விஸ்வரூபம்: தடையைத் தாண்டி சில சிந்தனைகள்

Views : 216

பதிவு செய்த நாள் 08-Jan-2020

 தமிழர்கள்,சினிமாவை சாப்பிட்டு ஜீவிக்கிறார்கள்.தமிழ் சினிமாவோ தமிழர்களை சாப்பிட்டு செழிக்கிறது.இத்தகைய அரிதினும் அரிதான நிலை உலகில் வேறு எங்குமே இருக்காது. குழந்தையைக் கொஞ்சும் அம்மா, காதலியிடம் பேசும் இளைஞன், மகனின் சடலத்தைப் பார்த்துக் கதறும் அப்பா- எல்லோருமே ஏதோ ஒரு திரைப்படக் காட்சியை மனதில் நினைத்தபடிதான் அதைச் செய்யமுடியும்.சவால்களை மட்டுமல்ல வசைகளையும்கூட தமிழர்கள் சினிமா வசனங்களிலிருந்துதான் இரவல் பெறுகிறார்கள்.தமிழர்களின் அந்தரங்க வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சினிமாவின் ரேகை பதிந்துகிடக்கிறது.விஸ்வரூபம் போன்ற ஒரு கமர்ஷியல் படம் இங்கு மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தமுடிவது இதனால்தான்.

 

விஸ்வரூபம் தடைசெய்யப்பட்டபோது கமலஹாசன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புகளில் தமிழ் சினிமாவின் நவரசங்களையும் நாம் பார்க்கமுடிந்தது.அவலச்சுவை சற்று தூக்கலாக இருந்தாலும், கலஹாசன் பிசிரின்றிப் பேசிய வார்த்தைகளைக் கேட்டுப் பார்வையாளர்கள் நெகிழ்ந்துபோனார்கள்.’ விதையாக வீழ்வேன்.மரமாக முளைப்பேன்’ ‘எனது வண்ணமும் என்ணமும் இவர்களுக்குத் தெரியும்’ என்றெல்லாம் அவர் பேசியபோது அவரது ’ப்ரஸ் மீட்’ ஒரு திரைப்படமாக விரிவடைந்தது. ’கடன் கொடுத்தவர்கள் வீட்டை எடுத்துக்கொள்வார்கள்’, ’மதச்சார்பற்ற மாநிலத்தையோ நாட்டையோ தேடிச் செல்வேன்’என்று நா தழுதழுக்க அவர் கூறியபோது அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

 

கோடிக்கணக்கில் முதலீடு செய்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், தான் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டித்தராமல் போய்விடுமோ என்ற கவலை கமலஹாசனுக்கு இருந்தது தவறில்லை.வணிகரீதியில் அந்தப் படம் வெற்றிபெறுமா என்பதை நாம் இப்போதே சொல்லமுடியாது என்றாலும் அவருக்கு நட்டம் ஏற்படாது என்று உறுதியாக நம்பலாம்.கமலும் அவரது சகோதரரும் அவ்வப்போது சொன்ன 60 கோடி முதல் 80 கோடி வரையிலான நட்டக் கணக்கை, பிரச்சனையின் ‘டெம்போ’வைத் தக்கவைப்பதற்காக அவர்கள் கையாண்ட உபாயம் என எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர அதை நாம் உண்மையென்று நம்பத் தேவையில்லை.

  

விஸ்வரூபம் சர்ச்சையை விட்டுவிட்டு நமது ஊடகங்கள் வேறு பிரச்சனைகளைத் தேடிப் போய்விட்டன.டெலிவிஷன் காமிராக்களைப் பின்தொடர்ந்து செல்லும் நமது கண்களையும் மூளையையும் சற்றே நிறுத்தி திரைப்படம் தொடர்பான சில விஷயங்களை நாம் விவாதிக்கவேண்டும்:

 

