விழுப்புரம் நகராட்சி தொகுதி மறுசீரமைப்பு குறித்த முன்மொழிவுகள்

Views : 467

பதிவு செய்த நாள் 18-Feb-2020

விழுப்புரம் நகராட்சி தொகுதி மறுசீரமைப்பு குறித்து விழுப்புரம் எம்பி ரவிக்குமாரால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட முன்மொழிவுகள்

18.02.2020

பெறல்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம்

வணக்கம்!

பொருள்: விழுப்புரம் நகராட்சி தொகுதி மறுசீரமைப்பு குறித்த முன்மொழிவுகள்

விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் சுமார் 1.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் அவர்கள் 42 வார்டுகளாக தற்போது பிரிக்கப்பட்டுள்ளனர். அப்படி பிரிக்கும்போது புவியியல் ரீதியான தொடர்ச்சியும்; வார்டுகளுக்கிடையே வாக்காளர் எண்ணிக்கையில் சமநிலையும்; மறுசுழற்சி முறையும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.சமூகரீதியாகவும் பாலினரீதியாகவும் பாகுபாடில்லாமல் இந்த மறுவரையறை செய்யப்படவேண்டும். ஆனால் தற்போது செய்யப்பட்டுள்ள வார்டு மறுசீரமைப்பில் இந்த அம்சங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறேன்.

வார்டுகளில் வாக்காளர்கள் சமநிலையற்ற நிலை

விழுப்புரம் நகராட்சியில் தற்போது உள்ள வாக்காளர்களை 42 வார்டுகளாக சமமாக பிரித்தால் ஒவ்வொரு வார்டிலும் சுமார் 2500 வாக்காளர்கள் இருக்க வேண்டும். தற்போது பிரிக்கப்பட்ட வார்டுகளில் 8 வார்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர்; 3000 முதல் 4000 வரை வாக்காளர் உள்ள வார்டுகள் 11 ; 2000 முதல் 3000 வாக்குகள் உள்ள வார்டுகள் 16 ;1000 முதல் 2000 உள்ள வார்டுகள் 4 ;ஆயிரத்தை விட க் குறைவாக வாக்காளர்கள் உள்ள வார்டுகள் 2. புதிதாக மாவட்டம் உருவாக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யும் நேரத்தில் இந்த அளவுக்கு வாக்காளர் எண்ணிக்கையில் சமச்சீரற்ற தன்மை இருந்தால் எதிர்காலத்தில் இது இன்னும் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுக்கும். எனவே இப்போதுள்ள நிலையை மாற்றி சுமார் 2500 வாக்காளர்கள் உள்ளவாறு இந்த வார்டுகள் பிரிக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் 

தற்போது உள்ள வார்டுகளில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. கடந்த மூன்று உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ச்சியாகப்  பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகள் இப்போது மறுசுழற்சி செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அவை இப்போதும் பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நகரின் வடகிழக்கு பகுதி முழுவதும் – 18 வார்டுகள்- பெண்களுக்காக தொடர்ச்சியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டிருப்பதாக ஐயம் எழுகிறது. எனவே இதை மாற்றி பெண்களுக்கான வார்டுகள் நகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் அமையுமாறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பாலின சமத்துவத்தைக் கடைபிடித்ததாக இருக்கும். 

புவியியல் ரீதியாக தொடர்ச்சியின்மை 

வார்டுகள் பிரிக்கப்பட்டதில் புவியியல் ரீதியான தொடர்ச்சியின்மை காணப்படுகிறது. வார்டு எண் 18 (பழைய எண் 32 ) மற்றும் வார்டு எண் 19( பழைய 31) ஆகியவை தற்போதைய மறுசீரமைப்பில் புவியியல் ரீதியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பகுதிகளைச் சேர்த்து வார்டுகளாக ஆக்கப்பட்டுள்ளன. இது எந்த விதத்திலும் நிர்வாகம் செய்வதற்கு உதவியாக இருக்காது. 

ஆதிதிராவிட மக்களுக்கு அநீதி 

வழுதரெட்,டி காந்தி நகர், மஞ்சு நகர், பாளையம், வழுதரெட்டி ஊர் ஆகியவை இணைந்து 2 வார்டுகளாக இருந்து வந்தன. அவை இப்பொழுது ஐந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அப்படி பிரிக்கும்போது வழுதரெட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு ஒரே ஒரு வார்டாகவும் மற்றவை 4 வார்டுகளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வழுதரெட்டி, மஞ்சு நகர், காந்திநகர் ஆகியவற்றை இணைத்து இரண்டு வார்டுகளாக சமமான வாக்காளர் எண்ணிக்கை கொண்ட வகையில் பிரித்து உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

அதுபோலவே ஜிஆர்பி தெரு இரண்டு வார்டுகளாக இருந்து வந்தது. அது ஒன்றாகச் சேர்த்து ஒரே வார்டாக இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சியில் இப்போது மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வார்டாக (4676 வாக்குகள்) அது இருக்கிறது. இந்த வார்டு மறுவரையறையைப் பார்க்கும்போது ஆதிதிராவிட மக்கள் கூடுதலாக வார்டுகளைப் பெற விடாமல் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. ஜி ஆர் பி தெரு மூன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அங்கிருக்கிற மக்கள் ஏற்கனவே எந்தவித அடிப்படை வசதிகளும்  அற்றவர்களாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் சென்று சேர வேண்டும் என்றால் அதை மூன்றாகப் பிரித்தால் தான் சாத்தியமாகும். 

பெயர் நீக்கம் செய்யப்படவேண்டும் 

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் முகவரி மாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.  

இவண் 


முனைவர் து.ரவிக்குமார்