சமத்துவம் என்ற கோட்பாட்டை அழிப்பதே சனாதனப் பயங்கரவாதிகளின் திட்டம் - ரவிக்குமார்

Views : 617

பதிவு செய்த நாள் 11-Mar-2020

சமத்துவம் என்ற கோட்பாட்டை அழிப்பதே சனாதனப் பயங்கரவாதிகளின் திட்டம்

- ரவிக்குமார் 


சகோதரர்களே! சகோதரிகளே! 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 26 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த 26 நாட்களில் இந்த சட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பிஆர், என் ஆர் சி என்பவை எவ்வளவு மோசமானவை என்பதையெல்லாம் நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு பலரும் அவற்றைப் பற்றி எடுத்துக் கூறி இருப்பார்கள். ஒரு அம்சத்தை மட்டும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

குடியுரிமை திருத்தச் சட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது? நம்முடைய வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். வாக்குரிமை என்பது சமத்துவத்தின் அடையாளம். அந்த சமத்துவத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு சமத்துவம் என்பது என்னவென்றே இங்கு எவருக்கும் தெரியாது. ஏற்றத்தாழ்வைத் தன்னுடைய கோட்பாடாகக் கொண்டிருக்கிற ஒரே மதம் உலகத்தில் இந்து மதம்தான் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூறியிருக்கின்றார். பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தன்னுடைய தத்துவமாகக் கொண்டிருக்கிற மதம் இந்து மதம் மட்டும்தான். இவர்களுக்கு சமத்துவத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. 

‘சட்டத்துக்கு முன்னால் சமம்’ என்கிற நிலையும் இங்கே ஒருபோதும் இருந்தது கிடையாது. ஒரு சாதியைச் சேர்ந்தவன் ஒரு குற்றத்தைச் செய்தால் அவனுக்கு ஒரு தண்டனை, அதே குற்றத்தை இன்னொரு சாதியைச் சேர்ந்தவன் செய்தால் அவனுக்கு வேறு விதமான தண்டனை என்ற நிலைதான் இருந்தது. பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் ஒரு கொலையைச் செய்துவிட்டால் அவர் ஒரு கோயிலில் நந்தா விளக்கு ஏற்றினால் போதும் என்று இருந்தது. கல்வெட்டுகளில் அத்தகைய செய்திகள் பதிவாகியுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சாதாரண தவறு செய்துவிட்டால் கூட அவரைக் கடுமையாகத் தண்டிக்கும் முறை இங்கே நடைமுறையில் இருந்தது. இதையெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் மாற்றினார்கள். 1860 ஆம் ஆண்டு அவர்கள் இங்கே அறிமுகப் படுத்திய இந்திய தண்டனைச் சட்டம் தான் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற நிலையை முதன்முதலில் உருவாக்கியது. அதற்கு முன்னாலே அத்தகைய நிலை இங்கு இல்லை.