1. ஒரு திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கும்போது பின்பற்றுவதற்காகத் திரைப்படத் தணிக்கைத் துறை சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.ஒரு படத்தைப் பார்க்கும்போது அவற்றை நமது சென்சார் போர்டு உறுப்பினர்கள் நினைவில் கொள்கிறார்களா என்ற ஐயம் நமக்கு எழுகிறது. அந்த விதிமுறைகளைப் படித்துப் பார்த்தால் எழுபத்தைந்து சதவீத தமிழ்த் திரைப்படங்களில் வெட்டவேண்டிய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை நாம் உணரமுடிகிறது.வன்முறையைப் போற்றவோ நியாயப்படுத்தவோ கூடாது என்பது அதன் முதல் விதி. இந்த விதியை சரியாகக் கடைபிடித்திருந்தால் ரஜினி,விஜய்,அஜித் படம் ஒன்றில்கூட இப்போதிருக்கும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருக்கமுடியாது.நீதிக்காகத் தானே அந்தப் படங்களில் கதாநாயகர்கள் சண்டைபோடுகிறார்கள் எனக் கூறப்படலாம். ஒரு மனித உடல் எந்த அளவுக்கு வன்முறையைத் தாங்கும் என்பதுகுறித்த புரிதலை பார்வையாளர்களிடம் முற்றாக அழிக்கும் விதமாக அந்த சண்டைக்காட்சிகள் அமைந்திருக்கின்றன.அந்தக் காட்சிகளைப் பார்க்கிறவர்கள் ஒரு மனிதனைக் கட்டையால் அடிக்கவோ, இரும்புக் கம்பியால் தாக்கவோ தயங்க மாட்டார்களில்லையா?

 

2.வன்முறைக் காட்சிகளில் குழந்தைகள் ஈடுபடுவதுபோலவ,வன்முறைக்கு ஆளாவதுபோலவோ, அவர்கள் அத்தகைய காட்சிகளைப் பார்ப்பதுபோலவோ திரைப்படங்களில் காட்டக்கூடாது.மாற்றுத் திறனாளிகளைக் கேலிசெய்வதுபோலவோ அவமதிப்பதுபோலவோ காட்டக்கூடாது என்பது மூன்றாவது விதி.நமது திரைப்படங்களில் இந்த விதி கடைபிடிக்கப்படுகிறதா?சண்டைக் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காகத் தமிழ் சினிமாக்கள் பலவற்றில் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.மாற்றுத் திறனாளிகளை இழிவுசெய்துதான் நமது படங்களின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

 

3.மத இன சமூக ரீதியில் ஒருவரைப் புண்படுத்தும் விதமான சொற்களோ காட்சிகளோ இடம்பெறக்கூடாது என்பது பன்னிரெண்டாவது விதி.தற்போதைய சர்ச்சை இந்த விதியின்கீழ் வரக்கூடியது.இஸ்லாமியர் குறித்த ’ஸ்டீரியோடைப்’ படிமத்தை இந்தியத் திரைப்படங்கள் எப்படி மீண்டும் மீண்டும் பரப்புகின்றன என்பதுபற்றி ஏராளமான ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன.ஆனால், அதைப்பற்றி திரைத் துறையினரோ தணிக்கைக் குழு உறுப்பினர்களோ எந்தவொரு அக்கறையும் காட்டுவதில்லையென்பது உண்மையில்லையா?கமலஹாசன் நடித்த படங்கள் இருக்கட்டும் அவர் தயாரித்த படங்களிலாவது இந்த அக்கறை வெளிப்பட்டதுண்டா?தியேட்டர்களைத் தாக்கியவர்களை விடுவித்துவிடுங்கள் என்று சொன்னபோது கருணை கசிய அவரிடம் வெளிப்பட்ட சகோதர உணர்வு ஏன் அவரது படங்களில் இல்லாமல் போனது?

 

4.இஸ்லாமியரைச் சித்திரிப்பது மட்டுமல்ல பெண்களைச் சித்திரிப்பதிலும் எந்தவொரு பொறுப்புணர்வும் திரைப்படத் துறையினருக்கு இருப்பதில்லை.இதைப்பற்றித்தான் மிக அதிகமான விதிகளை திரைப்படத் தணிக்கைத் துறை வகுத்திருக்கிறது.

