ரொமிலா தாப்பரின் அறிவுலகத் தீண்டாமை - ரவிக்குமார்

Views : 557

பதிவு செய்த நாள் 13-Dec-2020


1916 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி தான் ’இந்தியாவில் சாதிகள்’ என்ற ஆய்வுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மானிடவியல் கருத்தரங்கில் அம்பேத்கர் சமர்ப்பித்தார். அம்பேத்கர் தனது இருபத்தைந்து வயதில் அந்த ஆய்வுரையை அளித்தார். அது ஒரு கட்டுரையாக மட்டுமில்லாமல் அவருடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளை ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு கருத்தாக்கமாக மாறியது. 1916 இல் இந்த ஆய்வுரையை நிகழ்த்துகிறார். அதிலிருந்து 16 ஆண்டுகளில் 1932 இல் இந்திய அரசியலில் மிக முக்கியமான நிகழ்வான பூனா ஒப்பந்தம் என்பது அவரால் போடப்படுகிறது. இடைப்பட்ட 16 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கியமான பிரச்சனையாக தலித் மக்களின் பிரச்சனையை மாற்றக்கூடிய ஆற்றல் அம்பேத்கருக்கு இருந்தது.அந்த காலத்தில் இந்திய அளவில் வலுவான அரசியல் சக்தியாக தலித் மக்கள் இருக்கவில்லை. ஒருசில மாநிலங்களில் தலித் மக்கள் அரசியல் கட்சிகளை நடத்திவந்த போதிலும் நாடு தழுவிய பெரிய இயக்கமாக அவர்கள் திரட்டப்படவில்லை. ஆனாலும் தனது அறிவாற்றல் மூலமாக தலித் மக்களின் பிரச்சனையை நாட்டின் முதன்மையான பிரச்சனையாக அவர் மாற்றிக் காட்டினார். அந்த 16 ஆண்டுகளில் அவர் தனது ஆய்வுகளை முடித்து டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.மஹத் சத்தியாகிரகத்தை நடத்தி தலித் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் என்பதை நிரூபித்தார். ’மூக் நாயக்’ ’பஹிஷ்க்ரித் பாரத்’ என்ற இரு பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்தினார். மூன்றாவதாக ஜனதா என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். கொஞ்சகாலம் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியாவில் சாதிகள் எழுதப்பட்ட 1916 க்கும் ’சாதி ஒழிப்பு’ எழுதப்பட்ட 1936 க்கும் இடையிலான 20 ஆண்டுகள் அம்பேத்கர் என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் மிக முக்கியமான ஆண்டுகளாகும்.

இந்தியாவில் சாதிகள் என்ற இந்த ஆய்வுரையை நிகழ்த்தியதற்குப் பிறகு அவரது கவனம் பொருளாதார ஆய்வுகளில் மூழ்கிக் கிடந்தது. அதன்பிறகு ’சாதி ஒழிப்பு’ என்கிற தலைப்பிலான அவரது நிகழ்த்தப்படாத உரை 1936 ஆம் ஆண்டில் நூலாக வெளியிடப்படுகிறது. அந்த உரையின் மூன்றாவது பதிப்பு 1944 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் பதிப்பில் ’இந்தியாவில் சாதிகள்’என்ற தனது ஆய்வுரையை இணைத்து விரிவுபடுத்திப் பதிப்பிக்கவேண்டும் என அம்பேத்கர் விரும்பினார்.ஆனால் அவரது அரசியல் பணிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே பழைய வடிவிலேயே அந்தப் பதிப்பு வெளியானது. அதை வருத்தத்தோடு அம்பேத்கர் அந்த மூன்றாவது பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அதிலிருந்து இந்தியாவில் சாதிகள் என்ற ஆய்வுரையும் சாதி ஒழிப்பு என்ற அவரது புகழ்பெற்ற உரையும் பொருள் அளவில் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.  