சுதந்திர இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமத்துவம் என்கிற கோட்பாட்டை உள்ளீடாக வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 எல்லோரும் சமம் என்பதை உறுதிசெய்கிறது. ஆணும் பெண்ணும் சமம் ; இந்து-முஸ்லிம்; பணக்காரன்- ஏழை எல்லோரும் சமம் என்று அந்த உறுப்பு கூறுகிறது. இந்த நாட்டின் குடிமக்களை மட்டுமல்ல இந்த நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களையும்கூட சமமாக நடத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. அந்த சமத்துவக் கோட்பாடு குடிமக்கள் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று கூட பேதம் பாராட்டவில்லை. அத்தகைய ஒரு கோட்பாட்டை இந்த நாட்டினுடைய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வைத்ததுதான் புரட்சியாளர் அம்பேத்கருடைய சாதனை. அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. சமத்துவத்தை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறையையும் அதற்குள்ளே கொண்டுவந்தார். அதுதான் ‘அனைவருக்கும் வாக்குரிமை’ என்பது. அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பொறுப்பேற்றதற்குப் பின்னாலே அவருக்கு உதித்த சிந்தனை அல்ல அது. 1919 ஆம் ஆண்டே அவர் அதை தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் எத்தகைய ஆட்சி முறையைக் கொண்டு வருவது, இந்திய நிர்வாகத்தை எப்படி அமைப்பது என்பதைப் பற்றிய கருத்துக்களை கேட்பதற்காக இங்கிலாந்திலிருந்து ஒரு குழு இந்தியாவுக்கு வந்து இங்கிருப்பவர்களிடத்தில் கருத்துக்களைக் கேட்டது. ‘சௌத்பரோ குழு’ என்ற அந்த குழுவின் முன்னாலே தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்த அம்பேத்கர், அப்பொழுதே இதை வலியுறுத்தியிருக்கிறார். அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அதைத்தான் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுகிற வாய்ப்பைப் பெற்ற நேரத்தில் அம்பேத்கர் செயல்படுத்தினார். உறுப்பு 326 மூலமாக அனைவருக்கும் வாக்குரிமை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அவர் அதைக் கொண்டு வருகிற நேரத்தில் எச்.வி.காமத் என்ற உறுப்பினரும் மற்றும் பல சனாதனிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ‘இந்தியாவிலே இருக்கிறவர்களுக்குப் படிப்பறிவு இல்லை, அவர்களுக்கு ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஆற்றல் கிடையாது அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை அளித்தால் நல்ல அரசாங்கத்தை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது’ என்று எதிர்த்தார்கள். அவர்களுக்கு எந்த சமத்துவக் கோட்பாட்டின்மீதும் நம்பிக்கை இல்லை, அதனால்தான் எதிர்த்தார்கள். ஆனால் நல்ல வேளையாக அந்த அவையில் இருந்த ஜவகர்லால் நேரு போன்றவர்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்றவர்கள், ஜனநாயக சக்திகள் எல்லோரும் புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துக்கு ஆதரவாக நின்று அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.  

அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துகிற நேரத்தில் இதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்திப் பேசினார். ‘இந்த நாட்டிலே இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக ஒரு அரசியல் சமத்துவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு எல்லாவற்றுக்கும் ஒரே மதிப்பு என்ற கோட்பாட்டின் மூலமாக அரசியல் சமத்துவத்தை இங்கே அறிமுகப்படுத்தி இருக்கிறேன்’ என்று கூறினார். வாக்குரிமை பெற்றவர்களுக்கு இடையே எந்த பேதமும் கிடையாது. இந்து வாக்குக்கு ஒரு மதிப்பு இஸ்லாமியர் வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற பேதம் கிடையாது. ஆணுடைய வாக்குக்கு ஒரு மதிப்பு பெண்ணுடைய வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற பேதம் கிடையாது. ஏழையின் வாக்குக்கு ஒரு மதிப்பு பணக்காரனுடைய வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற பேதம் கிடையாது. எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்கிற சமத்துவத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று அம்பேத்கர் அழுத்தந்திருத்தமாக எடுத்துக்கூறினார். அந்த சமத்துவக் கோட்பாடு தான் சனாதனிகளுக்கு ஏற்க முடியாததாக இருக்கிறது. அதைத்தான் அழித்துவிடவேண்டும் என்று பார்க்கிறார்கள். நமக்கெல்லாம் வாக்குரிமை இருக்கிற காரணத்தினாலே தான் சனாதன சக்திகள் இங்கே தாங்கள் விரும்பிய ஆட்சியை ஏற்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றி விட்டால் தங்கள் விருப்பம் போல இந்த நாட்டை ஆளலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்து ராச்சியத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று கனவு கண்டார்கள். ஆனால் அதைத் தடுத்து நிறுத்தியது அரசியலமைப்புச் சட்டம் தான். அவர்களுடைய சனாதனக் கோட்பாட்டிற்கு எதிராக சமத்துவம் என்ற கோட்பாட்டை நாட்டினுடைய உயிர் நாடியாக மாற்றியது அரசியலமைப்புச் சட்டம் தான். அதைச் செய்தவர் அம்பேத்கர். அதைத்தான் இங்கு இருக்கிற சனாதனிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் அழித்தொழிக்கப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். நம்முடைய குடியுரிமையைப் பறித்துவிட்டால் வாக்குரிமையையும் பறித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். 

