"தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்"

Views : 153

பதிவு செய்த நாள் 26-Jun-2025

திரு எல். இளையபெருமாள் கமிட்டிப் பரிந்துரையை நிறைவேற்றுக! 


“ இன்று (26.06.2025) திரு.எல். இளையபெருமாள் அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் ஆகும். இந்திய அளவில் எஸ் சி எஸ் டி மக்களுக்கான பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு அமைத்த முதல் ஆணையத்தின் தலைவர் அவர். 1969 ஆம் ஆண்டு அவர் அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். “அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும்” என்பது பரிந்துரைகளில் ஒன்று. அதன் அடிப்படையில்தான் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தை இயற்றினார். 


பஞ்சாயத்து அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் அவருடைய பரிந்துரைதான். பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயறேஅப்பட்டபோது அதில் எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.


1950 இல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக அது அறிவித்தது. 75 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்னும் தீண்டாமை என்பது கிராமப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் நிலவவே செய்கிறது. இதற்குத் தீர்வாக அவர் ஒரு பரிந்துரையை முன் வைத்திருந்தார். “தீண்டாமையை ஒழிக்கத் தவறும் ஊராட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கக் கூடாது” என்பது அவரது பரிந்துரை. குஜராத் மாநிலத்தில் அப்போது நடைமுறையில் இருந்த சட்டம் அந்த விதியை வைத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே இளையபெருமாள் கமிட்டி அந்தப் பரிந்துரையை முன் வைத்தது. உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தைப் பரவலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை அதிகாரப் படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். திரு எல்.இளையபெருமாள் அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை உருவாக்கியிருக்கிறார். தீண்டாமை நிலவும் ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற இளைய பெருமாள் கமிட்டியின் பரிந்துரையையும் நடைமுறைப்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் “. 


இவ்வாறு நான் தெரிவித்தேன். 


( கள்ளக்குறிச்சியில் இன்று மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று ஒன்றிய அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன். 


கூட்டத்தின் துவக்கத்தில் மேற்கண்ட கருத்துக்களைப் பதிவு செய்தேன்) :