உயர்த்திப் பிடிக்க வேண்டிய மொழிப் போர் தியாகங்கள் - ரவிக்குமார்

Views : 122

பதிவு செய்த நாள் 25-Jan-2023

தமிழ்நாட்டில் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ராசேந்திரன் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இந்தியை எதிர்த்த போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு முதலில் பலியானவர் ராசேந்திரன்தான். அவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. (கணிதம்) இரண்டாமாண்டு பயின்றுகொண்டிருந்தார். அவரது சொந்த ஊர் சிவகங்கை. அவரது தந்தை காவல் துறையில் காவலராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

போராட்ட அனுபவங்கள்

ராசேந்திரனின் சொந்த ஊரான சிவகங்கையில் அவரது நினைவாக ஏதும் உள்ளதா, அவரது உறவினர்கள் இப்போதும் அங்கு வாழ்கிறார்களா என அவரது 50ஆவது நிணைவு ஆண்டில் அங்குள்ள நண்பர்கள் மூலம் விசாரித்தேன். அப்படியொன்றும் இல்லை என்றார்கள். ராசேந்திரனின் உறவினர்களையும் கண்டறிய முடியவில்லை என்று கூறினார்கள். அந்தப் போராட்டத்தில் முனைப்போடு பங்காற்றியவரும் முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணனிடமும், ஓய்வுபெற்ற பேராசிரியர் திருமாவளவனிடமும், அந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததற்கும் அடுத்த ஆண்டில் அங்கு படிக்கச் சென்ற அரணமுறுவலிடமும் 22.01.2015 அன்று அந்தப் போராட்ட அனுபவங்களைக் கேட்டறிந்தேன்.

ஒன்றிய அரசின் கட்டாய இந்திக் கொள்கையை எதிர்த்து 1965இல் தமிழ்நாடெங்கும் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டத்தின் அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். “அப்போது சி.பி.ராமசாமி அய்யர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். பேராசிரியர்கள் என்றாலே மாணவர்கள் அஞ்சி நடுங்குவார்கள். குடியரசு தினமான ஜனவரி 26க்கு மறுநாள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சிதம்பரம் நகரை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டோம். எங்களைக் காவல் துறையினர் மறித்தார்கள். அவர்களது தடுப்புகளைத் தாண்டிக்கொண்டு போக முயன்றோம். அப்போது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கற்களை எடுத்து போலீஸ்காரர்கள் மீது வீசத் தொடங்கிவிட்டார்கள். அதனால் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. அதை எதிர்பார்த்திருந்த நாங்கள் தயாராக வைத்திருந்த வெங்காயத்தைப் பிழிந்து கண்களில் விட்டுக்கொண்டு போலீஸாரை எதிர்த்துப் போராடினோம். போலீஸார் விரட்டியபோது மாணவர்கள் வழி தெரியாமல் ஒரு முட்டுச் சந்துக்குள் நுழைந்துவிட்டார்கள். மேலே போக வழியின்றித் திரும்பிவந்த மாணவர்களை போலீஸ்காரர்கள் தலையிலேயே தடியால் அடித்தார்கள். அந்தத் தடியடியில் பல மாணவர்களுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. அதன் பின்னர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போது ராசேந்திரன் சிலை வைக்கப்பட்டிருக்கிறதே அதற்கு முன்னால் 100 அடி தூரத்தில் ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழேதான் குண்டடிபட்டு ராசேந்திரன் விழுந்து கிடந்தார். தமிழ் படித்துக்கொண்டிருந்த மாணவரான நெடுமாறன் தோளில் குண்டடிபட்டு ரத்தம் பீறிட ஓடினார். நாங்களெல்லாம் சிதறி ஓடினோம்” எனப் பேராசிரியர் திருமாவளவன் கூறினார்.

“அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடந்ததது. தஞ்சையில் ம.நடராசன் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். பெ.சீனுவாசன், காளிமுத்து, எல்.கணேசன் முதலானவர்களின் பணி முதன்மையானது. நாங்கள் தயாரித்த துண்டறிக்கைகள் ஆயிரக்கணக்கில் தமிழ்நாடு முழுதும் பரப்பப்பட்டன. பெருஞ்சித்திரனாரும், இறைக்குருவனும் எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருந்தனர். பெங்களூரிலும் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அங்கு ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில் மேற்கு வங்கத்திலிருந்தும்கூட மாணவர்கள் வந்து கலந்துகொண்டனர்” என்று க.ப.அறவாணன் அந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.

அண்ணாவின் வலியுறுத்தல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குண்டடிபட்டு வீழ்ந்த ராசேந்திரனின் உடல் பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. “ராசேந்திரனின் நினைவு நாளில் ஆண்டுதோறும் அங்கு சென்று மாணவர்கள் மரியாதை செய்வது வழக்கம். அங்கு படிக்கும்போது நானும் அப்படிப் போயிருக்கிறேன்” என அரணமுறுவல் சொன்னார்.

இதில் 1969ஆம் ஆண்டு ராசேந்திரனுக்கு சிலை அமைக்கப்பட்டது. அப்போது நினைவு மலர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நினைவாக ஜனவரி 25ஆம் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக திமுகவும் பிற கட்சிகளும் கடைப்பிடித்துவருகின்றன. 1965 ஜனவரி 26ஆம் தேதி நடக்கவிருந்த போராட்டம் ஒரு நாள் முன்னதாக அந்த நாளில் துவக்கப்பட்டு எராளமானோர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், 1964ஆம் ஆண்டு அந்த நாளில் கீழப் பழூர் சின்னசாமி என்ற திமுக தொண்டர் திருச்சியில் தீக்குளித்து தியாகியானார். மொழிப் போரில் தீக்குளித்த முதல் இளைஞர் அவர்தான். அறிஞர் அண்ணாவும் பிற போராட்டக்காரர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை

இந்தி எதிர்ப்புப் போரில் 1939ஆம் ஆண்டு முதல் களப்பலியான நடராசனின் நினைவு நாளான ஜனவரி 15ஆம் தேதியும், 1965ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் முதல் பலியாகி தியாகியான ராசேந்திரனின் நினைவு நாளான ஜனவரி 27ஆம் தேதியும் நாடு தழுவிய அளவில் நினைவுகூரப்பட்டிருக்க வேண்டும்.

ராசேந்திரனின் நினைவு நாளான ஜனவரி 27 அன்று அண்ணாமலை நகரில் இருக்கும் ராசேந்திரனின் சிலைக்கு மட்டுமின்றி பரங்கிப்பேட்டையில் அவர் புதைக்கப்பட்ட இடத்துக்கும் சென்று அரசு சார்பில் வீரவணக்கம் செலுத்த உத்தரவிடவும், பரங்கிப்பேட்டையில் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். சிதம்பரம் நகரை அண்ணாமலை நகரோடு இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்துக்கு ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையையும் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்.