்டைச் சேராத பிரிட்டிஷ்காரர்கள் எழுதிவைத்த வரலாற்றிலேயே அது இருக்கிறது.

1901 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படும்போது சென்னை மாகாணத்தில் இருக்கிற பறையர் சமூகத்தினர் குறித்து முன்னுரையாக சிலவற்றை எழுதி இருக்கிறார்கள் . ‘ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் பறையர் என்ற பெயர் எங்கும் இல்லை. எயினர் என்ற தொல்குடி பற்றிய விவரங்கள்தான் இருக்கின்றன. அவர்கள் பிற மக்களிடமிருந்து வேறுபட்டவர்களாக, கிராமங்களில் வாழாமல் தமக்கென்று கோட்டைகள் கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப்படுகின்றனர். ஆம்பூர், வேலூர் முதலான இடங்களில் அத்தகைய கோட்டைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. பறையர் சமூகத்தினரின் முன்னோர்களாக அவர்களே இருந்திருக்க வேண்டும். 1891 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தச் சமூகம் பற்றி கூறப்பட்ட விவரங்களை வைத்து பார்க்கும்போது இது உயர்ந்த நிலையிலிருந்த ஒரு சமூகமாக இருந்தது, தற்சார்பு கொண்ட சமூகமாக இருந்தது என்பது தெரிகிறது. அரசர், கம்மாளர், குயவர், நாவிதர், வண்ணார், செம்மான், வைத்தியர் முதலான உட்பிரிவுகள் இந்த சமூகத்தில் குறிக்கப்பட்டுள்ளன. தற்போதும் கூட இந்த சமூகத்திற்கான நாவிதர்களும், வண்ணார்களும் உள்ளனர். இவர்கள் கூர்மையான அறிவு பெற்றவர்கள் என்பதை ஐரோப்பியர்களிடம் பணியாளர்களாக அமர்த்தப்பட்டுள்ள இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு புரிந்துகொள்ள முடிகிறது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பார்த்தால், ஆந்திரா தமிழ்நாடு கேரளா ஆகியவை சேர்ந்து இருந்த சென்னை மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்த ஒரு சமூகம் எதுவென்று பார்த்தால் அது ஆதிதிராவிடர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பறையர் சமூகம் தான். அதுதான் மிக அதிகமான எண்ணிக்கையில் இருந்த சமூகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2011 ஆம் ஆண்டு புள்ளி விவரத்திலும் கூட அதே நிலைதான் நமக்குத் தெரியவருகிறது. ஒரு கோடி பேர் இந்த பறையர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த சமூகம் உயர்ந்த பண்பாடு கொண்டதாக இருந்தது, அறிவாற்றல் நிரம்பியதாக இருந்தது, அதிக எண்ணிக்கை கொண்டதாக இருந்தது, அரசாட்சி செய்த சமூகமாக இருந்தது என்று நாம் சொல்லவில்லை இந்த நாட்டை பல நூறு ஆண்டு காலம் ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படியான வரலாறு கொண்ட ஒரு சமூகம் எப்படி இழிநிலைக்குத் தள்ளப்பட்டது?. அந்த இழிநிலையிலேயே அது எப்படி தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது? என்பதை நாம் ஆராய வேண்டும். அப்போதுதான் பண்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும்.