 

*மனித உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய வக்கிரமான ஆபாசமான காட்சிகள் இடம்பெறக்கூடாது ( விதி 7)

*கீழ்த்தரமான அர்த்தம் கொண்ட இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறக்கூடாது ( விதி 8)

*பெண்களை எந்தவகையிலும் இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெறக்கூடாது ( விதி 9)*பெண்களைக் கற்பழிப்பது, கற்பழிக்க முயல்வது, மானபங்கப்படுத்துவது முதலான காட்சிகள் கூடாது. ஒருவேளை படத்தின் கதைக்கு அது முக்கியம் என்றால் *மிகக்குறைந்த அளவில் இருக்கலாம், ஆனால் அதை விவரிப்பதாக அக்காட்சி அமையக்கூடாது ( விதி 10 )

*பாலியல் வக்கிரங்களை சித்திரிக்கும் காட்சிகள் கூடவே கூடாது ( விதி 11)

- இப்படி  ஐந்து விதிகளை இதற்கென்றே தணிக்கைத் துறையினர் வகுத்திருக்கிறார்கள்.தமிழ்த் திரைப்படங்களில் இந்த விதிகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா?

 

5. திரைப்படங்களுக்கு மாநில அரசு வழங்கிவரும் வரிச்சலுகைகள் தேவைதானா என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். அனேகமாக எல்லா தமிழ்த் திரைப்படங்களுக்கும் இப்போது கேளிக்கை வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது ( கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் திட்டம் இதுவாகத்தான் இருக்கும்).நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத் துறைக்கு வழங்கப்படுவதைவிடவும் திரைப்படத் துறைக்கு ஆட்சியாளர்கள் முன்னுரிமை வழங்குவது ஏன்?

 

6. திரைப்படத்தை ஒரு கலைப்படைப்பாகக் கருதிதான் மத்திய அரசு இந்த  தணிக்கை விதிகளை வகுத்திருக்கிறது.ஆனால் எல்லாத் திரைப்படங்களையும் நாம் கலைப் படைப்பு என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்க முடியுமா?நமது திரைப்படங்களில் பெரும்பாலானவை பண்டங்கள் என்ற வகைப்பாட்டுக்குள்தான் வரும். விஸ்வரூபமும் அப்படியான ஒரு பண்டம்தான்.அவற்றை அந்த விதத்தில்தான் அணுகவேண்டும்.அவற்றுக்குப் பிரச்சனை வந்தாலும் அந்த நிலையில் வைத்துத்தான் பரிசீலிக்கவேண்டும்.அவற்றுக்குக் கலைப் படைப்பு என்ற மதிப்பைக் கோருவதோ அவற்றின் தயாரிப்பாளர்களையும், அவற்றில் பங்கேற்றவர்களையும் கலைஞர்கள் எனக் கருதவேண்டும் எனச் சொல்வதோ சரியானதுதானா?

 

“இப்படிப் பல்வேறு கேள்விகள் இந்தப் பிரச்சனையையொட்டி எழுகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் விவாதிப்பதற்கு ஊடகங்கள் அக்கறை காட்டுவதில்லை.தமிழில் காட்சி ஊடகங்கள் பெருகிவிட்டன, அவை விவாத நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்துகின்றன என்றபோதிலும் அவை வழங்கும் ’வரையறுக்கப்பட்ட வெளி’யில் அவை முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகவே அந்த விவாதங்கள் அமைந்துவிடுகின்றன.அவற்றில் பங்கேற்கும் எவரும் அவற்றின் பார்வைக் கோணத்தைத் தாண்டி விவாதத்தை நகர்த்த அங்கு வாய்ப்பிருப்பதில்லை.

 

 

2

 

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக மத்திய அமைச்சர் மணிஷ் திவாரியும் தமிழக முதல்வரும் கூறியிருக்கும் கருத்துகள் சினிமா துறை தொடர்பான இன்னொரு பிரச்சனையை அடையாளம் காட்டியிருக்கின்றன. ஒரு திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என மணிஷ் திவாரி சொல்ல தடை விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.திரைப்படத் தணிக்கை விதிகளைத் திருத்துவது தொடர்பாக இப்போது மத்திய அரசு குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது.

 

திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் மத்திய பட்டியலில்தான் உள்ளது.ஆனால் ஒரு திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கருதினால் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அதற்குத் தடை விதிக்க முடியும்.திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் பிரிவு 13 (1) இந்த அதிகாரத்தை வழங்குகிறது.தடை விதித்தால் அந்தத் தகவலையும் அதற்கான காரணத்தையும் அவர் மத்திய அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.அதை ஏற்கவோ ரத்து செய்யவோ மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.

