சுத்தம்

Views : 34

பதிவு செய்த நாள் 08-Jan-2020

காடாக சம்பு

கரையோரம் அடர்ந்திருக்கும்.

 

கை கோர்த்து ரகசியமாய்

'முதலைப் பூண்டு' நீந்திவர

நடு நடுவே நீர் சிரிக்கும்.

 

ஊறவைத்த மூங்கில்

துளிர்த்திருக்கும்.

ஓரத்தில்-

மீன்கொத்தி குறி பார்க்கும்.

 

சிலசமயம்

கெண்டைக்கால் பெரிய

விரால் மீன்கள் துள்ளி விழும்.

 

காலையிலும் மாலையிலும்

சிவன் கோயில் கலசங்கள்

முகம் பார்க்கும் ஊர்க்குளத்தில்

 

மாடு குளிப்பாட்டலாம்

பீத்துணி அலசலாம் .

சூத்தும் கழுவலாம்.

 

நாங்கள் மட்டும்தான்

தண்ணி மொள்ளக்கூடாது.