ராணுவ ஒதுக்கீட்டைக் குறைத்து சுகாதாரத் துறைக்கு ஒதுக்குங்கள்- ரவிக்குமார்

Views : 212

பதிவு செய்த நாள் 31-Mar-2020

ராணுவ செலவைக் குறைத்து ‘கொரோனா ஊரடங்கால்’ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்! 

- ரவிக்குமார்


இந்திய அரசு 2020-21 பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கென ஒதுக்கியுள்ள நிதியைக் குறைத்து அதை ‘கொரோனா ஊரடங்கால்’ பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்கும், பொது சுகாதாரத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

உலகில் பாதுகாப்புத் துறைக்கென்று அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது . அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியாவுக்கு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிக அளவில் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. 2020 21 பட்ஜெட்டில் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்டது 4,71,378 ( நான்கு லட்சத்து எழுபத்தொன்றாயிரத்து முன்னூற்று எழுபத்தெட்டு) கோடியாகும்.

பாதுகாப்பு உபகரணங்களை அயல்நாடுகளிலிருந்து வாங்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தேசபக்தியை வைத்தே அரசியல் செய்யும் பாஜக ஆட்சியில் 2014 - 15 இல் வாங்கப்பட்ட தளவாடங்களில் 39.4 % அயல் நாடுகளிலிருந்து வாங்கப்பட்டவையாகும். 2018 -19 இல் அது 48.5 % ஆக உயர்ந்திருக்கிறது. 

அயல்நாடுகளிலிருந்து அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்குவது இந்தியாவின் பாதுகாப்புக்கே சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக் கொள்கை’ உள்நாட்டு தளவாட உற்பத்திக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று அறிவித்தது. ஆனால் அது இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. 

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% ஆகும். மத்திய அரசின் செலவினங்களில் இது 15.5% ஆக இருக்கிறது. அதே நேரத்தில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு இதை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவாகும். 2020 -21 பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டது 67,112 கோடி மட்டுமே. இது ஜிடிபி இல் (உள்நாட்டு மொத்த உற்பத்தியில்) 0.5% கூட இல்லை. இவ்வளவு குறைந்த தொகையை வைத்துக்கொண்டு கொரோனா என்னும் தேசிய பேரிடரை இந்திய சுகாதாரத்துறை எதிர்கொள்ள முடியாது. 

2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 25020 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 5363 கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்களும் இருந்தன ( https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=118617) . 2018 ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள் 29,899 கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்கள் 

5,568. பாஜகவின் ஆட்சி நடந்த அந்த நான்கு ஆண்டுகளில் துவக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 4879; கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்கள் வெறும் 205 மட்டும் தான்.(https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1539877)

2018 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 6430 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூடுதலாகத் தேவைப்படுவதாகவும், 32900 துணை சுகாதார மையங்கள் கூடுதலாக வேண்டுமென்றும்; 2188 கம்யூனிட்டி ஹெல்த் செண்டர்கள் தேவையென்றும் மதிப்பிடப்பட்டது. அவற்றை உருவாக்குவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அக்கறை காட்டவே இல்லை. அதற்காக நிதி இருக்கவும் இல்லை. கொரோனாவை எதிர்த்துப் போராட முடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

இப்போது போர் மூளக்கூடிய ஆபத்து எதுவும் இல்லை. எனவே பாதுகாப்புத் துறையை நவீனப் படுத்துவதற்கென்று ஒதுக்கீடு செய்திருக்கும் தொகையையாவது சுகாதாரத் துறைக்கு திருப்பிவிட வேண்டும். அதைக்கொண்டு மக்களுக்கான நிவாரண உதவிகளையும், கொரோனாவை எதிர்கொள்வதற்கான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியையும் மத்திய அரசு செய்யவேண்டும்.