பண்பாட்டின் முக்கியத்துவத்தை முதலிலே உணர்ந்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள். அதனால் தான் அவர் இந்த மக்களை இழிவான பண்பாட்டிலிருந்து, இவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழி தொழில்களிலிருந்து இவர்களை மீட்க வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டார். நீங்கள் மாட்டு மாமிசம் உண்ணாதீர்கள், பறை அடிக்காதீர்கள், செத்த விலங்குகளை அப்புறப்படுத்தும் வேலையைச் செய்யாதீர்கள், மற்ற சமூகத்தினர் இறந்துபோனால் அவர்களுக்காகக் குழி வெட்டாதீர்கள், அவர்கள் இழவு செய்தி சொல்லச் சொன்னால் அதற்காக ஊர் ஊராகப் போகாதீர்கள் என்று இந்த மக்களிடையே பிரச்சாரம் செய்தார். இழி தொழில்களை ஒழிக்க வேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்தார். தமிழ்நாட்டில் இப்படியான பண்பாட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய முன்னோடி சுவாமி சகஜானந்தா அவர்கள். அவரைப் போல இந்தப் பிரச்சாரத்தை வலுவாக மேற்கொண்ட ஒருவரைத் தமிழ்நாட்டில் வேறு எங்கும் பார்க்க முடியாது. ஏன் இந்தியாவிலேயே அப்படி ஒருவர் இருந்தாரா என்பது தெரியவில்லை. இன்றுவரை அந்தப் பிரச்சாரத்தின் தாக்கத்தை நாம் பார்க்கிறோம். இப்போது கூட காட்டு மன்னார்குடி தாலுக்காவிலே, சிதம்பரம் தாலுக்காவிலே யாரும் பறை அடிக்க முடியாது என்கிற நிலை இருக்கிறது. சுவாமி சகஜானந்தாவும், அதற்குப் பிறகு அவரைத் தொடர்ந்து ஐயா இளையபெருமாள் அவர்களும் செய்த பண்பாட்டு மூலதன மீட்புப் பிரச்சாரங்கள்தான் அதற்குக் காரணம்.

ஐயா இளையபெருமாள் அவர்கள் நாடாளுமன்றத்திலும் கூட இந்தப் பிரச்சினையை எழுப்பி இருக்கிறார். நான் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது அவர் அங்கே என்ன பேசியிருக்கிறார் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தேன். ‘தென்னிந்தியாவில் தொழிலாளர்கள் பலர் அவர்களது விருப்பத்துக்கு மாறாக செத்த கால்நடைகளை அகற்றும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பறை அடிக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் குறைந்தபட்சக் கூலி சட்டத்துக்குள் வருமா?’ என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். 1958 ஆம் ஆண்டில் அப்படி நாடாளுமன்றத்தில் கேட்டிருக்கிறார். அப்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வி வி கிரி அவர்கள் ‘மாண்புமிகு உறுப்பினர் விவசாயத் தொழிலாளர்களை சங்கமாக திரட்டி அவர்களது உரிமைக்காகப் பாடுபடவேண்டும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். இப்படியான வரலாறு கொண்ட பகுதி இது. பண்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பாரம்பரியம் கொண்ட பகுதி இது.

ஏன் சுவாமி சகஜானந்தா அவர்கள் மாட்டு இறைச்சி உண்ணக்கூடாது என்று சொன்னார்கள்? பறை அடிக்கக்கூடாது என்று சொன்னார்கள்? செத்த மாடு எடுக்கக்கூடாது என்று சொன்னார்கள்? என்பதைப்பற்றி நம்முடைய இளைஞர்களிடத்தில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் செய்தது சாதாரண காரியம் அல்ல, அது ஒரு பண்பாட்டுப் புரட்சி! பண்பாட்டு களத்திலே அத்தகைய காரியங்களைச் செய்யாமல் நாம் எவ்வளவுதான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் எவ்வளவுதான் படித்தாலும் எவ்வளவுதான் பதவிகளுக்கு வந்தாலும் நம்மை இழிவாகத்தான் நடத்துவார்கள். இழிவான சமூகத்தின் ஒரு அங்கமாகத்தான் நம்மைப் பார்ப்பார்கள். அந்தப் பார்வையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று சொன்னால் நமது பண்பாட்டு மூலதனத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆற்றலை நமக்கு சுவாமி சகஜானந்தாவும், ஐயா இளையபெருமாள் அவர்களும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூறி, உண்மையான சுயமரியாதைத் திருமணத்தை செய்து கொண்டிருக்கிற இந்த மணமக்களை தலைவர் எழுச்சித்தமிழர் சார்பிலும் எனது சார்பிலும் நெஞ்சார வாழ்த்தி, வாழ்க மணமக்கள்! என்று கூறி நிறைவு செய்கிறேன், வணக்கம்.