அரசமைப்புச் சட்ட அவையில் அவர் பேசியதாக இருந்தாலும் சரி அவர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, சட்ட அமைச்சராக இருந்து அவர் எடுத்த நடவடிக்கைகளானாலும் சரி எல்லாவற்றிலும் அவரை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சனை சாதி பிரச்சனைதான்.அந்தப் பிரச்சனையின் தோற்றம் எதுவென்று பார்த்த ஆய்வுதான் ’இந்தியாவில் சாதிகள்’. இந்த ஆய்வை மானிடவியல் துறையில் அவர் முன்வைத்திருந்தாலும் கூட அந்தத் துறையையும் தாண்டி பல்வேறு தளங்களில் அது பொருத்திப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. தலித் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான அம்பேத்கரின் அரசியல் நடவடிக்கைகளுக்கான தெளிவை இந்த ஆய்வுதான் அவருக்கு வழங்கியது.  

’சாதி ஒழிப்பு’ என்ற அம்பேத்கரின் உரையைப் பற்றி ஏராளமான விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற இந்த ஆய்வுரையைப்பற்றி பெரிய அளவுக்கு விவாதம் எதுவும் நடந்ததில்லை. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்ற அவரது உரை அரசியல் சார்ந்ததாக தீவிரத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் இந்த உரையோ முழுக்க முழுக்க மானிடவியல் துறை சார்ந்த ஆய்வுரையாக இருக்கிறது. அதில் தனது ஆய்வு முடிவுகளாக பின்வரும் கருத்துகளை அம்பேத்கர் தெரிவித்தார்: “1) இந்துக்களுக்குள்ளே பல்வேறுவித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடையே ஆழ்ந்தபண்பாட்டு ஒருமை உள்ளது. 2) பெரியதாக உள்ள பண்பாட்டுப்பகுதிகளின் சிறுசிறு தொகுதிகளே சாதிகள். 3) தொடக்கத்தில் ஒரு சாதியே இருந்தது. 4) பிறரைப் பார்த்துப் "போலச்செய்தல்" மூலமும், ’சாதி விலக்கு’ செய்யப்பட்டதன் மூலமும் வர்க்கங்கள் அல்லது வகுப்புகள் சாதிகளாயின. இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி அடுத்த ஆண்டிலேயே அது மதிப்புவாய்ந்த ஆய்விதழான இண்டியன் ஆன்டிகுரி ( Indian Antiquary, May ,1917 ) என்ற இதழில் வெளியிடப்பட்டது.

அம்பேத்கர் இந்த ஆய்வுரையை சமர்ப்பித்தற்குப் பின்னால் அந்தத் துறையில் மிகப்பெரிய மானிடவியல் அறிஞர்கள் ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அயல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். இப்போது இந்தியாவில் சாதிப் பிரச்சனையைப் பற்றி எந்தவொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும், யார் ஆய்வுசெய்தாலும் அவரது பார்வையை வடிவமைக்கக்கூடியதாக இருப்பது மேலைநாட்டு ஆய்வாளர்களின் ஆய்வுகள்தான். ஆனால் அந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் எந்த அளவுக்கு சாதி குறித்த அம்பேத்கருடைய கருத்தாக்கத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள் என்பது முக்கியமான கேள்வி. சாதிப் பிரச்சனை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் பெரும்பாலும் அம்பேத்கருடைய எந்த ஒரு கருத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தது இல்லை. உதாரணமாகச் லூய் துமோனுடைய ‘ஹோமோ ஹயரார்கிகஸ்’ என்ற ஆய்வை சுட்டலாம். லூய் துமோன் அமைப்பியல் மானிடவியலாளராக இடதுசாரி சார்புகொண்டவராக அறியப்படுபவர். அவரது நூல் மானிடவியல் துறை ஆராய்ச்சி மாணவர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நூலாக விளங்குகிறது. அம்பேத்கருடைய மறைவுக்குப் பிறகுதான் துமோன் அதை பிரெஞ்சு மொழியில் எழுதுகிறார். அதற்குப் பிறகு ஆங்கிலத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டது. 1999 இல் மறுபதிப்பு கூட வந்திருக்கிறது. அந்த நூலில் போகிறபோக்கில் ஒரு இடத்தில் மட்டும்தான் அம்பேத்கரைப் பற்றி துமோன் குறிப்பிடுகிறார். ‘அம்பேத்கர் உள்ளிட்ட தீண்டாத மக்களின் தலைவர்கள் சாதிப் பிரச்சினையைக் கையாள்வதில் தோல்வி அடைந்தார்கள்’ என்று காந்தி பற்றிய ஒரு நூலில் இருக்கிற மேற்கோளை எடுத்து துமோன் பயன்படுத்தியிருக்கிறார்.