 

மத்திய அரசின் அதிகாரத்தை செயல்படுத்துகிறவர்களாக தணிக்கைக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.அவர்களுக்குக் குறிப்பான தகுதிகள் எதையும் மத்திய அரசு வரையறுக்கவில்லை.சினிமா பேசுகிற மொழிக்கு அப்பால் பிம்பங்கள் பேசும் ‘சினிமா மொழி’ என ஒன்றிருக்கிறது.அதைப் புரிந்துகொள்ள ஒருவர் கலை குறித்த அறிவு உள்ளவராக இருக்க வேண்டும்.அப்படியானவர்கள்தான் தணிக்கைக் குழுக்களில் இடம்பெறவேண்டும்.ஆனால் நமது தணிக்கைக் குழுக்களோ ஆட்சியாளர்களின் அபிமானிகளால் நிரப்பப்பட்டுள்ளன.அவர்களுக்கு ’சினிமா மொழி’ தெரியவில்லையென்றாலும் சினிமா பேசுகிற மொழியாவது தெரிந்திருக்க வேண்டுமில்லையா?அதுகூட இல்லையென்பதுதான் வேதனை.

 

பல மொழிகள் பேசுகிற, பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிற இந்தியாவில் பெரும்பாலான திரைப்படங்கள் அந்தந்த மாநில மொழிகளிலேயே தயாரிக்கப்படுகின்றன.அந்தத் திரைப்படங்களின் வசனங்களையும் காட்சிகள் வெளிப்படுத்தும் அர்த்தங்களையும் அந்த மொழி தெரிந்தவர்களால்தானே நன்றாகப் புரிந்துகொள்ளமுடியும்?ஆனால் தற்போதிருக்கும் நடைமுறை அதற்கும்கூட முக்கியத்துவம் தரவில்லை.எந்த மொழியில் ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தாலும் அதை இந்தியாவின் ஏதாவதொரு பிராந்திய தணிக்கைக் குழுவிடம் காட்டி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.தமிழ்ப் படங்களுக்கு மும்பையிலும் இந்திப் படங்கள் பலவற்றுக்கு சென்னையிலும் இப்படித்தான் தணிக்கைச் சான்றிதழ்கள் பெறப்படுகின்றன.

 

நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் திரைப்படத் தணிக்கை அதிகாரம் முதலில் பொதுப் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தது.பின்னர்தான் அதை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றினார்கள்.அரசியலமைப்புச் சட்ட அவையில் அந்த சட்டத்தின் ஒவ்வொரு உறுப்பாக விவாதித்து நிறைவேற்றிய நேரத்தில் எச்.வி.காமத்,ராஜ் பகதூர்,பி.எஸ்.தேஷ்முக்,ஜி.துர்காபாய் முதலானோர் 31.08.1949 அன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அதைப் பொதுப் பட்டியலிலேயே தொடரச்செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததுபோல மாகாண அளவில் தணிக்கைக் குழுக்கள் இருப்பதே நல்லது என்றனர்.”திரைப்படத் தணிக்கை அதிகாரம் என்பது திரைப்படத்தைக் கட்டுப்படுத்துவது என்பதாக மட்டுமில்லாமல் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதாகவும் இருக்கவேண்டும்.அதை கலையாக மட்டும் பார்க்காமல் கல்வி என்ற நோக்கிலும் அணுகவேண்டும்.திரைப்படம் என்ற ஊடகம் தேசத்தின் பண்பை வடிவமைப்பதில் பெரும்பங்கு ஆற்றமுடியும்” என ராஜ் பகதூர் கருத்து தெரிவித்தார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய ஜி.துர்காபாய், “தற்போது மக்களின் மீது திணிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் கல்வி மதிப்பு அற்றவையாக இருக்கின்றன.நமது கலாச்சாரத்துக்கு ஊறு விளைவிக்கும்விதமாக குமட்டலெடுக்கவைக்கும் பாடல்கள், மலிவான கதைகள் கொண்டவையாக அவை இருக்கின்றன. எனவே திரைப்படங்களின் தரத்தை உயர்த்துவதற்கு நாம் கவனம் செலுத்தவேண்டும்” என்று பேசிய அவர், “ திரைப்படங்களைத் தணிக்கை செய்யும்போது மாகாணங்களின் நலன்களைக் கவனத்தில்கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“ தற்போது ஒவ்வொரு மாகாணமும் தமக்கென்று தனியே தணிக்கை வாரியங்களை வைத்திருக்கின்றன. மத்திய அரசின் வாரியத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைவிடவும் ஒரு திரைப்படத்தின் மொழியைப் புரிந்துகொள்வதில் அந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கமுடியும். ஒன்று,மத்திய வாரியத்தில் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கவேண்டும்.அல்லது, அனைத்து மொழிகளையும் தெரிந்த உறுப்பினர்கள் இருக்கவேண்டும்” என்று பேசிய எச்.வி.காமத், அதன் சாத்தியமின்மையை எடுத்துக்காட்டினார். விவாதத்தின் இறுதியில் அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய அம்பேத்கர்,“ தணிக்கை அதிகாரத்தை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன: நாடு முழுவதும் ஒரே மாதிரியான தணிக்கை விதிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் மாகாணங்களிடம் இந்த அதிகாரத்தைக் கொடுத்தால் தாம் விரும்பும் தரத்தில் இல்லை எனக் காரணம்காட்டி ஒரு திரைப்படத்துக்குஅனுமதி மறுக்கப்படலாம்.ஒவ்வொரு மாகாணமும் தம் விருப்பத்துக்கேற்ப விதிகளை வகுத்துக்கொண்டால் அது சரியா இல்லையா என மத்திய அரசு சோதித்துக்கொண்டிருக்கவேண்டும்.அதைக்காட்டிலும் இந்த அதிகாரத்தை மத்திய பட்டியலுக்குக் கொண்டுவந்துவிடுவதே சிறந்தது” என்று விளக்கமளித்தார்.அதன்பின்னர் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

தணிக்கை அதிகாரத்தை மாநில அரசுகள் துஷ்பிரயோகம் செய்யாது என நாம் உத்தரவாதம் அளிக்கமுடியாது.ஆனால், அது மத்திய அரசாலும்கூட துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பதற்குக் கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட பல்வேறு திரைப்படங்கள் சான்றுகளாக இருக்கின்றன.மாநில காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்பதால் காவல் துறை அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டுவிட அனுமதிக்கமுடியுமா? எனவே ’துஷ்பிரயோகம்’ என்ற அச்சத்தை மட்டுமே வைத்து தணிக்கை அதிகாரத்தை மாநிலங்களுக்குத் தராமல் மறுப்பது சரியல்ல. அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் மாநில அரசு பற்றிய அச்சம் அதிகமாக இருந்திருக்கலாம். 'மாநில அரசு என்பது அந்தந்த மாநிலத்தில் இருக்கும் பெரும்பான்மை மத /சாதியினரின் ஆதிக்கமாக அமைந்துவிடலாம், அப்படி நேர்ந்துவிட்டால் அங்கு ஜனநாயகம் இருக்காது, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சர்வாதிகாரமாகவே அந்த ஆட்சி இருக்கும்' என்ற அச்சமே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரக்கூடாது என்ற அம்பேத்கரின் அணுகுமுறைக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் .ஆனால் , பிராந்திய மொழிப் படங்கள் மிக அதிகமாகத் தயாரிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் மாநிலப் பட்டியலில் அதை வைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

 

3

 

தற்போது நடைமுறையில் இருக்கும் திரைப்படத் தணிக்கை சட்டம் 1952ல் உருவாக்கப்பட்டது.காலத்துக்கேற்ப அதை மாற்றியமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்துவிட்டது.சினிமா தணிக்கையின் சாதக பாதகங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற பஞ்சாப் மாநில தலைமை நீதிபதி ஜி.டி.கோஸ்லா தலைமையில் 1968ல் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு அது தனது அறிக்கையை 1969ல் சமர்ப்பித்தது. ”தணிக்கை வாரியம் சுதந்திரமான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கவேண்டும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது.தணிக்கை விதிகள் அந்த சுதந்திரமான அமைப்பினால் உருவாக்கப்படவேண்டும்” என அது கூறியது.ஆனால், அந்த அறிக்கை இதுவரை மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை.

