“எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய கூட்டம் ஒருமுறைகூட தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை”

Views : 283

பதிவு செய்த நாள் 18-Mar-2020“எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய கூட்டம் ஒருமுறைகூட தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை”


ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பாராளுமன்றத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் அளித்துள்ள தகவல்


இது குறித்து ரவிக்குமார் எழுப்பிய கேள்வியும் அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு: 


வினா: 

எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் 16 மற்றும் 17 இன் படி முதலமைச்சரின் தலைமையில் நடத்தப்பட்ட கண்காணிப்புக்குழு கூட்டங்கள் எத்தனை ? மாநில வாரியாக கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களின் தகவல்களைத் தரவும்.


கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மாநிலவாரியாகத் தரவும்


வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018 சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? 


என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார் . உடுகுறியிட்ட அந்த வினாவுக்கு இன்று சமூகநீதித்துறை அமைச்சர் அளித்த 

பதில் பின்வருமாறு:


எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995 ஆம் ஆண்டு விதி 16, மாநில அளவில் விழிப்பு கண்காணிப்புக் குழுவை முதலமைச்சர் தலைமையில் அமைக்க வேண்டும் என்றும், விதி 17 மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறுகின்றன. 


2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் மாநில அளவில் இத்தகைய கூட்டங்கள் நடத்தியது குறித்து அரசிடம் உள்ள விவரங்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன( மாநிலவாரியாக பட்டியல் தரபட்டுள்ளது) அதுபோலவே மாவட்ட வாரியாகவும் பட்டியல் தரப்பட்டுள்ளது.


எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989, கடந்த 2018 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்டம் 20.08. 2018 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்வதற்குமுன் விசாரணை என்பது தேவையில்லை. ஒருவரை கைது செய்வதற்குமுன் மேலதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அதில் 18 A என்ற புதிய சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 


இந்த சட்டத் திருத்தத்தின் பிரதி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடந்த 10.9 .2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக தேசிய அளவில் சமூகநலத்துறை அமைச்சர் தலைமையின்கீழ் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அது அடிக்கடி கூடி இந்த சட்டம் மாநிலங்களில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறது. தேசிய கமிட்டி இதுவரை 25 கூட்டங்களை அவ்வாறு நடத்தியுள்ளது. அந்த கமிட்டியின் கூட்டம் கடைசியாக கடந்த 09.01.2020 அன்று நடந்திருக்கிறது. “ என்று அமைச்சர் கூறியுள்ளார். 


அமைச்சர் அளித்துள்ள அட்டவணையில் உள்ள விவரங்களைப் பார்க்கும்போது முதலமைச்சர் தலைமையிலான கண்காணிப்புக் குழு கூட்டம் தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்களில் நடைபெறவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. 


2016ஆம் ஆண்டு மூன்றே மூன்று மாநிலங்களில் மட்டும்தான் இந்த கூட்டம் நடந்திருக்கிறது. ஹரியானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே இந்த கூட்டங்கள் முதலமைச்சரின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளன.


 2017 ஆம் ஆண்டு சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர் தலைமையில் கூட்டங்கள் நடந்துள்ளன.


2018 ஆம் ஆண்டு அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சண்டிகர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த கூட்டம் நடந்துள்ளது.


இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு முறை கூட முதலமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நடத்தப்பட வேண்டிய கண்காணிப்புக்குழு கூட்டங்களும் கூட எல்லா மாநிலங்களிலும் சரிவர நடத்தப்படவில்லை என்பது அமைச்சரின் பதில் மூலமாக தெரியவந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம், நாகாலாந்து, சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, அந்தமான் நிகோபர் டையூ டாமன் ,டெல்லி , லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகியவற்றில் மாவட்ட அளவிலான கூட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறைகூட நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.


எஸ்சி எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதற்கு மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் மெத்தனமே முதன்மையான காரணமாகும். விதிகளை உருவாக்கி விட்டால் மட்டும் போதாது மத்திய அரசு இந்த விதிகளை சரியான முறையில் செயல்படுத்தும் படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இதற்கென்று சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு இதை சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு செயல்படுத்த வேண்டும்.