லூய் துமோன் அகமண முறை பற்றி தனது நூலில் பேசி இருக்கிறார். ஆனால் அவர் அம்பேத்கர் கூறிய கருத்துகளைத் தனது நூலில் விவாதிக்கவில்லை. எந்தவொரு கருத்தாக்கத்தை அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்து தனது ஆய்வுரையை 1916 இல் முன்வைத்தாரோ அதே பொருளைப்பற்றி ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்கள் தொடர்ந்து அம்பேத்கரைப் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள். துமோன் மட்டுமல்ல சாதி பிரச்சனை குறித்து ஆய்வுகளைச் செய்த ஆந்த்ரே பெதேய் ,எம்.என்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல அறிஞர்களும் அம்பேத்கரின் எழுத்துகளைப் படித்ததற்கான தடயமே அவர்களது நூல்களில் இல்லை.  

’அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் சமூகத் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டார், இறந்த பிறகு அரசியல் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டார்’ அம்பேத்கருக்கு எதிராக அரசியல் தீண்டாமை, சமூகத் தீண்டாமை என்பதைத் தாண்டி அறிவுலகத் தீண்டாமையும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பற்றி ஆய்வு செய்த அத்தனை மேலைநாட்டு அறிஞர்களையும் பீடித்திருக்கிற ஒரு நோயாக ‘அறிவுலகத் தீண்டாமை’ என்பது மாறி இருக்கிறது.அயல்நாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல இந்தியாவில் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற பெருமையைப்பெற்றவர்கள்கூட இந்த அறிவுலகத் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள்.  

ரொமிலா தாப்பர் நமது சமகால வரலாற்றறிஞர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். மதவாதத் தாக்குதல்களை எதிர்ப்பதிலும், மனித உரிமை செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். அதனால் தற்போதைய சனாதன சக்திகளால் தாக்குதலுக்கு ஆளாகிவருபவர். அத்தகைய சிறப்புகளைக்கொண்ட ரொமிலா தாப்பரே அம்பேத்கரைப் புறக்கணிப்பது இந்த அறிவுலகத் தீண்டாமை எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.  

2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட The Past as Present என்ற நூலில் அம்பேத்கரை Dalit Lawyer எனக் குறிப்பிடுகிறார் ரொமிலா தாப்பர். இடதுசாரி வரலாற்றறிஞர் எனக் கொண்டாடப்படும் ரொமிலா தாப்பருக்கு தலித் வழக்கறிஞராக மட்டுமே அம்பேத்கர் தெரிவது அம்பேத்கரின் மதிப்பைக் குறைக்கவில்லை, மாறாக ரொமிலா தாப்பரின் அறியாமையையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த நூலின் பக்கம் 13 இல் அவர் எழுதியுள்ளவற்றை இங்கே தருகிறேன்:  

  " The writings of the Dalit lawyer B.R. Ambedkar on the history of the lower caste shudras and Dalits challenged what had been depicted by normative texts of the upper castes. He emphasized the view that caste was not just a social hierarchy but was linked to the reality of domination and subordination. The recognition of social inequality is not sufficient and one has to ask who labours and who has access to resources.” ( From: Thapar, Romila. “The Past as Present,பக்கம் 13, Aleph Book Company, New Delhi )