 

’திரைப்படத் தணிக்கைச் சட்டத்தைத் திருத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என தற்போது மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி கூறியிருக்கிறார்.2010 ஆம் ஆண்டே அதற்கான சட்ட மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு அதன்மீது பொதுமக்களின் கருத்தும் கேட்கப்பட்டது. தணிக்கை வாரிய உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்கவேண்டும்; மேல்முறையீட்டுக்கென ட்ரிப்யூனல் ஒன்றை உருவாக்கவேண்டும் என்பவை தவிர அந்த மசோதாவில் புதிதாக எதுவுமில்லை. இந்தியாவின் தற்போதைய கலாச்சார சூழலை அது கவனத்தில் கொள்ளவில்லை என்பதுமட்டுமின்றி முழுநீளத் திரைப்படத்துக்கும் ஆவணப் படத்துக்குமான வித்தியாசத்தைக்கூட அந்த மசோதா புரிந்துகொள்ளவில்லை.அதை சட்டமாக்குவதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

 

4

விஸ்வரூபம் படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வைத்ததில் தமிழ்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் ’வெற்றி’பெற்றிருக்கின்றன.இந்த வெற்றி தமிழில் இனிமேல் அத்தகைய காட்சிகளைக்கொண்ட திரைப்படங்கள் வெளிவராது என்பதற்கான உத்தரவாதமல்ல. மதச்சார்பற்ற சக்திகளின் தொடர்ந்த விழிப்புணர்வாலும், கண்காணிப்பினாலும்தான் நீண்டகாலமாகத் தமிழ்த் திரைப்படங்களால் பரப்பப்பட்டுவரும் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான கருத்துகளைத் தடுத்து நிறுத்தமுடியும். இந்தப் பணியில் முஸ்லிம்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது.விஸ்வரூபம் பிரச்சனையின்போது கமலஹாசனுக்கு ஆதரவாகப் பெருகிய குரல்களின் பின்னே இஸ்லாமியர்கள்மீதான அதிருப்தியும் ஒலித்துக் கொண்டிருந்ததை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இப்படியான அதிருப்திதான் காலப்போக்கில் அவர்களுக்கு எதிரான வெறுப்பாக உருப்பெறுகிறது.இதை உணர்ந்து அவர்கள் ஜனநாயக சக்திகளோடு தம்மை ஒன்றிணைத்துக்கொள்ளவேண்டும்.

 

விஸ்வரூபம் படம் உருவாக்கிய பேச்சு இப்போது ஓய்ந்துபோய்விட்டது.ஆனால் கலையின் சுதந்திரம்,  மாநில உரிமைகள் குறித்து அக்கறை உள்ளவர்கள் இத்துடன் ஓய்ந்துவிடக் கூடாது .

 

மத்திய பட்டியலில் இருக்கும் திரைப்படத் தணிக்கை அதிகாரம் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்.மாநில உரிமைகளுக்காகப் பரிந்துபேசும் கட்சிகள் இதையும் தமது செயல்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

 

”சுதந்திரமும் தன்னதிகாரமும் கொண்ட அமைப்பாக மாநில தணிக்கை வாரியம் உருவாக்கப்படவேண்டும்.அதன் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியின் அந்தஸ்தில் இருக்கவேண்டும்.அதன் உறுப்பினர்கள் அந்த வாரியத்தின் ஊதியம் பெறும் முழுநேரப் பணியாளர்களாக இருக்கவேண்டும்” என கோஸ்லா கமிட்டி சொன்ன பரிந்துரை ஏற்கப்படவேண்டும்.

 

திரைப்படத் தணிக்கை அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதா அல்லது மாநில அரசிடம் இருப்பதா என்பதோடு இந்தப் பிரச்சனை முடிந்துவிடவில்லை.திரைப்படங்கள் உண்மையான கலைப்படைப்புகளாக உருவாக்கப்படுவதற்கும், அதற்கு உதவும் வகையில் திரைப்படத் தணிக்கை வாரியம் செயல்படுவதற்கும் தேவையானவை எவை என்பதை பொறுப்போடு சிந்திக்கவேண்டிய தருணம் இது. 

 

பிப்ரவரி 2012