இங்கே போராடுகிற சகோதரிகள் ஒவ்வொருவருடைய பாதத்தையும் தொட்டு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய போராட்டம் உங்களுக்கான தனிப்பட்ட சலுக்கைக்கான போராட்டம் அல்ல. 26 நாட்கள் தொடர்ந்து இங்கே போராடுவது இங்கேயுள்ள முஸ்லிம் பெண்களுக்கு எதுவும் சலுகை வேண்டும் என்பதற்காக அல்ல, இந்த நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக, இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதற்காக, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக நீங்கள் போராடுகிறீர்கள். உங்கள் போராட்டம் தான் இந்தியாவிலுள்ள மற்றவர்களையும் இப்படியான போராட்டத்தில் இறங்க வைத்தது. இல்லாவிட்டால் இந்த அளவுக்கு எதிர்ப்பு வந்திருக்காது. காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்தார்கள் அப்போது பெரிய போராட்டம் எதுவும் வெடிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் மூலமாக அயோத்தி வழக்கில் தீர்ப்பைப் பெற்றார்கள். அப்பொழுதும் எந்த எதிர்ப்பும் வரவில்லை. உச்சநீதிமன்ற வரலாற்றில் இவ்வளவு காலம் நீடித்த ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு யார் இந்தத் தீர்ப்பை எழுதியவர்கள் என்பதைக் கூட குறிப்பிடாமல், பெயரே இல்லாமல் வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற வரலாற்றில் இப்படி தீர்ப்பு சொல்லப்பட்டது இதுதான் முதல்முறை. இந்தத் தீர்ப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக இருந்திருந்தால் அதை எழுதிய நீதிபதிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டி இருப்பார்கள். அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு மனநிறைவை அளிக்கவில்லை என்பதைத்தான் பெயரில்லாமல் வெளியிட்ட முறையின் மூலமாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. தீர்ப்பில் என்ன சொன்னார்கள்? பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று சொன்னார்கள், அந்த மசூதி எந்தவொரு இந்துக் கோயிலையும் இடித்து அதன்மீது கட்டப்பட்டது அல்ல என்பது உண்மைதான் என்று சொன்னார்கள். இப்படி எல்லாம் சொல்லிவிட்டு இறுதியில் என்ன சொன்னார்கள் என்றால் ‘ இடித்தவர்களிடமே அந்த இடத்தை ஒப்படைத்து விடுங்கள். முஸ்லீம்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் எங்காவது தருவார்கள், அதில் மசூதி கட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இப்படி ஒரு மோசமான தீர்ப்பு வந்தபோது கூட நாட்டில் மிகப்பெரிய போராட்டமோ, எதிர்ப்போ எழவில்லை. அதுதான் அவர்களுக்கு இந்தத் துணிச்சலைத் தந்தது. அந்த துணிச்சலில்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் கொண்டுவந்தார்கள். இதுவும் எப்படி எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும் என்று நினைத்தார்கள். ஆனால் இன்றைக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. அதற்குக் காரணம் நாடு முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் போராட்ட களத்தில் இறங்கியதுதான். இஸ்லாமிய பெருமக்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல, எந்த இஸ்லாமிய பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்று நினைத்தார்களோ அவர்கள் எல்லாம் இன்றைக்கு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். லட்சக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள். அதனால்தான் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயக இயக்கங்களுக்கு உருவாகி இருக்கிறது. அந்த மகத்தான பணியைச் செய்ததற்காக உங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

(10.03.2020 அன்று இரவு 8.30 மணியளவில் வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் போராட்ட களத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)